மக்கள் எதிர்ப்பை சிவப்பு எச்சரிக்கையாக ஏற்று ஜனாதிபதி, அரசாங்கம் பதவி விலக வேண்டும் - ராஜித

By T. Saranya

28 Apr, 2022 | 09:10 PM
image

(எம்.மனோசித்ரா)

ராஜபக்ஷாக்களின் பணத்திற்கும் அதிகாரத்திற்கும் அடிபணியும் காலம் கடந்து விட்டது. எனவே எவ்வித பேதமும் இன்றி அனைத்து மக்களும் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு தலைவணங்கி ஜனாதிபதி , பிரதமர் , அரசாங்கம் பதவி விலக வேண்டும். வியாழக்கிழமை (28) முன்னெடுக்கப்பட்ட போராட்டம் அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கையாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில் ,

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு 65 சதவீத வாக்குகளை வழங்கிய அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் இன்று அவர் பதவி விலக வேண்டும் நிலைப்பாட்டில் ஒன்றிணைந்து போராடுகின்றனர்.

இதனால் அனைத்து சேவைகளும் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன. ராஜபக்ஷாக்களின் பணத்திற்கும் அதிகாரத்திற்கும் நாடு அடிபணியும் காலம் கடந்து விட்டது. எனவே பணத்தைக் கொண்டு எந்தவொரு போராட்டத்தையும் இனி அவர்களால் முடக்க முடியாது.

அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது பெரும்பான்மை பலம் எந்த தரப்பினருக்கு உள்ளது என்பதை காண்பிப்போம். தற்போது கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர்.

சுமார் 300 பெருந்தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கை கோர்த்துள்ளனர். எனவே மக்களின் கோரிக்கைக்கு தலைவணங்கி அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும்.

நாட்டு மக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த போராட்டத்தினை அரசாங்கம் அதற்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கையாகக் கருத வேண்டும்.

கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டிய அவசியம்  ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடையாது. ராஜபக்ஷாக்கள் எவரும் அற்ற இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படுமாயின் அது குறித்து அவதானம் செலுத்துவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right