யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 5 பொலிஸ் அதிகாரிகளையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் நேற்று அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும் விபத்தொன்றில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய 5 பொலிஸ் அதிகாரிகள் நேற்று கைதுசெய்யப்பட்டனர்.

இதையடுத்து குறித்த 5 பொலிஸ் அதிகாரிகளும் யாழ். நீதிவான் நீதிமன்றில் நீதிபதி ச.சதீஸ்தரன் முன்னிலையில் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதையடுத்து அவர்கள் ஐவரையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதிவரை அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, அவர்கள் ஐவரையும் எதிர்வரும் திங்கட்கிழமை 24 ஆம் திகதி யாழ். நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.