பலத்த பாதுகாப்புடன் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் 3 ஆவது ஆண்டு அனுஷ்டிப்பு

21 Apr, 2022 | 04:49 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி அடிப்படைவாதிகளால் கத்தோலிக்க தேவாலயங்கள் , நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றை இலக்கு வைத்து தற்கொலை குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 

இதனை முன்னிட்டு இன்றைய தினம் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலம் , நீர்கொழும்பு - கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் கொழும்பு பேராயர் இல்லத்தினால் விசேட நினைவுகூரல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

பலத்த பாதுகாப்பு

இன்றைய தினம் கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் விசேட நினைவுகூரல் நிகழ்வுகள் மற்றும் ஆராதனைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. 

Image

பொலிஸார் , கடற்படையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

திருத்தலத்திற்குள் பிரவேசித்த அனைவரும் சோதனைக்குட்படுத்தப்பட்டதோடு , கொழும்பு - ஜம்பட்டா வீதி பொலிஸ் நிலையத்திற்கருகில் பொலிஸ் சோதனை சாவடியொன்றும் அமைக்கப்பட்டிருந்தது.

தூதுவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்பு

இந்த நினைவு கூரல் நிகழ்வில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு பிரஜைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி அந்த நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களும் கலந்து கொண்டனர்.

Image 

அதற்கமைய இலங்கைக்கான அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான், அவுஸ்திரேலியா, இந்தியா, பங்களாதேஷ், சுவிற்ஸர்லாந்து, போர்த்துக்கல் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளின் தூதுவர்களோடு , இலங்கைக்கான வத்திக்கான் அபோஸ்தலிக தூதுவர் ப்ரைன் உடைஹூவே ஆண்டகையும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரம்புக்னையில் உயிரிழந்த நபருக்கும் அஞ்சலி

பிரமுகர்களின் வருகையை அடுத்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட நேரமான  8.45 க்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு மாத்திரமின்றி , செவ்வாயன்று ரம்புக்கனையில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டினால் பலியான நபருக்கும் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

அதனையடுத்து உயிரிழந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ள நினைவு பலகைக்கு அருகில் மெழுகுவர்த்திகள் ஏற்றி வைக்கப்பட்டதோடு , திருத்தல மணியும் ஒலிக்கச் செய்யப்பட்டது.

புனித பாப்பரசரின் செய்தியை தொடர்ந்து இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க தூதுவர் ப்ரைன் உடைஹூவே ஆண்டகையினால் புனித பாப்பரசரின் செய்தியும் வாசிக்கப்பட்டது. 

இதன் போது 'வன்முறை வழியைப் பின்பற்றத்தூண்டி தாக்குதல்களை மேற்கொண்டவர்களின் இதயங்களில் அமைதி உணர்வை ஏற்படுத்த இறைவனை பிராத்திக்கின்றோம்' என்று ப்ரைன் உடைஹூவே ஆண்டகை குறிப்பிட்டார். 

அத்தோடு அமரபுர மகாசங்கசபையின் செயலாளர் பேராசிரியர் பல்லேகந்த ரதனசார தேரர் , ஸ்ரீ பொன்னம்பலவாணேஷ்வரர் ஆலய தலைமை குருக்கள் சிவசுரேஷ் மற்றும் இஸ்லாமிய மத பரப்புரையாளர் ஷேக் அப்துல்லா அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோரும் இதன் போது உரையாற்றினர்.

விசேட ஆராதனைகள்

பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் உரையுடன் நிகழ்வுகள் நிறைவடைந்ததையடுத்து , குண்டு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆசிவேண்டி விசேட ஆராதனைகள் இடம்பெற்றன. இதில் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட , படுகாயமடைந்து அங்கவீனமுற்ற பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கட்டுவாப்பிட்டி தேவாலயம்

நீர்கொழும்பு - கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்திலும் விசேட ஆராதனைகள் இடம்பெற்றன. 

பேராயர் தலைமையில் மாலை 3.30 முதல் 4 மணி வரை பிரார்த்தனைகளும் , மாலை 4 மணிக்கு கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் அமைதிப்பேரணி ஆரம்பமாகி 5 மணியளவில் நீர்கொழும்பு பஸ்தரிப்பிடத்திற்கு அருகிலுள்ள புனித ஜோசப்பாஸ் திருச்சொரூபத்திற்கு அருகாமையில் நிறைவடையவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ்த்தேசியக்கட்சிகள் பொதுக்குறிக்கோளின் அடிப்படையில்; புதிய கூட்டமைப்பை...

2025-02-10 19:19:25
news-image

அதுருகிரியவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது...

2025-02-10 18:58:16
news-image

மாளிகாவத்தையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது !

2025-02-10 18:56:54
news-image

மன்னார் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டுச்...

2025-02-10 17:54:46
news-image

தையிட்டி விகாரை விவகாரம்: மக்களின் விருப்பமே...

2025-02-10 17:33:38
news-image

பொதுநலவாய பாராளுமன்றங்களின் சங்கத்தின் ஆசிய மற்றும்...

2025-02-10 17:32:35
news-image

மன்னார் மக்களுக்கு சீனாவால் நிவாரண பொருட்கள்...

2025-02-10 17:34:41
news-image

நிட்டம்புவையில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது...

2025-02-10 17:06:47
news-image

பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் ஐஸ்...

2025-02-10 17:45:36
news-image

யாழ். தையிட்டி விகாரை உடைக்கப்படவேண்டும்! -...

2025-02-10 16:42:00
news-image

மாகாண சபை முறைமை என்பது தாம்...

2025-02-10 16:22:10
news-image

முல்லைத்தீவில் மரக்குற்றிக் கடத்தல் முறியடிப்பு :...

2025-02-10 16:26:54