அதிகாரங்களை ஜனாதிபதியிடம் கொடுத்து விட்டு பாராளுமன்றத்தில் தீர்வை எதிர்பார்க்க இயலாது - கிரியெல்ல

By T. Saranya

23 Apr, 2022 | 04:27 PM
image

(எம்.மனோசித்ரா)

அதிகாரங்கள் அனைத்தையும் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதியிடம் வழங்கிவிட்டு பாராளுமன்றத்திடம் தீர்வினை எதிர்பார்ப்பது பொறுத்தமற்றது.

பாராளுமன்றத்திடம் தற்போது எந்த அதிகாரங்களும் இல்லை என்பதால் அங்கு வாதப்பிரதிவாதங்களை முன்னெடுப்பதும் பிரயோசனமற்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் சனிக்கிழமை (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நல்லாட்சியில் நிறைவேற்றப்பட்ட 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அதிகாரங்கள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாராளுமன்றத்திற்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.

ஆனால் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக பாராளுமன்ற அதிகாரங்கள் மாத்திரமின்றி நீதித்துறை மற்றும் அரச சேவை ஆணைக்குழு உள்ளிட்டவற்றின் அதிகாரங்கள் கூட ஜனாதிபதி வசமாக்கப்பட்டன.

இதனால் தற்போது பாராளுமன்றத்திடம் எந்தவொரு அதிகாரமும் இல்லை. பாராளுமன்றம் பலமற்றதாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அனைத்து அதிகாரங்களையும் ஜனாதிபதிக்கு வழங்கிவிட்டு , சபாநாயகர் பாராளுமன்றத்திடம் பிரச்சினைகளுக்கான தீர்வினைக் போருவது நகைப்பிற்குரியது.

சீனா எமக்கு கடன் உதவிகளை வழங்குகின்ற போதிலும் , எமது ஏற்றுமதிகளைப் பெற்றுக் கொள்வதில்லை. ஆனால் இலங்கையின் 70 சதவீதமான ஏற்றுமதிகளை ஐரோப்பிய நாடுகள் பெற்றுக் கொள்கின்றன. 

எவ்வாறிருப்பினும் அரசாங்கம் இவ்வாறான நாடுகளுடன் தொடர்புகளைப் பேணாது , கடன் வழங்கும் நாடுகளுடன் மாத்திரமே கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுகிறது. இதன் காரணமாகவே சர்வதேசத்தின் உதவிகளும் கிடைக்காமலுள்ளது.

இவ்வாறு நாட்டில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்தில் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடுவது பிரயோசனமற்றது. காரணம் பாராளுமன்றத்திடம் எந்தவொரு அதிகாரமும் கிடையாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right