ரம்புக்கனை சம்பவங்கள் - விசாரணை சி.ஐ.டி.யிடம் ஒப்படைப்பு 

By T Yuwaraj

21 Apr, 2022 | 10:13 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

கேகாலை மாவட்டம் - ரம்புக்கனை நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை  துப்பாக்கிப் பிரயோகம் செய்து பொலிசார் கலைத்தமை, அத்துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்து மேலும் பலர் காயமடைந்தமை தொடர்பிலான விசாரணைகள் சி.ஐ.டி. எனும் குற்றப் புலய்வுத் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

Articles Tagged Under: சி.ஐ.டி | Virakesari.lk

இதற்கான உத்தரவை குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின்  125 ஆவது அத்தியாயத்துக்கு அமைய, பொலிஸ் மா அதிபர் சந்தன  விக்ரமரத்ன, சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ. திலகரத்னவுக்கு நேற்று ( 21) பிறப்பித்தார்.

 அதன்படி விசாரணைகளை ஆரம்பித்து 3 தினங்களில்,  விசாரணைகள் குறித்த இடைக்கால அறிக்கையொன்றினை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பொலிஸ் மா அதிபர் சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டுள்ளார்.

ரம்புக்கனை ஆர்ப்பாட்டம், துப்பாக்கிச் சூடு அதனை சார்ந்த அனைத்து விடயங்கள் தொடர்பிலும் சிறப்பு விசாரணைகளை முன்னெடுக்க  பொலிஸ் தலைமையகம்

 புதன்கிழமை ( 20) சிறப்புக் குழுவொன்றினை  நியமித்திருந்தது. சப்ரகமுவ மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்,  பொலிஸ் மா அதிபரிடம் பெற்ற அனுமதிக்கமைய,  இது குறித்த பூரண விசாரணைகள் அவிசாவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் வசந்த  கந்தேவத்தவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக  சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

 இந் நிலையிலேயே இன்று (21) முதல் அவ்விசாரணைகளை சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு பாரப்படுத்துவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்தது.

 விசாரணை குழு மாற்றப்பட்டுள்ள நிலையில்,  இந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் முன்னெடுத்த துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள்,  சாட்சியாளர்கள் சுயாதீன விசாரணைகளில் சாட்சியங்களை தயக்கமின்றி வழங்குவதை உறுதி செய்யவும்  நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கவும்  பொருத்தமான சூழலை உருவாக்கவும்  பொலிஸ் மா அதிபர் உடன் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார். 

அதன்படி, கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர், ரம்புக்கனை  பகுதி பொலிஸ் அத்தியட்சர் மற்றும் ரம்புக்கனை பொலிசஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் உடனடியாக  குறித்த பிராந்தியத்துக்கு வெளியே இடமாற்றம் செய்ய பொலிஸ்  மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளதாக  பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

 இவ்வாறான நிலையில், இன்றைய தினமே சி.ஐ.டி.யின் உதவி பொலிஸ் உத்தியட்சர் ஒருவரின் கீழான சிறப்பு  விசாரணைக் குழு ரம்புக்கனை நோக்கி விசாரணைகளை ஆரம்பிக்க விரைந்துள்ளது.

 ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் 42 வயதான இரு பிள்ளைகளின் தந்தை கே.டி. சமிந்த லக்ஷன் உயிரிழந்தார். ரம்புக்கனை - நாரன்பெத்த, கிரிவடுன பகுதியைச் சேர்ந்த குறித்த நபரின் இறுதிக் கிரியைகள்  நாளை ( 22) இடம்பெறவுள்ளன.

 இந் நிலையில்  குறித்த பகுதியின் பாதுகாப்புக்கு இராணுவத்தினரின் உதவியை பொலிஸ் மா அதிபர் கோரியுள்ளார். அதன்படி,  பொது மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 12( 1) ஆம் பிரிவின் கீழ் கடந்த 2022.03.21 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி வெளியிட்ட 2227/ 10 ஆம் இலக்க வர்த்தமானிக்கு அமைய பொது அமைதியை காக்க முப்படையினருக்கு அதிகாரம் கிடைக்கும் நிலையில் அதன் கீழ் சிறப்பு பாதுகாப்பை வழங்க இராணுவம் தீர்மானித்துள்ளது.

 அதன்படி கேகாலை, ரம்புக்கனை,  தேவாலகம ஆகிய பொலிஸ் பிரிவுகளின் பாதுகாப்புக்கு இராணுவம் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right