யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்தில் ஏற்பட்ட சர்ச்சைகளையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்குமான விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

இச்சந்திப்பின்போது பக்கச்சார்பற்ற விசாரணை உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டுமென எதிர்கட்சித்தலைவர் ஜனாதிபதியிடத்தில் வலியுறுத்தியதையடுத்து விசேட பொலிஸ் குழுவொன்று யாழ்ப்பாணம் விரைந்துள்ளதோடு சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸாரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இச்சந்திப்புத் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 

திருகோணமலையில் இடம்பெற்ற விசேட நிகழ்விற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை  நேரடியாக சந்தித்த எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தன், இச்சம்பவம் தொடர்பாக எனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக்கொள்கின்றேன். இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 

அதனை தொடர்ந்து ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் விசேட பொலிஸ் குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவத்தோடு தொடர்புடைய பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதேவேளை இச் சம்பவம் தொடர்பில் பக்கச் சார்பற்ற விசாரணைகளை மேற்கொண்டு துரித நடவடிக்கை எடுக்குமாறு இரா.சம்பந்தன் பொலிஸ் மா அதிபரைக் கோரியதோடு தனது கண்டனத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளார். 

மேலும் தமது பிள்ளைகளை இழந்து துயரில் வாடும் குடும்பத்தாருக்கும் உற்றார் மற்றும் நண்பர்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களை பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த்  தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.