( எம்.எப்.எம்.பஸீர்)
பாகிஸ்தான், பஞ்சாப் மாநிலம்– சியல்கோட்டில் சித்திரவதைக்குட்படுத்தி எரித்து கொலை செய்யப்பட்ட இலங்கை முகாமையாளர் பிரியந்த குமார (49) விவகாரத்தில் குற்றவாளிகளாக காணப்பட்ட 6 பேருக்கு மரண தண்டனை விதித்து பாக். குஜரன்வாலா பயங்கரவாத தடுப்பு நீதிமன்ற நீதிபதி நடஷா நஸீம் நேற்று (18) தீர்ப்பளித்தார்.
இரு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இந்த ஆறு பேரும் குற்றவாளிகளாக காணப்பட்டு இவ்வாறு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
தைமுர், மொஹம்மட் இர்ஷாத், அலி ஹஸ்னைன், அப்துல் ரஹ்மான், அபூ தல்ஹா, மொஹம்மட் ஹுமைர் ஆகிய குற்றவாளிகளுக்கே இவ்வாறு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. மரண தண்டனைக்கு மேலதிகமாக ஒவ்வொரு குற்றவாலிக்கும் தலா 2 இலட்சம் ரூபா பாகிஸ்தான் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.
இதற்கு மேலதிகமாக இந்த சம்பவம் தொடர்பில் மேலும் 9 பேருக்கு, ஆயுள் தண்டனை விதிப்பதாக பயங்கரவாத தடுப்பு நீதிமன்ற நீதிபதி நடஷா நஸீம் அறிவித்தார். அத்துடன் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரை குற்றமற்றவர் எனக் கூறி விடுவிப்பதாகவும் தீர்ப்பில் அவர் அறிவித்தார்.
ரொஹைல் அம்ஜத், மொஹம்மட் சுஹைப், இம்ரான் ரியாஸ், சாஜித் அமேன், ஸைகம் மஹ்தி, இந்திசாம் ஸைப், அலி ஹம்ஸா, லுக்மான் ஹைதர், மற்றும் அபுல் சபூர் ஆகிய குறறவாளிகளுக்கே இவ்வாறு ஆயுள் தண்டனைக்கு மேலதிகமாக 2 இலட்சம் பாகிஸ்தான் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.
குற்றம் சட்டப்பட்டிருந்த பிலால் என்பவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்பதால் அவரை குற்றமற்றவர் என கருதி விடுவிப்பதாகவும் நீதிமன்றம் அறிவித்தது.
இதனைவிட, அலி அஸ்கர் என்பவருக்கு 5 வருட சிறைத் தண்டனை விதித்த நீதிபதி, குற்றவாளிகளாக காணப்பட்ட மேலும் 72 பேருக்கு தலா இவ்விரண்டு வருட சிறைத் தண்டனையும் விதித்தார்.
இந்த கொடூர சம்பவம் தொடர்பில் 9 சிறுவர்கள் உட்பட 89 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிகை கடந்த மார்ச் 12 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டு அவை, அவர்களுக்கு கையளிக்கப்பட்டு வாசித்தும் காட்டப்பட்டுள்ளன. இந் நிலையில் இந்த 89 பேருக்கும் எதிரான சாட்சி விசாரணைகள் மார்ச் 14 ஆம் திகதி முதல் குஜரன்வாலா பயங்கரவாத தடுப்பு நீதிமன்ற நீதிபதி நடஷா நஸீம் முன்னிலையில், லாஹூர் கோர்ட் லக்பத் சிறையில் முன்னெடுக்கப்பட்டன.
பேராதனை பல்கலைக்கழகத்தில் உற்பத்தி பொறியியலாளராக பொறியியல் துறையில் பட்டம் பெற்ற பிரியந்த குமார தியவதன, முதலில் இலங்கையில் பிரன்டிக்ஸ் ஆடை உற்பத்தி நிலையத்தில் சேவையாற்றியதுடன் அதன் பின்னர் 11 வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானுக்கு சென்றிருந்தார்.
49 வயதான அவர் கனேமுல்ல கெந்தலியத்தபாலுவ பிரதேசத்தை சேர்ந்தவர்.
இரு பிள்ளைகளின் தந்தையான அவர், சியால்கோட் நகரிலுள்ள ராஜ்கோ இன்ட்ரஸ்ட்ரீஸ் தனியார் ஏற்றுமதி தொழிற்சாலையொன்றில் முகாமையாளராக கடமையாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் இஸ்லாத்துக்கு எதிராக மத நிந்தனையில் ஈடுபட்டதாக கடந்த 2021 டிசம்பர் 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை தகவல் பரவியுள்ளது. இதனையடுத்து அங்கு ஒன்று கூடியவர்கள் பிரிய்ந்த குமாரவை கொடூரமாக் தாக்கி, தொழிற்சாலை கட்டிடத்தின் உச்சத்தில் இருந்து வீதிக்கு வீசி, வீதியில் வைத்து எரித்துக்கொன்றிருந்தனர்.
இந் நிலையில், ராஜ்கோ இன்ட்ரஸ்ட்ரீஸ் தனியார் ஏற்றுமதி தொழிற்சாலை ஊழியர்கள் உட்பட 900 பேருக்கு எதிராக இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் தரப்பால் விசாரணைகள் ஆரம்பிக்கப்ப்ட்டு அது தொடர்பில் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த கொடூர கொலை பதிவான தொழிற்சாலை மற்றும் வரிசாபாத் வீதிப் பகுதி அமைந்துள்ள, அகோகி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ( எச்.எச்.ஓ.) அர்மான் மக்த் இந்த முதற் தகவல் அறிக்கையை நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தார்.
பாகிஸ்தான் தண்டனை சட்டக் கோவையின் 302,397,120,427,431,157,149 ஆம் அத்தியாயங்களின் கீழும், பாகிஸ்தானின் பயங்கரவாத தடைச் சட்டத்தின் 7 மற்றும் 11 அவது அத்தியாயங்களின் கீழும் தண்டனைக்குரிய குற்றங்களை சந்தேக நபர்கள் புரிந்துள்ளதாக கூறியே, இந்த முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டது.
இந் நிலையிலேயே அவர்களில் 89 பேருக்கு எதிராக தற்போது பாகிஸ்தானின் தண்டனை சட்டக் கோவை மற்றும் பாகிஸ்தான் பயங்கர்வாத தடை சட்டத்தின் கீழ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில், பாகிஸ்தானின் வழக்குத் தொடுநர் சார்பில் சிரேஷ்ட சிறப்பு சட்டவாதி அப்துல் ரவூப் வத்தூ தலைமையிலான ஐவர் கொண்ட சட்டவாதிகள் குழாம் ஆஜராகிறது. பிரதிவாதிகளுக்கு எதிராக 40 சாட்சியாளர்கள் வழக்குத் தொடுநர் தரப்பால் பெயரிடப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 14 பேருக்கே முதற்கட்டமாக இன்று சாட்சியமளிக்க மன்றில் ஆஜராக அறிவித்தல் அனுப்பட்டுள்ளது.
இதனைவிட, வீடியோக்கள், டிஜிட்டல் சான்றுகள், டிஎன்ஏ சான்றுகள், தடயவியல் சான்றுகள், பிரியந்த குமாரவை பிரதிவாதிகலிடம் இருந்து காப்பாற்ற முயன்ற சக ஊழியர் உட்பட நேரில் கண்ட சாட்சிகள் என பல சாட்சிகள் பிரதிவாதிகளுக்கு எதிராக நீதிமன்றால் பரிசீலிக்கப்ப்ட்டன.
தொழிற்சாலையில் உள்ள 10 டிஜிட்டல் வீடியோ பதிவு உபகரணங்களின் காட்சிகள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட நிலையில் அதன் அரிக்கையும் , குற்றம் சாட்டப்பட்டவர்களின் சமூக ஊடக கணக்குகளில் இருந்த வீடியோக்கள் மற்றும் 56 பிரதிவாதிகளின் கையடக்கத் தொலைபேசிகளில் இருந்து மீட்கப்பட்ட காட்சிகளும் சாட்சிகளாக பயன்படுத்தப்பட்டன.
இந் நிலையிலேயே சாட்சி விசாரணைகளை தொடர்ந்து, குற்ரம் சட்டப்பட்ட 89 பேரில் 88 பேர், குற்றப் பத்திரிகையில் இருந்த பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றவாளிகளாக காணப்பட்டனர். அதன்படியே முக்கிய குற்றவாளிகளான 6 பேருக்கு மரண தண்டனையும் மேலும் 9 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்த நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவித்தமை குறிப்பிடத்தக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM