ஞாயிறு தரும் சுமை

Published By: Devika

04 May, 2022 | 04:33 PM
image

திங்கட்கிழமை காலை பொழுது தொடங்கும்போதே வாரத்தின் இறுதி நாட்கள் எப்போது வரும்? என்ற ஏக்கத்தோடும், எதிர்பார்ப்போடும் நாட்களை நகர்த்துபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். வாரம் முழுவதும் காத்திருக்கும் வார கடைசி நாள் வந்துவிட்டால் போதும். அவர்களிடத்தில் தனி மகிழ்ச்சி குடிகொள்ளும்.

வாரம் முழுவதும் அனுபவிக்கும் மன காயங்களுக்கு மருந்திடும் நாளாக அதனை கொண்டாடுவார்கள். 

ஞாயிற்றுக்கிழமை எப்போது வரும். ஓய்வெடுக்கலாம் என்று மற்றவர்கள் சிந்தித்துக்கொண்டிருக்கும்போது, பெண்களோ அன்று என்ன வேலைகளெல்லாம் இருக்கிறது என்று யோசிக்கும் நிலையில் இருப்பார்கள். சாதாரணமாகவே குடும்பத் தலைவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பாரமான நாள். அதைவிட வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தால் பாரம் இரட்டிப்பாகிவிடும். வாரம் முழுவதும் அவர்கள் ஒதுக்கி வைத்திருக்கும் இதர வேலைகளை ஞாயிற்றுக்கிழமை செய்து முடித்துவிடலாம் என்ற மனநிலையில் இருந்திருப்பார்கள். அதனால் குடும்ப பெண்களுக்கு ஞாயிற்றுக்கிழமை என்பது இன்னும் கொஞ்சம் சிக்கலானது. ஒருவருக்கொருவர் அனுசரித்து வேலைகளை பகிர்ந்து கொண்டால்தான் வேலைச்சுமையை குறைக்க முடியும்.

ஒரு குடும்பம் அழகாக நிர்வாகம் செய்யப்பட ஓய்வற்ற வேலை மட்டும் போதாது. பெண்களின் உடல் நிலையும், மனநிலையும் மிகவும் அவசியம். எனவே, ஞாயிற்றுக்கிழமை என்றால் பெண்களின் ஓய்வு பற்றி குடும்பத்தினர் சிந்திப்பது அவசியம். கூட்டுக்குடும்பத்தில் இதைவிட பெரியளவில் சிக்கல் இருக்கும். அன்று வீட்டு வேலைகள்தான் பிரதான நேரத்தை எடுத்துக்கொள்ளும். வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தாலும் அன்று நிச்சயமாக வீட்டில் ஓய்வெடுக்க முடியாது. ஓய்வு நாளில் ஓய்வுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும். ஏனெனில், உடல் நிலைமையையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது அதைவிட அவசியமானது.

இதற்கு தீர்வு தான் என்ன?

கணவன் - மனைவி இருவருமே வேலைகளை பகிர்ந்துகொள்வது நல்லது. இந்தந்த வேலையை பெண்கள்தான் செய்யவேண்டும் என்ற நிலையெல்லாம் இப்போது மாறிவிட்டது. ஆண்களும் பகிர்ந்து செய்தால்தான் பெண்களுக்கு பாரம் குறையும். 

பேப்பர், புத்தகங்கள் அடுக்கிவைப்பது, செடிக்கு தண்ணீர் ஊற்றுவது, துணிகளை மடிப்பது, பிரிட்ஜில் காய்கறிகளை அடுக்கி வைப்பது என்று குழந்தைகளுக்கு வேலைகளை கற்றுக்கொடுக்கலாம். இதனால் விடுமுறை நாட்களில் வீட்டில் ஒருவருக்கொருவர் அரட்டையடித்து அமர்க்களம் செய்வது குறைந்து, ஏதாவது வேலை செய்யும் பழக்கம் உண்டாகும். நம் வீட்டு வேலைகளை நாம்தான் செய்யவேண்டும் என்ற உணர்வு ஏற்படும். விடுமுறை நாட்களில் டி.வி. பார்ப்பது, வீடியோ கேம் விளையாடுவது போன்ற பழக்கவழக்கங்கள் குறையும்.

பல பெண்கள் கணவருக்கு சிரமம் கொடுக்கக்கூடாது என்று நினைத்து எல்லா வேலைகளையும் செய்வார்கள். பெண்கள் வேலைக்கு போய் குடும்பச் செலவு சுமையை குறைக்கும்போது ஆண்களும் அனுசரணையுடன் நடந்து கொள்ளலாமே. அப்படி செயல்பட்டால் ஞாயிற்றுக்கிழமை மகிழ்ச்சி இருவருக்கும் கிடைக்கும். அந்த மகிழ்ச்சி குடும்பத்துக்கு பல நல்ல விஷயங்களை கொண்டு வந்து சேர்க்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right