மியன்மாரின் இராணுவ ஆட்சியில் சிறையில் அடைக்கப்படும் ஜனநாயகம்

By Digital Desk 5

01 May, 2022 | 12:50 PM
image

சதீஷ் கிருஷ்ணபிள்ளை       

உலகப் புகழ் பெற்ற தலைவி, சமாதான முயற்சிகளுக்காக நோபல் பரிசு வென்றவர். தமது தேசத்தில் முழுமையான ஜனநாயகம் என்பது அவரது கனவு. அவர் தான் ஆன் சாங் சூகி. ஆவரை அந்தத் தேசத்தின் இராணுவ ஆட்சி, சிறையில் அடைத்திருக்கிறது.

76வயதான இப்பெண்மணி பதவி கவிழ்க்கப்பட்டு வீட்டுக் காவலில் தடுத்து வைக்கப்பட்டார். இவருக்கு ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் ஐந்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னைய தீர்ப்புக்களையும் சேர்த்தால் மொத்தம் 11வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஆங் சான் சூகி விசித்திரமான முறையில் விசாரிக்கப்பட்டார்.  அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட இரகசிய நீதிமன்ற விசாரணைகளின் போது பொதுமக்களுக்கோ, ஊடகங்களுக்கோ அனுமதி கிடையாது. அவரது சட்டத்தரணிகள் ஊடகங்களிடம் பேசக் கூடாது என்றும் நிபந்தனை காணப்பட்டது.

யங்கூன் நகர முதல்வரிடம் ஆறு இலட்சம் டொலர்களை தங்கமாகவும், பணமாகவும் இலஞ்சமாகப் பெற்றார் என்ற அவருக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக இராணுவ ஆட்சி அறிவித்தது.

சூகி அம்மையாருக்கு எதிராக பத்து வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. சகல வழக்குகளிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 190வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.

சிறையில் இருப்பது சூகி அம்மையார் மாத்திரமல்ல. இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்னர், அரச தலைவர்களாக இருந்தவர்களும் தான். அவர்களில் முன்னாள் ஜனாதிபதியும் உள்ளார்.

ஆங் சான் சூகிக்கு எதிரான விசாரணை வெறும் கண்துடைப்பு என்கிறது, ஐக்கிய நாடுகள் சபை. இது சூகி அம்மையாரை அரசியலில் இருந்து முற்றாக ஓரங்கட்டும் முயற்சியென ஆதரவாளர்கள் சாடுகின்றனர்.

இராணுவத்தை ஆட்சேபிக்கும் குழுக்கள் ஆயுதங்களை ஏந்தியுள்ளன. கலகங்கள் புரிகின்றன. கொரோனா பெருந்தொற்று நெருக்கடியால் சிக்கி சீரழிந்த பொருளாதாரம், முரண்பாட்டால் சீரழிவை எதிர்நோக்குகிறது.

பர்மா என்ற பெயரில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்த தேசம். இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவடைந்ததும் நேரடியாக சிவில் யுத்தத்திற்கு தள்ளப்பட்டது.

ஒட்டுமொத்த சனத்தொகையில் மூன்றிலொரு பகுதிக்கு மேலான சிறுபான்மை இனக்குழுக்களின் உரிமைகளை நியாயமாக நிலைநாட்டியிருக்க வேண்டும். அதற்குரிய யோசனை சூகியின் தந்தை ஆங் சானிடம் இருந்தது.

சிறுபான்மை குழுக்கள் செறிந்து வாழும் வளங்கள் நிறைந்த பகுதிகளுக்கு சுயாட்சி வழங்க ஆங் சான் தயாராக இருந்தார். 1947இல் நாட்டின் தலைவராவதற்கு முன்னதாக அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1962இல் சதிப்புரட்சியின் மூலம் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. தளபதி நே வின் தலைமையில் 50வருடகால இராணுவ ஆட்சி. அந்தக் காலத்தில் மியன்மார் வறுமைக்குள் தள்ளப்பட்டது.

தந்தையின் இலட்சியத்திற்காக ஆங் சான் சூகி அம்மையார் போராடினார். வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தார். தொடர் ஆர்ப்பாட்டங்களுக்கு அடிபணிந்த இராணுவம் தேர்தலை அனுமதித்தது.

தேர்தலில் சூகியின் கட்சிக்கு அமோக வெற்றி. இந்த வெற்றியை இராணும்  புறந்தள்ளியது. சர்வதேச சமூகம் சூகியை அங்கீகரித்து, 1991 இல் சர்வதேச சமூகம் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஏற்கனவே, மக்கள் மத்தியில் இராணுவத்தின் மீது அதிருப்தி. அதன் மீது சர்வதேச சமூகத்தின் அபிப்ராயமும் சேர்ந்து கொள்ள, இராணுவ ஆட்சியாளர்கள் மாற வேண்டியிருந்தது.

ஜனநாயக மாற்றம் குரலை அடக்கி வைப்பதற்காக, சூகியை வீட்டுக்காவலில் முடக்கியிருந்த இராணுவ ஆட்சியாளர்கள், ஆறு வருடங்களின் பின்னர் அவரை விடுதலை செய்தார்கள்.

ஜனநாயக மாற்றம் கோரும் மக்கள் அதிருப்தியை சமாளிக்க வேண்டும். அத்துடன், ஆட்சியதிகாரம் கைநழுவிப் போய்விடக் கூடாது. இரண்டையும் சரியாக சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தம்.

2008இல் புதிய அரசியல் யாப்பை ஏற்படுத்தி, சிவிலியன் ஆட்சியை நோக்கிய மாற்றங்களை ஏற்படுத்தினார்கள். எனினும், இந்த மாற்றம் இதயசுத்தியுடன் கூடியதாக இருக்கவில்லை.

பாராளுமன்றத்தில் 25சதவீத ஆசனங்களை இராணுவத்திற்கு ஒதுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இதன்மூலம், எந்தவொரு சட்டத்தையும் இராணுவ பிரதிநிதிகளின் தயவின்றி நிறைவேற்ற முடியாது என்ற நிலைமை உருவாக்கப்பட்டது.

சூகி மக்கள் மீது நம்பிக்கை வைத்தார். நிபந்தனைகளின் அடிப்படையில் அவரது கட்சி 2012இல் இடைத்தேர்தலில் போட்டியிட்டது. மியன்மாரின் வரலாற்றில் முழு அளவிலான தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஆளும் கட்சி பெற்ற வாக்குகளை விடவும் ஒன்பது மடங்கு அதிகமான வாக்குகளுடன் ஆங் சான் சூகியின் கட்சி அமோக வெற்றியீட்டியது.

சூகி ஜனாதிபதியாக கடமையாற்றியிருக்க வேண்டும். அரசியல் யாப்பில் அதற்கு இடமில்லை. தமது பிள்ளைகள் பிரித்தானிய பிரஜைகளாக இருப்பதால், அவர் ஜனாதிபதியாக முடியாது. பிரதமருக்கு சமமான அதிகாரங்களுடன் அவருக்காக புதியதொரு பதவி உருவாக்கப்பட்டது.

அவரது ஆட்சியில் அரச அலுவலகங்களில் நிர்வாக சீர்கேடுகள். ஒரு வேலை செய்து கொள்ளப் போனால், ஆயிரம் முட்டுக்கட்டைகள். இதன் காரணமாக, எதிர்பார்த்த பொருளாதார முன்னேற்றம் சாத்தியப்படவில்லை. வர்த்தகம் கொழிக்கவில்லை. மக்கள் வறுமையில் வாடினார்கள்.

மறுபுறத்தில், பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள், எல்லை விவகாரங்கள் ஆகிய அமைச்சுப் பொறுப்புக்கள் இராணுவத்தின் வசம் இருந்தன. இராணுவத்திற்குள் பௌத்த பேரினவாத சிந்தனைகள் ஆழமாக வேரூன்றி இருந்தன. ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

2020 இல் மீண்டும் தேர்தல்கள். சூகி அம்மையாரின் ஆட்சியில் குறைகள் இருந்திருக்கலாம். எனினும், இராணுவத்தை விடவும் ஜனநாயக ஆட்சியே தமது நாட்டம் என்பதை மக்கள் வாக்குகள் மூலம் நிரூபித்தார்கள். அவரது கட்சிக்கு 83சதவீத வாக்குகள் கிடைத்தன.

இராணுவம் அஞ்சியது. முடிவுகளை இரத்துச் செய்தது. மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள். கிளர்ச்சி ஒடுக்கப்பட்டது. சதிப்புரட்சி கட்டவிழ்த்து விடப்பட்டது. ஆட்சியாளர்கள் கைது செய்யப்பட்டார்கள். சூகி வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டார்.

இராணுவம் சதிப்புரட்சியின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய சமயம், ஒரு வருடத்திற்கு மாத்திரம் பதவியில் இருப்போம் என்றார்கள். ஆறு மாதங்கள் கழித்து, 2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் என்ற சுய காலக்கெடுவை அறிவித்தனர்.

ஆட்சியைக் கைப்பற்றிய சமயம், இராணுவ தளபதி காபந்து அரசாங்கத்தை வழிநடத்துவார் என்றார்கள். பின்னர், ‘காபந்து அரசாங்கம’ என்ற பதம் கைவிடப்பட்டது. ‘யூனியன் அரசாங்கம்’ என்ற பதம் பயன்படுத்தப்பட்டது. அதன் கீழ், அரச பணிகள் செவ்வனே நிறைவேற்றப்படும் என்றார்கள்.

தற்போதைய சூழ்நிலையில், மக்கள் மத்தியில், இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிரான உணர்வலைகள் புதிய வடிவம் பெற்றுள்ளன. அரசியல் செயற்பாட்டாளர்கள் தமக்குள் மாற்று அரசாங்கத்தை உருவாக்கியுள்ளனர். அதற்கு ஆதரவாக ஆயுதம் தாங்கிய குழுக்கள் திரட்டப்பட்டுள்ளன. இதில், மியன்மாரின் சிக்கலான அரசியலுக்குள் ஆயுதமேந்திப் போராடும் சிறுபான்மை இயக்கங்களும் உள்ளீர்க்கப்பட்டுள்ளன.

இதேநிலைமை தொடருமாயின், மியன்மாரில் இன்னொரு சிவில் யுத்தம் வெடித்து, இரத்தக்களரி தீவிரம் பெறுவதைத் தவிர்க்க முடியாது. தற்போதைய சிக்கலில் இருந்து வெளியேறுவது கடினம்.

தீர்வு நோக்கிய எந்தவொரு முயற்சிக்காக சீனா முதலான வெளிநாடுகள் தொடுக்கும் அழுத்தத்திற்கும் மியன்மார் இராணுவம் அடிபணியப் போவதில்லை.

ஆங் சான் சூகி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மக்கள் போராட்டத்தை சரியாக வழிநடத்தக்கூடிய அரசியல் தலைமையும் கிடையாது. எனவே, ஆக்கபூர்வமான தீர்வை நோக்கி நகரக்கூடிய வாய்ப்பு கிடையாது.

தமது அதிகார மோகத்திற்காக எதனையும் விட்டுக் கொடுக்காத, மக்கள் கேட்கும் ஜனநாயகத்தைப் பிடிவாதமாக தர மறுக்கும் ஆட்சியாளர்கள் இருக்கும் வரையில், எந்தவொரு தேசமும் இப்படித்தான் இருக்கும். இதுவே மியன்மார் கற்றுக் கொடுக்கும் பாடம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right