(இராஜதுரை ஹஷான்)

நாட்டு மக்கள் கோரிய முறைமை மாற்றத்தை அடைவதற்கு தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை சிறந்த வாய்ப்பாக உள்ளது.சவால்களையும்,சிரமங்களையும் எதிர்க்கொள்ளும் பொறுப்பில் இருந்து ஒருபோதும் விலகபோவதில்லை.

மக்கள் எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி நிலைமையை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் கும்பல் ஒன்று தோற்றம் பெற்றுள்ளது.

இந்நிலைமையை கட்டுப்படுத்த அரசாங்கம் தலையிடும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக அரசியல் கட்சிகள் முன்வைக்கும்  யோசனைகளை பாராளுமன்றின் ஊடாக நிறைவேற்றிக்கொள்ளலாம்.

தேவையான மாற்றங்களை செய்தன் ஊடாக சவால்களை வெற்றிக்கொள்ள முடியும் அதற்கு நாட்டு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மாளிகையில் திங்கட்கிழமை (18) காலை இடம்பெற்ற புதிய அமைச்சரவை நியமன நிகழ்வில் விஷேட உரையாற்றுகையில் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சிரேஷ்டத்துவத்துவம் குறித்து அவதானம் செலுத்தாமல் புதிய அமைச்சரவையை நியமித்துள்ளேன்.அமைச்சு பதவி என்பது வரப்பிரசாதம் அல்ல அது பாரியதொரு பொறுப்பாகும்.

அமைச்சர் என்ற ரீதியில் மேலதிகமாக எவ்வித வரப்பிரசாதங்களையும் அனுபிக்க வேண்டாம் என்ற கோரிக்கையை விடுக்கிறேன்.

உண்மையான,வினைத்திறனான மற்றும் தூய்மையான நிர்வாகத்திற்கு தியாகத்துடன் ஒன்றினைய வேண்டும்.அதேபோல் அமைச்சுக்கு கீழ் உள்ள அரச நிறுவனங்கள் மோசடியில்லாத மக்கள் சேவைக்கான சிறந்த சேவை நிறுவனமாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.

அரச நிறுவனங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் தற்போது பாரிய நிதி நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளன.நிதி நெருக்கடியினை சீர்படுத்திக்கொள்வது அத்தியாவசியமானது.

தற்போதைய நெருக்கடி நிலைமை மக்கள் கோரிய 'முறைமை மாற்றத்தை'அடைவதற்கான சிறந்த வாய்ப்பாகும்.அதற்கான வாய்ப்பு புதிய அமைச்சரவைக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.இளம் தலைமுறையினர் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பல சிக்கல்களை எதிர்க்கொண்டுள்ளமை வேதனைக்குரியன.தற்போதைய சவால்கள் மற்றும் சிரமங்களை சமாளிப்பளிப்பேன்,பொறுப்பிலிருந்து ஒருபோதும் விலக போவதில்லை.

பொது மக்கள் எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி நிலைமையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் ஒருதரப்பினர் தோற்றம் பெற்றுள்ளனர்.

இந்நிலைமையை கட்டுப்படுத்த அரசாங்கம் தலையிடும்.அரசியல் காரணங்களால் தாமதமாகி வரும் சில தீர்மானங்கள் எவ்வளவு கடினமாக இருந்தாலும் முன்னெடுக்கப்படும்.

சட்டம் இயற்றும் அதிகாரம் பாராளுமன்றிற்கு உரியது.

அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் பல்வேறு அரசியல் கட்சிகள் முன்வைக்கும் கருத்துக்கள் பாராளுமன்றில் நிறைவேற்றிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

தேவையான மாற்றங்களை செய்வதன் மூலம் நாடு தற்போதைய நெருக்கடியில் இருந்து மீண்டெழும். அதற்கு அவசியமான ஒத்துழைப்பை நாட்டு மக்கள் வழங்க வேண்டும் என்றார்.