பாராளுமன்றில் ஏற்பட்ட அமளிதுமளியை அடுத்து சபை நடவடிக்கைகள் ஒத்திவைப்பு

By T. Saranya

22 Apr, 2022 | 04:31 PM
image

ஆளும் - எதிர் தரப்பினருக்கு இடையில் கடும் வாக்குவாதம்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கத்தின் வேலைத்திட்டம் என்ன என்பது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேதமாசவின் உரையால் ஆத்திரமடைந்த ஆளும் தரப்பு, அவரை பேசவிடாது சபையில் கூச்சலிட்டது. இதனால் ஆளும்  மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் சபையில் கடும் வாக்குவாதமும் ஏற்பட்டது. இதனால் சபையை கட்டுப்படுத்த முடியாமல் சபாநாயகர் சபை நடவடிக்கையை தற்காலிகமாக ஒத்திவைத்தார்.

பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகளைத் தொடர்ந்து, நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினை தொடர்பாகவும் அதற்கு தீர்வுகாண அரசாங்கம் எடுத்திருக்கும் வேலைத்திட்டம் என்ன என்பது தொடர்பாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.

மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டம் இல்லை. மாறாக அரசாங்கத்தில் இருக்கும் பிரிவினர் இரண்டாக பிரிந்துகொண்டு, ஜனாதிபதியிடம் ஒரு பிரிவினர் சென்று பிரதமரை பதவி விலகச்சொல்லுமாறு கூறுகின்றனர். அதேபோன்று மற்ற பிரிவினர் பிரதமரிடம் சென்று ஜனாதிபதியை பதவி விலகச்சொல்லுமாறும் தெரிவிக்கின்றனர். இதுவா அரசின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் திட்டம்? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆளும் கட்சி பிரதமகொறடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க , எதிர்க்கட்சி தலைவருக்கு இவ்வாறு நிலையியற் கட்டளைக்கு புறம்பாக பேச முடியாது. இதனை தடுக்கவேண்டும். இல்லாவிட்டால், ஆளும் தரப்பினருக்கும் அவ்வாறான சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதன் போது எதிர்க்கட்சி தலைவரின் ஒலிவாங்கி நிறுத்தப்பட்டது.

ஒலிவாங்கியை பெற்று மீண்டும் உரை நிகழ்த்திய  எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினையே பேசுகின்றேன். அதற்காக எனக்கு இடமளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டடார். அதனை தொடர்ந்து  அவருக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு ஆளும் தரப்பினர் தொடர்ந்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மறுப்புறம் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஆளும் தரப்பை கடுமையாக விமர்சித்தனர் இதனால் சபையை கட்டுப்படுத்த முடியாமல் சபாநாயகர் காலை 10.30 மணியளவில் சபை நடவடிக்கையை தற்காலிகமாக ஒத்திவைத்தார்.

சபை ஒத்திவைக்கப்பட்ட பின்னரும் சபைக்குள் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் வாக்குவாதப்பட்டுக் கொண்டிருந்தனர். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் பிரதி அமைச்சர் இந்திக்க அனுருத்தவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்று கொண்டிருந்தது. இதன்போது பிரதான எதிர்க்கட்சி பின்வரிசை உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவின் ஆசனத்துக்கு அருகில் வந்து ஆளும் தரப்பை பார்த்து  கடும்கோபத்துடன் விமர்சித்தனர்.  அத்துடன் சஜித் பிரேமதாசவுக்கு அருகில் இருந்து கயந்த கருணாதிலக்க, லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் சஜித் பிரேமதாசவை அமைதிப்படுத்திப்படுத்தினர்.

இதன்போது எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷடி சில்வா ஆளும் தரப்பு பக்கம் சென்று இந்திக்க அனுருத்தவை சமாதானப்படுத்தினார். இதன்போது ஆளும் தரப்பு உறுப்பினர்களும் அவர்களின் நியாயத்தை ஹர்ஷடி சில்வாவிடம் தெரிவித்துக்கொண்டிருந்தனர். பின்னர் 10.45 மணியளவில் கோரம் மணி ஒலிக்கப்பட்டு 10.50 மணிக்கு சபை நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right