-அப்துல் கையூம்

மட்டக்களப்பு–கொழும்பு நெடுஞ்சாலையில் சத்துருக்கொண்டான் எனுமிடத்தில் நேற்று  சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இளைஞர்கள் இருவர் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர்-ஆறுமுகத்தான் குடியிருப்பு காளிகோயில் வீதியைச் சேர்ந்த வி.ரதிதன் (வயது 17) மற்றும் கே.விதுஷன் ஆகியோரே கொல்லப்பட்டுள்ளனர்.

நண்பர்களான இவ்விருவரும் மட்டக்களப்பில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியைக் கண்டுகளிப்பதற்காக ஏறாவூர்-ஆறுமுகத்தான் குடியிருப்பிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியருகே இருந்த பனை மரத்தில் மோதியுள்ளது.

படுகாயங்களுக்குள்ளான இருவரும் வீதியால் சென்றவர்களின் உதவியுடன் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோதும் சிகிச்சை பயனின்றி சற்று நேரத்தில் உயிரிழந்துள்ளனர்.

இவ்விபத்துச் குறித்து பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.