(எஸ்.ஜே.பிரசாத்)

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் ஜிம்னாஸ்டிக் விளையாட்டையும் சேர்க்குமாறு தெற்காசிய விளையாட்டு சம்மேளனத்திடமும், அடுத்த போட்டியை நடத்தும் பாகிஸ்தான் ஒலிம்பிக் கமிட்டியிடமும் இலங்கை உள்ளிட்ட 4 நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் தனித்தனியாக இந்தக் கோரிக்கைகளை  முன்வைத்துள்ளன.

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் ஜிம்னாஸ்டிக் வீரர்கள் வரலாற்றில் எந்த நாளிலும் இடம்பெறவில்லை எனவும், இப்பிராந்தியத்தின் திறமையான விளையாட்டு வீரர்கள் சிறந்து விளங்கும் வாய்ப்பைப் பெறவில்லை எனவும் தீர்மானம் சுட்டிக்காட்டியுள்ளது. 

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் 8 நாடுகளில் நான்கு நாடுகள் இதனை சமர்ப்பித்தால் இந்த வாய்ப்பு உருவாக வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

எனவே, இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் தேசிய ஒலிம்பிக் குழுக்களின் தலைவர்கள் விரைவில் இந்த முன்மொழிவை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளனர்.

கடந்த டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இலங்கையை பிரதிநித்துவப்படுத்தி ஜிம்னாஸ்டிக்கில் மில்கா கிஹானி பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.