(என்.வீ.ஏ.)
அணிகள் நிலையில் முன்னிலையில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக மும்பை டி.வை. பட்டில் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற ஐ பி எல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் சகலதுறைகளிலும் மிகச் சிறப்பாக விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றது.
கெகிசோ ரபாடாவின் 4 விக்கெட் குவியலும் ஷிக்கர் தவான், பானுக்க ராஜபக்ஷ, லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்களும் பஞ்சாப் கிங்ஸை வெற்றிபெறச் செய்தன.
குஜராத் டைட்டன்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 144 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 4 ஓவர்கள் மீதமிருக்க 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 145 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
போட்டியின் 3ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 10 ஓட்டங்களாக இருந்தபோது மொஹமத் ஷமியின் பந்துவீச்சில் ஜொனி பெயார்ஸ்டோவ் (1) ஆட்டமிழந்தார்.
ஆனால், ஷிக்கர் தவானும் இலங்கை வீரர் பானுக்க ராஜபக்ஷவும் மிகத் திறமையாக துடுப்பெடுத்தாடி வேகமாக ஓட்டங்களைக் குவித்து அணியைப் பலப்படுத்தினர்.
அவர்கள் இருவரும் 60 பந்துகளில் 87 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது பானுக்க ராஜபக்ஷவின் விக்கெட்டை லொக்கி பேர்குசன் கைப்பற்றினார்.
பானுக்க ராஜபக்ஷ 28 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 40 ஓட்டங்களைக் குவித்தார்.
அதன் பின்னர் அதிரடியில் இறங்கிய தவான், லியாம் லிவிங்ஸ்டன் ஆகிய இருவரும் 4 ஓவர்களில் 48 ஓட்டங்களை விளாசி தமது அணியின் வெற்றியை இலகுவாக்கினர்.
தவான் 53 பந்துகளில் 8 பவுண்ட்றிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக 62 ஓட்டங்களுடனும் லியாம் லிவிங்ஸ்டன் 10 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகள் அடங்கலாக 30 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 143 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
எதிரணியினரின் பந்துவீச்சுகளை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட குஜராத் டைட்டன்ஸ் சார்பாக 4 துடுப்பாட்ட வீரர்கள் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
குஜராத் டைட்டன்ஸ் அதிரடியாக துடுப்பாட்டத்தை ஆரம்பித்த போதிலும் 3ஆவது ஓவரிலிருந்து விக்கெட்கள் சீரான இடைவெளியில் விழத் தொடங்கின.
ஆரம்ப வீரர் ஷுப்மான் கில் (9) அவசரமான ஓர் ஓட்டத்தை எடுக்க முயற்சித்து ஷிக்கர் தவானினால் நேரடியாக ரன் அவுட் செய்யப்பட்டார்.
மறு முனையில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த ரிதிமான் சஹா (21) அடுத்த ஓவரில் ரபாடாவினால் ஆட்டமிழக்கச் செய்யப்பட்டார்.
தடுமாற்றத்துடன் துடுப்பெடுத்தாடிய அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா 7 பந்துகளை எதிர்கொண்ட போதிலும் ஒரு ஓட்டத்தையே அவரால் பெற முடிந்தது. அவர் ரிஷி தவானின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
சாய் சுதர்ஷன், டேவிட் மில்லர் ஆகிய இருவரும் அணியை வீழ்ச்சியிலிருந்து மீட்க முயற்சித்தனர். ஆனால், மில்லர் 11 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது லிவிங்ஸ்டன் அவரை வெளியேற்றினார்.
பெரிதும் சாதிக்கக்கூடியவர் என கருதப்பட்ட ராகுல் தெவாட்டியா (11) நீண்ட நேரம் தாக்குப்பிடிக்காமல் ரபாடாவின் பந்துவீச்சில் பிடி கொடுத்து ஆடுகளம் விட்டகன்றமை குஜராத் டைட்டன்ஸுக்கு அழுத்தத்தைக் கொடுத்தது.
ராஷித் கான் (0) வந்த வேகத்திலேயே ரபாடாவின் பந்துவீச்சில் வெளியேறினார். தொடர்ந்து பிரதீப் சங்வான் (2), லொக்கி பேர்குசன் (5) ஆகியோரும் விரைவாக ஆட்டமிழந்து சென்றனர்.
துடுப்பாட்டத்தில் தனி ஒருவராக போராடிய சுதர்ஷன் 65 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். அல்ஸாரி ஜோசப் ஆட்டமிழக்காமல் 5 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் ரபாடா 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM