யாழ். கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் இன்று அதிகாலை  யாழ். பல்கலை மாணவர்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து பொலிஸ் அதிகாரிகள் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட ஐந்து பொலிஸ் அதிகாரிகளும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக  அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் 3 ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (23), சுன்னாகத்தைச் சேர்ந்த பவுண்ராஜ் சுலக்ஸன் (24) ஆகிய மாணவர்கள் இன்று காலை உயிரிழந்திருந்தனர்.

இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த மதிலொன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆர்ம்பக்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் மோட்டர் சைக்கிளை ஓட்டிச் சென்ற மாணவனின் கையின் ஊடாக துப்பாக்கி குண்டு துளைத்து கொண்டு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதனையடுத்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலையேற்பட்டிருந்தது.

கொலை குற்றவாளிகளை கைதுசெய்யும் வரை குறித்த மாணவர்களின் சடலத்தை வைத்தியசாலையில் இருந்து வெளியில் கொண்டு செல்ல தாம் அனுமதிக்கபோவதில்லையென மாணவர்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும், உண்மைகள் வெகுவிரைவில் வெளிக்கொணரப்படும் எனவும் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பொலிஸார் தெரிவித்திருந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பொலிஸார்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.