(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

எரிபொருள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வினால் ஏனைய மக்களைப்போன்று மலையக மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 அதனால் அரசாங்கத்துக்கு எதிராக காலிமுகத்திடலில் போராடும் இளைஞர்களுக்கு பலம் சேர்க்கும் வகையில் மலையக மக்கள் விதிக்கிறங்கி போராட ஆரம்பித்துள்ளனர்.

 அத்துடன் மலையக மக்களின் எந்த பிரச்சினைக்கு இந்த அரசாங்கத்தினால் தீர்வு கிடைக்கவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய் கிழமை  (19.04.2022)இடம்பெற்ற மருந்து கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களாகியும் மலையக மக்களின் எந்த பிரச்சினைக்கும் தீர்வை பெற்றுக்கொடுக்கவில்லை.

 பெருந்தோட்ட மக்களின் சம்பள பிரச்சினை, அவர்களின் தரிசு நிலங்களை அவர்களுக்கு பிரித்து கொடுக்கவேண்டும் என கோரி்க்கை போன்ற எந்த விடயத்தையும் அரசாங்கம் செய்யவில்லை. 

ஆனால் நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள் உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களினதும் விலை அதிகரித்துள்ளது. 

State Minister Vadivel Suresh to also resign

கோதுமை மா பெற்றுக்கொள்ள முடியாமல் மலையக மக்கள் கஷ்டப்படுகின்றனர்.

அதனால் மலையக மக்கள் தங்களது பொறுமையை இழந்து தற்போது வீதிக்கிறங்கி இருக்கின்றனர். 

அரசாங்கத்துக்கு எதிராக காலிமுகத்திடலில் இளைஞர்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்தை வீட்டுக்கு போகுமாறு தெரிவிக்கின்றனர். அதனையே மலையக மக்களும் தெரிவிக்கின்றனர். 

அதனால் மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அரசாங்கம் தொலைந்துபோகவேண்டும். 

மேலும் மலையகத்தில் இருக்கும் தரிசு நிலங்களை மலையக மக்களுக்கு பிரித்து வழங்கி இருந்தால் இன்று நாட்டில் விவசாய உற்பத்தி அதிகரித்திருக்கும்.

எமது மக்களை தொடர்ந்து வஞ்சித்து கொண்டிருப்பதன் காரணமாக பெருந்தோட்ட கம்பனிகளின் சொந்தக்காரர்கள் அமைச்சர்களாக இருக்கின்றார்கள். 

பெருந்தோட்ட கம்பனிகளின் உண்மையான சொந்தக்காரர்கள் யார் என்ற கேள்வி எழுகின்றது. நாட்டின் சட்டத்தையும் மீறி பெருச்தோட்ட கம்பனிகள் செயற்படுகின்றன.

 அதனால் மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அரசாங்கம் வீட்டுக்கு செல்லவேண்டும். 

அதேபோன்று அரசாங்கம் நியமித்திருக்கும் எல்போட் அமைச்சர்களை நாங்களோ எமது மக்களோ ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றார்.