(எம்.மனோசித்ரா)
பாராளுமன்ற வளாகத்தில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது , பாராளுமன்ற உறுப்பினர்களின் வரப்பிரசாதங்களை மீறியதாகக் குறிப்பிட்டு கைது செய்யப்பட்ட 13 பேர் கடுவலை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் , யுவதிகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதையடுத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் பாராளுமன்ற சுற்றுவட்டம் முற்றுகையிடப்பட்டு பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதனால் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது. பெருந்திரளான மாணவர்கள் பாராளுமன்றத்திற்கு செல்லும் வீதியில் அமர்ந்திருந்த நிலையில், பாதுகாப்பிற்காக பொலிஸாரும் குவிக்கப்பட்டனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட குறித்த 13 பேரும் கடுவலை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது
இன்றைய தினம் பாராளுமன்றம் கூடவிருந்த நிலையில் நேற்று செவ்வாய்கிழமை இரவு குறித்த பகுதியில் பொலிஸாரினால் நிரந்தர காவலரண்கள் அமைக்கப்பட்டன. குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கமையவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது
இந்நிலையில் இன்று புதன்கிழமை பிற்பகல் இளைஞர் யுவதிகள் சிலர் பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன் போது கைது செய்யப்படுபவர்களை அழைத்துச் செல்லும் பஸ் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவுடன் குறித்த பகுதிக்கு வருகை தந்த மஹரகம பொலிஸார் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கைது செய்தனர்.

தாம் கைது செய்யப்படுவதற்கான காரணத்தை குறித்த இளைஞர் யுவதிகள் கோரிய போது , 'பாராளுமன்ற உறுப்பினர்களின் வரப்பிரசாதங்களை மீறி அவர்களுக்கு இடையூறு விளைவித்தமைக்கு எதிராகவே கைது செய்கின்றோம்' என்று அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்.
அதற்கமைய குறித்த இளைஞர் யுவதிகள் கைது செய்யப்பட்டு பொலிஸ் பஸ்ஸில் மஹரகம பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மஹரகம பொலிஸ் நிலையத்திற்கருகில் ஆர்ப்பாட்டம்
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மஹரகம பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செய்யப்பட்டதையடுத்து , அவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களின் பெயர்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஒன்று திரண்ட சட்டத்தரணிகள்
கைது செய்யப்பட்டவர்கள் மஹரகம பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சுமார் 2 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அதனையடுத்து அவர்கள் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதனையடுத்து இவர்களுக்காக முன்னிலையாவதற்காக கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் பெருந்திரளான சட்டத்தரணிகள் ஒன்று திரண்டனர்.
சட்டத்தரணிகள் சங்கம்
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து , 'அமைதியான முறையில் உரிமைகளுக்காக போராடுபவர்கள் கைது செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. உரிமைகளை பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்கள் தொடர்பில் இதனை விடவும் பொறுமையுடன் அதிகாரிகள் செயற்பட வேண்டும். அத்தோடு, போராட்டங்களும் அமைதியான முறையில் இடம்பெற வேண்டும்.' சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM