சிறு வணிகங்களுக்கு உதவ ஐரோப்பிய ஒன்றியம் 60 மில்லியன் ரூபாவை மானியமாக வழங்குகிறது

By Digital Desk 5

06 May, 2022 | 01:22 PM
image

கொழும்பு - சுற்றுலாப் பிரயாணிகள் நாட்டிற்கு மீண்டும் வருவதற்கு ஆரம்பித்துள்ள நிலையில், சுற்றுலாத் துறையிலுள்ள சிறு வணிகங்கள் கொவிட் தொற்றுநோய்க்குப் பின்னரான மீட்சி மற்றும் வளர்ச்சிக்கான வலுவாக அத்திவாரத்தைக் கட்டியெழுப்புவதை விரைவுபடுத்த உதவும் வகையில், இலங்கையில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவும், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையும் தலா ரூபா 1 மில்லியன் பெறுமதியான முதல் மூன்று மானியங்களை வழங்கியுள்ளனர்.

 ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் கூடிய ‘சுற்றுலாத்துறை மீள்எழுச்சித் திட்டம்’ என்பதன் கீழ் அடுத்த இரண்டு மாதங்களில் 60 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் நிறுவனங்களுக்கு மானியங்கள் வழங்கப்படவுள்ளன.

சுற்றுலாத் துறையானது கொவிட்-19 தொற்றுநோயிலிருந்து படிப்படியாக மீட்சி கண்டு வருகிறது.

 ஆனால் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு மற்றும் நாட்டில் நிலவும் நெருக்கடியால் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.

 நிதிப் பற்றாக்குறையால் பல சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் தங்கள் வணிகத்தை மீண்டும் ஆரம்பிப்பதில் தாமதம் காட்டுகின்றன.

 இந்த மானியங்கள் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் தங்கள் செயல்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்கவும், சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள மறுமலர்ச்சியை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வதற்கும், எதிர்காலத்தில் மேலும் மீள்எழுச்சியுடன் செயல்படுவதற்கும் சிறந்த ஸ்தானத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் இலங்கைக்கான தூதுவரான மேன்மை தங்கிய டெனிஸ் சாய்பி அவர்கள் முதல் மானியங்களை வழங்கும் இந்நிகழ்வில் உரையாற்றுகையில், “சுற்றுலாத் துறையில் உள்ள சிறு வணிக நிறுவனங்கள் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், மானிய நிதி உட்பட பல முனைகளில் அவற்றுக்கு ஆதரவு தேவைப்படுகின்றது.

 நாட்டின் தற்போதைய கடினமான சூழ்நிலை மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஆகியவை உள்ளூர் சுற்றுலாத் துறையை மற்றொரு நிச்சயமற்ற நிலைமைக்கு தள்ளுகிறது.

 எனவே, குறுகிய காலத்தில் வணிகங்கள் தங்கள் செயல்பாடுகளை மீண்டும் நிலைநிறுத்தவும் எதிர்கால வளர்ச்சிக்கான வலுவான அத்திவாரத்தை இடவும் இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து செயல்படுகிறோம்.

 இதில் நிதி வசதி, வணிக அபிவிருத்தி மற்றும் வழங்கல் சங்கிலி ஒருங்கிணைப்பு ஆகியவை மிகவும் மீள்எழுச்சித்திறன் கொண்ட, நிலைபேண்தகு மற்றும் பாதுகாப்பு உணர்வுள்ள தொழிற்துறையைக் கட்டியெழுப்ப உதவும்,” என்று குறிப்பிட்டார்.

இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் சபைத் தலைவரான கிமர்லி பெர்னாண்டோ அவர்கள் கூறுகையில், “சுற்றுலாத்துறையில் 550,000 பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளதுடன், அவர்களில் பெரும்பாலோர் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிக முயற்சிகளில் பணி புரிவதுடன், 3 மில்லியனுக்கும் மேற்பட்டோர் சுற்றுலாத்துறையை நம்பியுள்ளனர்.

  இத்தொழில்துறை எதிர்கொள்ளும் சவால்களைத் தணிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் தொற்றுநோய் பரவ ஆரம்பித்த காலத்திலிருந்தே நாங்கள் ஒரு காத்திரமான அணுகுமுறையை முன்னெடுத்தோம். இந்தச் செயல்பாட்டிற்கு ஐரோப்பிய ஒன்றியம் எங்களுக்கு ஆதரவளித்துள்ளதுடன், தொழில்துறையில் மீள்எழுச்சித்திறனைக் கட்டியெழுப்புவதற்கும், உண்மையான தனித்துவமான அனுபவங்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கும் நாங்கள் கூட்டாக ஒரு பரந்த திட்டத்தை உருவாக்க அது உதவியுள்ளது,” என்று குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் உள்ள சுற்றுலாத்துறை சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்களிடமிருந்து 280 க்கும் மேற்பட்ட மானிய விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 

நிதியுதவிக்காக அவை தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு பல மட்டங்களில் பரிசீலனை ஆய்வு செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டன. வணிகத்தின் அளவு, பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களது வணிகங்களை மீண்டும் வளர்ச்சி பெறச் செய்யும் திட்டம் மற்றும் பணியாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளுதல் உட்பட, இதற்கு தகைமை பெறுவதற்கு பல்வேறு அளவுகோல்கள் உபயோகிக்கப்பட்டன. 

சுற்றுச்சூழல் நிலைபேண்தகைமைக்கான அவர்களின் அர்ப்பணிப்பு குறித்தும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்கள் ஆய்வு மதிப்பீடு செய்யப்பட்டன.

இந்த மானியங்கள், கொவிட்-19 தொற்றுநோய்க்குப் பின்னர் இலங்கையின் சுற்றுலாத்துறை மீட்சிக்கு ஆதரவாக ஐரோப்பிய ஒன்றியத்தின் 5.7 மில்லியன் யூரோ (ரூபா 1.3 பில்லியன்) முதலீட்டின் ஒரு பகுதியாகும்.

 சுற்றுலாத்துறை மீள்எழுச்சித் திட்டம் ஆனது ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த பாரிய உதவிப் பொதியின் கீழ் உள்ள முக்கியமான ஈடுபாடுகளில் ஒன்றாகும்.

 நாட்டில் தற்போதைய மற்றும் புதிய சுற்றுலாத்தலங்களில் வணிக முயற்சிகளை ஆரம்பிக்கும் கலாச்சாரத்தை வளர்க்கவும், பணியாளர்களைத் தக்கவைக்கவும் மற்றும் இழந்து போன திறமைசாலிகள் மீளவும் ஈர்த்து, திறன்களை மேம்படுத்தவும், தொழிற்படை மற்றும் வணிக ஆற்றல் கட்டியெழுப்பும் செயற்திட்டங்கள் சுற்றுலாத்துறை மீள்எழுச்சித் திட்டத்தின் முக்கிய கூறுகளாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோடிபதி பரிசுப்பொதியினை கொண்டுவரும் “கப்ருக” லொத்தரின்...

2022-09-26 15:47:17
news-image

”Smart Home’’ஐ அறிமுகம் செய்து உங்கள்...

2022-09-15 22:41:37
news-image

மிகவும் பிரபலமான வங்கி மற்றும் நிதி...

2022-09-02 13:00:40
news-image

இலங்கையில் ஆயிரம் குடும்பங்களுக்கு உணவளிக்க கைகோர்த்த...

2022-09-02 10:08:36
news-image

குணநலம் மிக்க வாழ்க்கையின் புதிய பயணத்திற்காக...

2022-09-01 13:57:33
news-image

தொலைக்காட்சி பாவனையாளர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்கும்...

2022-08-23 21:56:55
news-image

தேசிய Fuel Pass தளத்தை நடைமுறைப்படுத்த...

2022-08-24 16:19:12
news-image

செலான் வங்கி ஹேலீஸ் சோலருடன் கைகோர்த்து...

2022-08-22 20:53:25
news-image

2022 முதல் அரையாண்டில் நிலையான வருமான...

2022-08-16 12:13:13
news-image

வன்முறைக்கு எதிராக சிறுவர்களைப் பாதுகாக்க !...

2022-08-16 10:00:25
news-image

ISO தரச் சான்றிதழைப் பெற்றது பிரியந்த...

2022-08-08 13:16:57
news-image

LOLC நடைமுறைப்படுத்தும் 500 மில்லியன் ரூபாய்...

2022-07-26 14:54:18