இதயத்தில் எந்த கோளாறுகள் ஏற்பட்டாலும் எமக்கு பயம் வருவது இயற்கையே. அது என்னவென்று தெரியவரும் போது தான் நாம் அதனை எதிர்கொள்வதற்குரிய மனதிடத்தை பெறுகிறோம் என்பதும் உண்மை. இந்நிலையில் இதய தசைப் பகுதியில் ஏற்படும் சில பாதிப்புகளைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

இதயப்பகுதியில் உள்ள தசைகள் தங்களின் இயல்பான வலுவினை இழ்ந்திருந்தாலோ அல்லது இதய தசை மெலிந்திருந்தாலோ அல்லது ஓரிடத்தில் மெலிந்து பிறகு வேறொரு இடத்தில் பெரிதாக இருந்தாலோ இதயத்திற்கு இரத்தம் சீராக பம்ப் செய்ய இயலாத நிலை உருவாகும். அத்துடன் உடலுக்கு போதிய அளவில் இரத்தம் அனுப்பப்படுவதிலும் சிக்கல்கள் எழக்கூடும். 

இந்நோய் ஆண் பெண் என இரு பாலாரையும் எந்த வயதிலும் தாக்கக்கூடும்.இது நீண்ட நாள் நீடிக்கக்கூடிய ஒரு நோய் என்பதை தெரிந்துகொள்ளவேண்டும். இதற்கு பொதுவான சிகிச்சை என்னவெனில் உங்களின் வாழ்க்கை முறையை மாற்றியமைத்துக்கொள்வது தான் சிறந்த தீர்வு. ஆனாலும் தொடர் சிகிச்சை எடுத்தால் இதிலிருந்து நிவாரணம் கிடைக்க வழியுண்டு.

இதயதசை நோயில், விரிந்த இதய தசை நோய், (Diated Cardiomyopathy) ஹைபர் டிராபிக் இதய தசை நோய்,(Hyper Traffic Cardiomyopathy) கட்டுபபடுத்தப்பட்ட இதய தசை நோய் (Restrictive Cardiomyopathy) என மூன்று வகையிருக்கிறது.  

இதில் மூன்றாவதாக குறிப்பிடப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட இதய தசை நோய் மிக அரிதாகவே ஏற்படுகிறது. இந்நிலையில் இதய தசையால் இரத்தத்தை அனுப்பமுடியும். ஆனால் ஓய்வெடுத்து இரத்தத்தை நிரப்ப இயலாது. இதன் காரணமாக இதயத்தில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. நீர்க்கோர்த்தல் வீக்கம், மயக்கம் ஆகியவை ஏற்படலாம்.

அதேபோல் இரண்டாவதாக குறிப்பிடப்பட்ட உயர் இரத்த அழுத்த இதய தசை நோய் என்பதும் மிக அரிதாகவே வருகிறது. இவ்வகையிலும் இதயத்தால் ஓய்வெடுத்து இரத்தத்தை நிரப்ப இயலாது. உயர் இரத்த அழுத்தத்துடன் தொடர்புக் கொண்டிருக்கும் இது பெரும்பாலும் பரம்பரையின் காரணமாகவே வருகிறது. இந்நிலையில் இதய தசையின் அளவு அதிகரித்து இதயத்தை விட்டு இரத்தம் வெளியேறுவது தடைபடுகிறது. இதன் காரணமாக இதய வலி, மூச்சு விடுதல் சிரமம், மயக்கம், தலைச்சுற்றல் போன்றவை ஏற்படுகிறது. குறிப்பாக பணியாற்றும் போது இவை ஏற்படக்கூடும்.

இதனைத் தொடர்ந்து பெரும்பாலானவர்களுக்கு வரும் நோயாக விரிந்த இதய தசை நோய் காணப்படுகிறது. இதனால் இதய தசை முழுவதும் வலிவிழந்து குறைவாக இரத்தம் அனுப்பப்படுகிறது. இவ்வகையான பிரச்சினை பெண்களை விட ஆண்களுக்கு அதிகளவில் ஏற்படுகிறது. எல்லா வயதைச் சார்ந்தவர்களுக்கு இது ஏற்படும் என்றாலும் 30 முதல் 50 வயதிற்குள் இருக்கும் ஆண்களுக்கு இவை அதிகளவில் ஏற்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் இதய தமனி நோய் அதாவது இஸ்கிமிக் கார்டியோமயோபதி என்ற நோய் தாக்குகிறது. இந்நோய் வைரஸ் தொற்றால் உண்டாகிறது என்று அண்மையில் கண்டறிந்திருக்கிறார்கள். ஜலதோஷம் அல்லது புளூ காய்ச்சலாகத் தொடங்கி இந்நோயாக மாறக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதன் பின்னரே கடுமையான இதய நோயாக மாறுகிறது. குடிப்பழக்கம், விஷம் அருந்தியிருத்தல், சத்துக்குறைபாடு, ஹோர்மோன் கோளாறு, உயர் இரத்த அழுத்தம், பரம்பரை ஆகிய காரணங்களால் இந்நோய் ஏற்படுகிறது.

ஒவ்வொருவருக்கும் அவர்களின் பாதிப்பின் வீரியத்தைப் பொறுத்து ஒவ்வொருவிதத்திலான சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது, குறிப்பாக வாழ்க்கை முறையை மாற்றியமைத்துக்கொள்ளும் படி அதிகளவில் பரிந்துரைக்கப்படுகிறார்கள். முதலில் உங்களின் செயல்கள் அதாவது நடவடிக்கைகள், பணிகள் ஆகியவற்றில் கட்டுப்பாடு விதிக்கப்படும். ஓய்வு எடுப்பது கட்டாயமாக்கப்படும். தலையை உயர்வாக வைத்து ஓய்வெடுப்பது நன்மைத் தரும். சைக்கிளிங் செய்யச் சொல்வார்கள். இதனால் தலைசுற்றல் கட்டுப்படும். அதிகமாக நிற்பதையும், அதிகமாக உட்கார்ந்திருப்பதையும் முற்றாக தவிர்த்துவிடுங்கள்.

உணர்வு சிக்கலும், உடல் சிரமமும் உங்கள் இதயத்திற்கு அதிக சிரமங்களை தருகின்றன. அதனால் இதனை கட்டுக்குள் வைத்திருக்க மருத்துவரின் ஆலோசனைகளை உறுதியாக பின்பற்றுங்கள். அதிகமாக உண்ட பிறகு குமட்டல், அழுத்தம் ஏற்பட்டால் உணவை குறைத்துக்கொள்ளுங்கள். ஆனால் 3 வேளை என்பதை 6 வேளையாக பிரித்து சாப்பிடத் தொடங்குகள். அதே தருணத்தில் வயிற்றில் நீர் சேர்ந்திருந்தாலும் குமட்டலும், அழுத்தமும் தோன்றக்கூடும். அதனால் அதை மருத்துவரிடம் சென்று காண்பித்து உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

இதய தசை நோயை அலட்சியப்படுத்தினால் இரத்தம் கட்டியாகிவிடக்கூடிய அபாயம் உண்டு. இவ்வகை கட்டியால் கல்லீரல், கால், மூளை போன்ற பகுதிகள் பாதிக்கப்படக்கூடும். இதனால் இதயம் செயலிழந்து போகும் அபாயமும் ஏற்படும். எனவே இரத்தம் கட்டியாவதை தடுக்க முன்கூட்டியே மருத்துவரிடம் சென்று காண்பித்து சிகிச்சைப் பெற்றுக்கொண்டு நலமுடன் வாழுங்கள்.

டொக்டர் ஆனந்தன் M.S.,

தொகுப்பு  அனுஷா.  

தகவல் : சென்னை அலுவலகம்