ஒரு தனித்துவ குரல் - சுனந்தா

By Nanthini

04 May, 2022 | 04:16 PM
image


(யோ. புரட்சி)

நட்சத்திர ஜன்னலில்
வானம் எட்டிப் பார்க்குதே
சிறகை விரித்துப் பறப்போம்
நம் உறவில்
உலகை அளப்போம்...

இந்தப் பாடல் ஒரு காலத்திலே இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன 'வானம்பாடி' ஒலிபரப்பில் தினமும் ஒலிக்கும். சரத்குமார், தேவயாணி நடிப்பில் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் வெளியான 'சூர்யவம்சம்' திரைப்படத்தில் "ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ..." பாடல் போல அப்படத்தில் வெளியான "நட்சத்திர ஜன்னலில்.." பாடலும் குடும்ப மகிழ்வையும் சவால்களின் வெற்றியையும் சுட்டிய பாடல். மனோ அவர்களோடு அப்பாடலை  இணைந்து பாடியவர் சுனந்தா அவர்கள்தான்.

அப்பாடலின் பெண்குரலை பின்னணிப் பாடகி சுஜாதா அவர்களுடையது என நினைத்தவர்களும் உண்டு. விக்ரமன் அந்தப் படத்தினை இயக்கியிருந்தார்.
சுசீலா, சித்ரா, ஜானகி என்போர் அறியப்பட்ட அளவுக்கு சுனந்தா எனும் பெயர் அறியப்படவில்லை. எனினும், இந்தப் பாடலை இவர்தான் பாடினார் எனச் சொல்கையில், "அட! நா வேற யாரோன்னு நெனைச்சேன்" என வியப்போர் அதிகம்.

பழைய பாடல்களில் "மலர்ந்தும் மலராத பாதிமலர் போல..." போன்ற தாலாட்டுப் பாடல்கள் பல பிரபலம். இடைக்காலப் பாடல்களில் இந்த தாலாட்டு உற்சாகமும் வலிமையும் மிக்கது.

மன்னவா மன்னவா
மன்னாதி மன்னன் அல்லவா?
இங்கு புன்னகை சிந்திடும்
சிங்காரக் கண்ணன் அல்லவா?
மழலைகள் யாவும் தேனோ
மரகத வீணைதானோ
மடி மேலே ஆடும் பூந்தேரோ
அன்னை மனம்தான்
பாடும் ஆராரோ

1993இல் வெளியான 'வால்டர் வெற்றிவேல்' திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் அந்தப் படத்திலேயே மிகச் சிறந்த பாடலாக கணிக்கப்பட்டது.

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத இன்னும் ஒரு பாடல்.
"செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே தேடி வரும் என் மனமே..."
இந்தப் பாடலை மனோ பாடியிருந்தார். அத்தோடு ஆஷா போஸ்லேயும் பாடியிருந்தார். இதே பாடலை சுனந்தாவும் பாடியிருந்தார். சுனந்தாவின் குரலில் இந்த பாடல் தவழ்ந்தபொழுது அதற்கென்று ஒரு தனித்துவம் காணப்பட்டது.

1987இல் 'எங்க ஊரு பாட்டுக்காரன்' திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றிருந்தது. கங்கை அமரன் பாடலை எழுதியிருந்தார். இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.
இளையராஜாவின் இசையில் வெளியான 'புதுமைப்பெண்' திரைப்படத்தில் ஜெயச்சந்திரன் அவர்களோடு இணைந்து சுனந்தா பாடிய இந்தப் பாடலும் காதல் ரசம் சொட்டும் இன்னுமொரு பாடல்.

காதல் மயக்கம்
அழகிய கண்கள் துடிக்கும்
ஆலிங்கனங்கள் பரவசம்
இங்கு அனுமதி இலவசம்
தன்னை மறந்த அனுபவம்
ரெண்டு கண்களின் அபிநயம்
தேகம் கொஞ்சம் சிலிர்க்கின்றதே
மெதுவாய்....

அதுபோல 'ஈழச்சூரியன்' எனும் இறுவட்டுக்காக ஈழ விடுதலைப் போராட்ட கால பாடல் ஒன்றினையும் சுனந்தா பாடியிருந்தார்.
'செவ்வந்தி' திரைப்படத்தில் பாடகர் ஜெயச்சந்திரன் அவர்களோடு இணைந்து சுனந்தா பாடிய இந்தப் பாடல் அப்போதும் சரி, இப்போதும் சரி வானொலிகளிலும் வீடுகளிலும் சமூக வலைத்தளங்களிலும் தொடர்ச்சியாக ஒலித்துக்கொண்டிருக்கின்ற பாடலாகிறது.

செம்மீனே செம்மீனே ஓங்கிட்ட சொன்னேனே
செவ்வந்தி பெண்ணுக்கு
சிங்கார கண்ணுக்கு
கல்யாண மாலை கொண்டு வாரேன்
மஞ்சள் தாலியும் குங்குமமும் தாறேன்.

இப்படி ஜெயச்சந்திரன் பாடுகின்றபோது சுனந்தா அவர்களின் குரல் இப்படி ஒலிக்கும்...

செம்மீனே செம்மீனே ஓங்கிட்ட சொன்னேனே
மலை சாதி பெண்ணுக்கு
மடல்வாழை கண்ணுக்கு
கல்யாண மாலை கொண்டு வா வா
மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா...

இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் வெளியான இந்தப் பாடல் இன்று வரை ஒலித்துக்கொண்டே இருக்கிறதே! இதில் வரும் பெண்குரலினை ஸ்வர்ணலதா அவர்களுடையது என நினைத்தோர் பலருண்டு.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'உழைப்பாளி' திரைப்படத்தில் "அம்மா அம்மா எந்தன் ஆருயிரே....." என்ற பாடல் சினிமாவில் வெளிவந்த அம்மா பாடல்களில் அதிமுக்கியமான இடத்தில் இருக்கிறது. இந்தப் பாடலை ஆண் குரலில் 'பாடும் நிலா' எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியிருந்தார். இந்தப் பாடலை பெண் குரலில் சுனந்தா பாடியிருந்தார். ஏற்கனவே "மன்னவா மன்னவா..." பாடலை பாடிய சுனந்தா அவர்களுக்கு "அம்மா அம்மா எந்தன் ஆருயிரே..." என்கிற அம்மா பாடலும் முக்கியமான இடத்தை கொடுத்துப் போனது உண்மை.

'சொல்லத் துடிக்குது மனசு' திரைப்படத்தில் இடம்பெற்ற "பூவே செம்பூவே உன் வாசம் வரும்..." என்ற பாடல் ஜேசுதாஸ் அவர்கள் பாடி மிகப் பிரபலமானது. அந்தப் பாடலை பெண் குரலில் பாடியிருந்தார் சுனந்தா. அவருக்கும் அதே இடம் கிடைத்திருந்தது.

தமிழ் சினிமாவில் ஜென்சி, உமா ரமணன் போன்ற தனித்துவமான பாடகிகள் அநேகர் உள்ளனர். அவர்களில் ஒருவர் சுனந்தா.

வாய்ப்புகள் குறைவெனினும், கிடைத்தவை எல்லாம் கிரீடங்களே. பாடல் ஆய்வினை செய்வோர், சினிமாப் பாடல்களை நுணுக்கமாக நோக்குவோர் சுனந்தா அவர்களுக்கான இடத்தினை தவறாமல் கொடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்