லத்தீப் பாரூக்

பாகிஸ்தானில் 2023ஓகஸ்ட்டில் இடம்பெவுள்ளதாக எதிர்ப்பார்க்கப்படும் அடுத்த பொதுத்தேர்தலில் பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் அதிக பெரும்பான்மை பலத்தோடு பதவிக்கு வருவாரா? என்பதே இன்று உலக அரங்கில் எழுப்பப்பட்டுள்ள கேள்வியாகும்.

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் ஏப்பிரல் மாதம் பத்தாம் திகதி இடம்பெற்ற நம்பிக்கையில்லாத் தீர்மான வாக்கெடுப்பின் மூலம் இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அன்று முதல் அவர் மீண்டும் பதவிக்கு வரவேண்டும் என்ற கோஷம் வலுவடையத் தொடங்கியுள்ளது. 

இம்ரானுக்கு ஆதரவாக மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதுவொரு பாரிய மக்கள் இயக்கமாக இன்று உருவெடுத்து வருகின்றது. இம்ரான் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட வேண்டும் என்று அவரின் தஹ்ரீக் ஏ இன்சாப் கட்சியினரும் ஏனைய ஆதரவாளர்களும் வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டங்கள் பாகிஸ்தானோடு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் உலகின் ஏனைய நாடுகளுக்கும் பரவியுள்ளது. இம்ரான் பதவி நீக்கப்பட்டமைக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது அதிருப்தியையும் நம்பிக்கையீனத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். 

ஐரிஷ் தலைநகரான டப்ளினில் வீதிகளில் திரண்ட பெருமளவான மக்கள் இம்ரானின் கட்சியின் கொடிகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாகிஸ்தானில் இன்றிருப்பது இறக்குமதி செய்யப்பட்ட அரசு அது மாற்றப்பட வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் பிராந்தியத்தில் ஹொஸ்டன் நகர வீதிகளில் ஒன்று கூடிய மக்கள் “பாகிஸ்தான் சிந்தாபாத்” என்று முழக்கமிட்டனர். பாகிஸ்தானின் அரசியல் விவகாரங்களில் வெளிநாட்டு தலையீட்டை எதிர்த்து அவர்கள் முழக்கமிட்டனர்.

அமெரிக்க சதித் திட்டம் தான் தனது பதவி நீக்கத்துக்கு முக்கிய காரணம் என்று இம்ரான் கான் வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளார். தனக்கு எதிராக வாக்களிப்பதற்காக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் பெருந்தொகைப் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

தனது வெளிநாட்டுக் கொள்கைகள், அதனடிப்படையில் தான் மேற்கொண்ட முடிவுகள், அண்மையில் ரஷ்யாவுக்கு விஜயம் செய்தமை என்பனவற்றால் அதிருப்தி அடைந்த அமெரிக்காவும் ஏனைய மேற்குலக சக்திகளும் இந்த சதி முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். 

ஒரு காலத்தில் நாம் அடிமைகள் போல் இருந்தோம். ஆனால் இப்போது பாருங்கள் இஸ்லாமோபோபியாவுக்கு எதிராக அவர் எவ்வளவு காரசாரமாக உரை நிகழ்த்தி உள்ளார் என்று பாகிஸ்தான் சிவில் சேவை அதிகாரிகளில் ஒருவரான மொஹமட் என்பவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இம்ரானின் ஆட்சிக்கு எதிரான சதி நடவடிக்கைகளில் சவூதி அரேரபியா, குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் என்பனவற்றுக்கும் சம்பந்தம் உள்ளதாக சில சமூக ஊடக பதிவுகள் மற்றும் காணொளி காணொளிகள் என்பனவும் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானின் உள்நாட்டு விவகாரங்களில் இவ்விரு நாடுகளும் தலையிட்டுள்ளன. எகிப்தில் ஜனநாயக ரீதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசை வீழ்த்துவதற்காக இந்த நாடுகள் சுமார் 11பில்லியன் டொலர்களை செலவிட்டது போலவே பாகிஸ்தான் விடயத்திலும் நடந்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்லாமாபாத்தில் உள்ள பி.பி.சி. தொடர்பாளர் சிக்கந்தர் கெர்மானி “இம்ரானின் அரசியல் வாழ்வுக்கு இது ஒரு முடிவாக அமையப்  போவதில்லை. நாட்டின் பொருளாதார சீர்குலைவு தான் அவரின் பிரபலம் மங்கிச் செல்ல  காரணமாயிற்று. இருந்தாலும் நாட்டின் அரசியலில் ஒரு திடமான சக்தியாக அவர் இருப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

 “இம்ரான் இன்னமும் ஒரு பிரபலமான தலைவராக இருக்கின்றார் என்பதை தான் இன்றைய மக்கள் கூட்டம் நிரூபிக்கின்றது” என உள்ளுர் அரசியல் ஆய்வாளர் சஹீத் ஹ{ஸேன் அல் ஜஸீராவுடனான பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இம்ரானுக்கும் இராணுவத்துக்கும் இடையிலான கருத்து வேறுபாடு தான் இராணுவம் அவருக்கான ஆதரவை விலக்கிக் கொள்ள காரணமாயிற்று. அதுவே ஆட்சிக் கவிழ்ப்புக்கும் வழியமைத்தது. எதிர்க்கட்சி இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டது. எதிர்க்கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானம், அதற்கான ஆதரவு திரட்டல், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பேரம் பேசல் என்று தனது விளையாட்டை ஆரம்பித்ததும் இதில் தாங்கள் நடுநிலை வகிக்கப் போவதாக இராணுவம் அறிவித்தது.

இம்ரான் கானின் முன்னாள் தகவல்துறை அமைச்சர் சௌத்ரி பவாத் “பாராளுமன்ற உறுப்பினர்கள் விலைபோகும் படலம் தொடங்கி விட்டது. கடைசி ஐந்து நபர்களுக்கும் 150 மில்லியனுக்கும் 200 மில்லியனுக்கும் இடைப்பட்ட தொகை வழங்கப்பட்டுள்ளது” என்று குற்றம் சாட்டினார்.

இம்ரானை வெளியேற்றும் படலத்தை பிரதான எதிர்க்கட்சிகள் தான் அரங்கேற்றின. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் பிரிவு, பாகிஸ்தான் மக்கள் கட்சி என்பனவே பிரதான எதிர்க்கட்சிகள். இந்த இரு கட்சிகளுமே நாட்டு மக்களுக்கு சேவை ஆற்றியதை விட ஊழல் புரிந்தததே அதிகம். அதிலேயே அவர்கள் பிரபலமும் அடைந்துள்ளனர்.

ஊழல் எதிர்ப்பு மற்றும் ஏனைய மறுசீரமைப்புக்களை பிரதான மேடையாகப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர் தான் இம்ரான் கான். பதவி இழந்த பின் நாட்டு மக்கள் மத்தியில் கடும் தொனியில் உரையாற்றிய இம்ரான் கான் எதிர்க்கட்சிகளை ‘கள்வர்களைக் கொண்ட கூட்டம்’ என்று வர்ணித்தார்.

புதிய பிரதமர் ஷெபாஸ் ஷரீப் சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீபின் இளைய சகோதரர். நாணயச் சலவை தொடர்பான வழக்கில் பிணையில் இருப்பவர். முன்னாள் பிரதமரான இவரின் மூத்த சகோதரரும் கூட இதே விதமான ஒரு வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டவர். 

அவர் ஆஜராகாத நிலையில் விசாரிக்கப்பட்ட அந்த வழக்கில் அவருக்கு பத்தாண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. மூன்று தடவைகள் பிரதமர் பதவி வகித்த அவரின் நீண்ட அரசியல் வாழ்வுக்கு இந்தத் தண்டனை தான் முடிவு கட்டியது.

நவாஸ் ஷரீபின் மகள் மர்யம் நவாஸ் மீதும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு ஏழு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஷரீபின் ஆட்சி ஏழு கட்சிகளின் கூட்டணியோடு அமையப் பெற்ற ஒரு அரசாக இருந்தது. 

அவர்கள் பல்வேறு கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் இம்ரானை வீழ்த்துவதில் கருத்தொற்றுமையோடு செயல்பட்டுள்ளனர். ஆனால் நடைமுறையில் ஒரு பொதுவான நிகழ்ச்சி நிரல் என்ற பேச்சுக்கே அவர்களிடம் இடமில்லை.

கடந்த காலங்களில் இராணுவத்துடன் நட்புறவைப் பேணுவதும் ஒரு சவாலாகவே இருந்தது. தற்போதைய இராணுவத் தளபதியின் பதவிக் காலம் நவம்பரில் முடிவடைகின்றது. தற்போதைய நெருக்கடிகள் உருவாக முன்னரே தனது பதவிக் காலம் நீடிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க அவர் கொஞ்சம் கூட வெற்கப்படவில்லை. 

தற்போது இம்ரான் கான் பதவி நீக்கம் செய்யப்பட்டதன் மூலம் இராணுவத் தளபதி குறிப்பிட்ட காலத்தில் ஓய்வில் செல்ல வேண்டும் என்பது உறுதியாகியுள்ளது. இது பாகிஸ்தானில் இயல்பு நிலை ஏற்பட பல வழிகளில் உதவியாக இருக்கும். ஆனால் அடுத்த ஆறு மாத காலத்தில் பல்வேறு மாற்றங்களையும் எதிர்ப்பார்க்க முடியும்.