அக்கரபத்தனை பெரியநாகவத்தை தோட்ட பகுதியில் இரவு நேரங்களில் சிறுத்தை புலிகள் நடமாட்டத்தால் இத்தோட்ட மக்கள் மத்தியில் பீதியியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள நாய்கள் மற்றும் கோழிகள் காணாமல் போவதாக இத்தோட்டமக்கள் தெரிவிக்கின்றனர்.

மாலை நேரங்களில் வெளியில் செல்லமுடியாத நிலமை தோன்றியுள்ளது. இத்தோட்டத்தினை அண்மித்து வன பகுதிகள் காணப்படுவதால் வனபகுதிகளில் உள்ள ஏனைய விலங்குகளும் தொழில் செய்யும் தேயிலை மலைகளில் நடமாடுவதாகவும் நேரில் கண்ட தோட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் தங்களின் தொழிலை பயமின்றி செய்யமுடியாத நிலையில் இருப்பதாக இவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். கடந்த காலங்களில் மலையக பகுதிகளில் சிறுத்தை புலி தாக்கி அதிகமான தோட்ட தொழிலாளர்கள் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இது தொடர்பாக தோட்ட மக்கள் தோட்ட நிர்வாகத்தினரிடமும் அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்திலும் தெரிவித்துள்ளதாகவும் இங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு வன பகுதிக்கு பொறுப்பான அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.