'புரட்சி தளபதி' விஷால் நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு 'மார்க் ஆண்டனி' என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில் எளிமையாக நடைபெற்றது.

'திரிஷா இல்லனா நயன்தாரா', 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. 

இதில் கதையின் நாயகனாக புரட்சித்தளபதி விஷால் நடிக்க, அவருக்கு ஜோடியாக 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படப்புகழ் நடிகை ரீத்து வர்மா நடிக்கிறார்.

 இவர்களுடன் எஸ் ஜே சூர்யா, தெலுங்கு நடிகர் சுனில், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அபினந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு 'இசை அசுரன்'  ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

 தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் தயாராகும் இந்த பான் இந்திய திரைப்படத்தை மினி ஸ்டுடியோ என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ். வினோத்குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

விஷால் - ஆர்யா இணைந்து நடித்த 'எனிமி' திரைப்படத்தை ஏராளமான பொருட்செலவில் தயாரித்து வெளியிட்டதில், வணிகரீதியான தோல்விக்காக, அப்பட தயாரிப்பாளர் வினோத்குமார் தயாரிக்கும் 'மார்க் ஆண்டனி' படத்திற்கு மீண்டும் கால்ஷீட் கொடுத்து நடிக்கிறார் புரட்சி தளபதி விஷால். 

இந்த முறை விஷால் 'ராசியான வில்லன் நடிகர்' என்ற பெயரை சம்பாதித்திருக்கும் எஸ். ஜே. சூர்யாவுடன் இணைந்திருப்பதால் இந்த படத்திற்கு திரையுலக வணிகர்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

'ஆக்சன்', 'சக்ரா', 'எனிமி', 'வீரமே வாகை சூடும்' என தொடர்ச்சியாக தோல்வி படங்களை வழங்கி வரும் விஷால், ஒரு கொமர்ஷல் வெற்றியை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், ஆதிக் ரவிச்சந்திரன் விவரித்த 'மார்க் ஆண்டனி' கதையை கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இந்தப் படம் நிச்சயமாக அனைத்து மொழிகளிலும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கலாம்.