(எம்.எப்.எம்.பஸீர்)

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பிலான வழக்கின் சாட்சி விசாரணைகள் எதிர்வரும் ஜூன் 3  ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டது. கொழும்பு, மூவரடங்கிய விஷேட மேல் நீதிமன்ற அமர்வு வெள்ளிக்கிழமை (29) இதற்கான உத்தரவைப் பிறப்பித்தது. 

எக்னெலிகொட கடத்தல்; இராணுவத்தினருக்கு எதிராக குற்றப்பத்திரிகை -  www.pathivu.com

ஜூன் 3 ஆம் திகதிக்கு மேலதிகமாக ஜூன் 17 ஆம் திகதியையும் நீதிமன்றம் விசாரணைக்கான திகதியாக குறித்தது.

இது குறித்த வழக்கு விசாரணைகள் விசாரணைக்கு வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள 9 இராணுவ புலனாய்வாளர்களும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

அதன்படி  அவ்வழக்கு நீதிபதி சஞ்ஜீவ மொராயஸ் தலைமையில் மகேன் வீரமன்  மற்றும் தமித் தொட்டவத்த ஆகியோர் அடங்கிய விஷேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வின் முன்னால்  விஷேட மேல் நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது பிரதிவாதிகள் 9 பேரும் மன்றில் ஆஜரான நிலையில் அவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான அனில் சில்வா, அனுர மெத்தேகொட மற்றும் அனுஜ பிரேமரத்ன ஆகியோர் ஆஜராகினர்.

வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில்   சிரேஷ்ட அரச சட்டவாதி  வசந்த பெரேரா மன்றில் முன்னிலையானார். பதிக்கப்பட்ட தரப்புக்காக சிரேஷ்ட சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும ஆஜரானார்.

 இதன்போது மன்றுக்கு விடயங்களை முன் வைத்த சிரேஷ்ட அரச சட்டவாதி வசந்த பெரேரா,   இந்த வழக்கை நெறிப்படுத்தும்  சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல்களான சுதர்ஷன டி சில்வா மற்றும் திலீப பீரிஸ் ஆகியோர்  வெளிநாட்டுக்கு பயிற்சி நெறியொன்றுக்காக சென்று, இன்றைய தினமே ( 29) நாடு திரும்பியுள்ள நிலையில்,  சாட்சி  நெறிப்படுத்தளை முன்னெடுக்க சட்ட மா அதிபர் தரப்பு ஆயத்தம் இல்லை எனவும் அதனால் வேறு ஒரு திகதியை தருமாறும் கோரினார்.

 அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம்,  மன்றில் ஆஜராகிய சாட்சியாளருக்கு அடுத்த தவணையின் போது  கண்டிப்பாக ஆஜராகுமாறு  எச்சரித்து வழக்கை ஜூன் 17 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தது.