துப்புரவு தொழிலாளிகளை மையப்படுத்திய 'விட்னஸ்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

By T Yuwaraj

02 May, 2022 | 08:13 PM
image

நடிகைகள் ரோஹினி மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதையின் நாயகிகளாக நடிக்கும் 'விட்னஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

அறிமுக இயக்குநர் தீபக் ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் முதல் திரைப்படம் 'விட்னஸ்'. இதில் 'விக்ரம் வேதா' பட புகழ் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், மூத்த நடிகை ரோகிணி ஆகிய இருவரும் கதையின் நாயகிகளாக நடிக்க, இவர்களுடன் நடிகர்கள் அழகம் பெருமாள், சண்முகராஜன், அரசியல்வாதி ஜி செல்வா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

துப்புரவு தொழிலாளிகளின் வாழ்வியலுக்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்பை மையப்படுத்திய இப்படத்தின் கதைக் களத்திற்கு இயக்குநருடன் இணைந்து முத்துவேல் மற்றும் ஜேபி சாணக்கியா ஆகியோர் திரைக்கதை எழுதி இருக்கிறார்கள். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் இந்தப் படத்திற்கு, ரமேஷ் தமிழ்மணி இசையமைத்திருக்கிறார். அரசியல் விழிப்புணர்வை வலியுறுத்தும் 'விட்னஸ்' திரைப்படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி என்ற பட நிறுவனம் சார்பில் டி ஜி விஸ்வ பிரசாத் தயாரித்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' மாநகரங்களிலும், நகரங்களிலும் இன்றும் மனிதர்கள் துப்பரவு பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும் இவர்களுக்கான இருப்பிடம் திடீரென்று அரசியல்வாதிகளால் நகரின் மையப் பகுதியிலிருந்து புறநகர் பகுதிக்கு மாற்றப்படுகிறது. இதனால் துப்புரவுத் தொழிலாளிகள் உளவியல் ரீதியாக எப்படி பாதிக்கப்படுகிறார்கள்? அவர்களுடைய பிரச்சனைக்கு தீர்வு என்ன? என்பதை குறித்து 'விட்னஸ்' அலசுகிறது.'' என்றார்.

விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரம் குறித்த விழிப்புணர்வு படத்திற்கு தற்போது ரசிகர்களிடையே பேராதரவு கிடைத்து வருவதால் அந்த பட்டியலில் 'விட்னஸ்' படமும் இடம் பெறக்கூடும் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right