(எம்.ஆர்.எம்.வஸீம் இராஜதுரை ஹஷான்)

விளைச்சல் வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முன்னெடுக்கப்படும்.

உர விநியோகத்திற்கு விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்தவும், விவசாயிகளுக்கு  நிவாரண அடிப்படையில் உரத்தை விநியோகிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என விவசாயத்துறை அமைச்சர் சானக வகும்பர சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றில் நேற்று இடம் பெற்ற கூட்டத்தொடரின் போது சிறுபோக விவசாய நடவடிக்கைகளுக்கு  விவசாயிகளுக்கு நிவாரண அடிப்படையில் உரம் வழங்கப்படுமா அல்லது  இலவசமாக உரம் வழங்கப்படுமா,பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நட்டஈடு எப்போது வழங்கப்படும்  என எதிர்க்கட்சி தலைவர் பிரேமதாஸ முன்வைத்த கேள்விக்கு மேற்கண்டவாறு பதிலளித்தார்.

சிறுபோக விவசாய நடவடிக்கைக்கு தேவையான சேதன பசளை மற்றும் சேதன திரவ உரம் ஆகியவற்றை விவசாயிகளுக்கு வழங்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன்,யூரியா உரத்தை இறக்குமதி செய்யும் பணிகளும் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

உலகில் தற்போது யூரியா உரம் உற்பத்தி மற்றும் பாவனை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் இருந்து 65 ஆயிரம் மெற்றிக்தொன் யூரியா உரத்தை இறக்குமதி செய்ய இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இறக்குமதி செய்யப்படும் யூரியா உரத்தை ஒரு ஹேக்கர் விவசாய காணிக்கு 25 கிலோகிராம் அடிப்படையில் வழங்க  எதிர்பார்த்துள்ளோம்.

கடந்த காலங்களில் விவசாய  விளைச்சல் வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முன்னெடுக்கப்படும். உரம் விநியோகஸ்தர்கள் அதிக விலைக்கு உரத்தை விற்பனை செய்வதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

உரம் விநியோகத்திற்காக விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்தவும்,விவசாயிகளுக்கு நிவாரண அடிப்படையில் உரத்தை விநியோகிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.