அதிகாரங்களை வழங்கி விட்டு அழுது புலம்புதல்

Published By: Digital Desk 5

18 Apr, 2022 | 03:26 PM
image

சிவலிங்கம் சிவகுமாரன்

காலி முகத்திடலில்  ‘கோட்டா கம’ என்ற பெயரில் ‘கிராமம்’ ஒன்றை உருவாக்கி அதில் புத்தாண்டு கொண்டாட்டங்களை நிகழ்த்தி அரசாங்கத்துக்கு புதிய அனுபவங்களை தந்து கொண்டிருக்கின்றார்கள் மக்கள். 

அதேவேளை அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ‘கோட்டா என்ன  கம’ என்று பதாதைகளை காட்சிப்படுத்தி அங்கு அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை புலம் பெயர் சிங்கள மக்கள் முன்னெடுத்து வருகின்றனர். 

  நாட்டில் உருவாகியுள்ள மக்கள் எழுச்சிக்கும் அதற்குக் காரணமான பொருளாதார நெருக்கடிகளுக்கும் பிரதானமான காரணமாக தற்போது முன்வைக்கப்படும்  விடயம்  ஜனாதிபதியின் மிதமிஞ்சிய அதிகாரங்களாகும். இதை யார் அவருக்குக் கொடுத்தது என்ற கேள்வியும்  முக்கியமானது.

ஜனாதிபதிக்கு மிதமிஞ்சிய அதிகாரங்களை வழங்குவதற்கா மக்கள் தமது தொகுதி உறுப்பினர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தனர் என்று கேள்வி எழுப்பினால் அதற்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களிடம் பதில்கள் இல்லை. ‘மக்கள் ஆணை’ என்ற ஒரு விடயத்தை மட்டும் வைத்துக்கொண்டு இந்த நாட்டில் எதையுமே செய்து விடலாம் என்ற அதிகார போதையின் உச்சத்துக்கு சென்றதாலேயே பொது ஜன பெரமுன அரசாங்கத்துக்கு இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. 

அதிகாரத்தை வழங்கிய மக்களே அதை பறித்தெடுப்பதற்கு எழுச்சி பெற்றுள்ள நிலையில்,  இப்போது பலரும் தாம் 20ஆவது திருத்தத்துக்கு கை தூக்கியதற்காக மக்களிடம் மன்னிப்பு கோரி வருகின்றனர். 

நல்லாட்சி அரசாங்கத்தில் கொண்டு வரப்பட்ட 19 ஆவது திருத்தச்சட்டமே முதன் முறையாக ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து பாராளுமன்றத்துக்கு அதிகாரங்களைப் பெற்றுக்கொடுத்திருந்தது.

ஜனாதிபதி ,பிரதமர் உட்பட இந்த அரசாங்கமே பதவி விலக வேண்டும் என ஆரம்பித்துள்ள கோஷங்களுக்கு இடையே 20ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கி, ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து 21ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்படல் வேண்டும் என்ற குரல்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. 

ம ஹிந்த தரப்புக்கு ஆதரவாக செயற்பட்டு 20இற்கு ஆதரவளித்தவர் சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ச.  19ஐ இல்லாமல் செய்ததற்கு அவர் மனவருத்தத்தை வெளியிட்டுள்ளதோடு ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு யோசனையை பாராளுமன்ற செயலாளரிடம் கையளித்துள்ளார்.

அரசாங்கத்தின் அதிருப்தி எம்.பிக்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவும் அவ்வாறான ஒரு யோசனையை முன்வைக்கவுள்ளதாகத் தெரிவிக்கின்றார். 

ஒரு தனி மனிதரிடம் மிதமிஞ்சிய அதிகாரங்களை வழங்கினால் என்ன நடக்கும் என்பதை இலங்கை மக்களும் அரசியல்வாதிகளும் ராஜபக் ஷக்களின் ஆட்சி காலத்திலேயே அனுபவித்திருப்பர் என்றால் மிகையாகாது. 

நிறைவேற்று அதிகார முறையை கொண்டு வந்த ஜே.ஆர் ஜெயவர்தன கூட, தனது காலத்தில் இவ்வாறு செயற்பட்டதில்லை. நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக அனுபவித்தவர்கள் என்றால் அது முன்னாள் ஜனாதிபதி ம ஹிந்த ராஜபக் ஷ மற்றும் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ ஆகியோரே. 

மஹிந்தவின் ஆட்சி காலத்தில்  இந்த மிதமிஞ்சிய அதிகாரங்கள் குறித்து நாட்டு மக்கள் அக்கறை கொண்டிருக்கவில்லை. ஏனென்றால் அவ் அதிகாரங்களை வைத்தே நாட்டில் பயங்கரவாதம் ஒடுக்கப்பட்டது என்ற பிரசாரம் மக்களிடத்தே கொண்டு செல்லப்பட்டது. ஆனால் மஹிந்தவின் இரண்டாவது காலகட்டத்தில் மக்களின் மனதில் அதிருப்தி நிலவ காரணம், போர் முடிந்த பின்னரும் ராஜபக்ஷ குடும்பத்தினரின் அளவுக்கு மிஞ்சிய ஏகபோகமாகும். அது குறித்து எவரும் கேள்வி எழுப்ப முடியாத நிலைக்குக் காரணமும் அவர்கள் கைகளில் வைத்திருந்த நிறைவேற்று அதிகாரமே. 

  மஹிந்தவின் அரசியல் சிந்தாந்தங்களை நன்கு  அறிந்து கொண்ட அவரது தீவிர ஆதரவாளர்களாக இருந்த எம்.பிக்கள் மற்றும் அமைச்சர்கள், மஹிந்தவை அதிகாரத்தில் வைத்தால் மட்டுமே தமது ஜனநாயக விரோத செயல்களை முன்னெடுக்கலாம் என்பதை அறிந்து கொண்டனர்.  கோட்டாபய ஜனாதிபதியானதும் முதலில்  20ஆவது சரத்தை கொண்டு வருவதற்கு மிகவும் ஆர்வமாக இருந்தார். 

இதை மஹிந்த கூட ஆரம்பத்தில் விரும்பவில்லையென்று கூறப்பட்டது. ஆனால் பாராளுமன்றில் கோட்டா அணி– மஹிந்த அணி என இரண்டு பிரிவுகள் இருப்பதை மஹிந்த விரும்பியிருக்கவில்லை.  ஆகையால் ‘20’ குறித்து அவர் கூடுதலாக வாய் திறக்கவில்லை.

எனினும் தற்போது நாட்டு மக்கள் அனைவருமே ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்க வேண்டும் என்று கோஷமிட்டு வருகின்றனர். நிறைவேற்று அதிகாரமானது நாட்டின் சிறுபான்மை மக்களுக்கே ஆபத்தானது என்றும், அவர்களின் உரிமைகளை நசுக்குவதற்கே இது காலா காலமாக பயன்படுத்தப்பட்டு வந்தது என்று கூறப்பட்டாலும் தற்போது நாட்டின் பெரும்பான்மை இனமான  சிங்கள மக்களே, அதில்  தாமும் சிக்குண்டிருப்பதை தாமதமாக விளங்கிக்கொண்டிருக்கின்றனர். 

எல்லாவற்றையும் விட  மோசமான விடயம் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக கைகளை உயத்திய சிறுபான்மை  பிரதிநிதிகள்.  எதிர்த்தரப்பில் அமர்ந்திருந்த  முஸ்லிம் மற்றும் தமிழ் கட்சிகளின் உறுப்பினர்கள் இதற்கு ஆதரவாக கைகளை உயர்த்தி தமது சமூகத்துக்கே துரோமிழைத்து விட்டு ஒன்றும் நடவாதது போன்று அமர்ந்திருக்கின்றனர். 

பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிரான காலி முகத்திடல் ஆர்ப்பாட்டமானது, அரசாங்கத்தை பதவி விலகக்கோரி ஆரம்பிக்கப்பட்டாலும் தற்போது   ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்தல், ராஜபக்ஷ குடும்பத்தினர் பதுக்கி வைத்திருக்கும் மக்கள் பணத்தை மீட்டல் ஆகிய கோஷங்களை அதிகம் தாங்கி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

சித்திரைப்புத்தாண்டு விடுமுறையில் போராட்டத்தின் வீரியம் குறையும் என்று எதிர்ப்பார்த்த அரசாங்கத்துக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.  இதை விட பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் 225 பேரையும் வெறுக்கும் வாசகங்களும் கோஷங்களும் அதிகரித்துள்ளதால் எதிர்த்தரப்பிலுள்ள பிரதிநிதிகள் கூட குறித்த காலி முகத்திடல் பக்கம் போவதற்கு தயங்குகின்றனர். 

 ஏனென்றால் அரசாங்கத்துக்கு எதிராக நாடெங்கினும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வந்த போது, கண்டி மற்றும் அநுராதபுரம் பகுதியில் அரசாங்கத்துக்கு ஆதரவாக சிலர் வீதிகளில் இறங்கி மக்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டனர். இதையறிந்து அரசாங்கம் தனது இறுதி ஆயுதமான மதவாதத்தை கையிலெடுத்து, பெளத்த பிக்குகள் சிலரை களமிறக்கியது. 

ஆனால் அதுவும் எடுபடவில்லை. ஆக ஆளுந்தரப்பினருக்கே இந்த நிலை என்றால் எதிர்த்தரப்பினர் எங்ஙனம் பொது மக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் சென்று இணைந்து கொள்வது? தற்போது நாட்டு மக்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் அனைவருமே, அரசியல்வாதிகளை திருடர்களாகவே பார்க்கின்றனர். 

எதிர்த்தரப்பிலிருந்தாலும் ஏதாவதொரு வகையில் ஆளும் வர்க்கத்தினரின் மறைமுக ஆசிர்வாதங்களுடன் அவர்களும் ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதை மக்கள் அறிந்துள்ளனர். ஆகவே உணர்வுபூர்வமாக உருவாகிய மக்கள் எழுச்சியில் அரசியல்வாதிகளாக கலந்து கொள்வதற்கு எந்தவொரு தலைவர்களுக்கோ உறுப்பினர்களுக்கோ தைரியம் வரவில்லை. 

  எதிர்த்தரப்பில் இருக்கும் அனைத்து  கட்சிகளுக்குள்ளும்  ஒருமைப்பாடும் இது வரை ஏற்படவில்லை.   இந்த வாய்ப்பை அரசாங்கம் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டு வருகின்றது. 

எதிர்த்தரப்பினரை ஒன்றிணைக்கக் கூடிய சக்தி இன்னும் உருவாகவில்லை. இது அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அபாயகரான நிலைமையாகும். அரசாங்கமும் கணக்கிலெடுக்காத அதேவேளை மக்களும் கண்டு கொள்ளாத ஒரு அங்கத்தினர்களாக எதிர்த்தரப்பு பிரதிநிதிகள் மாறிக்கொண்டு வருகின்றனர். 

காலி முகத்திடல் மக்கள் போராட்டத்தில் அவர்கள் அரசியல்வாதிகளாக அல்லாது மக்கள் தலைவர்களாக தம்மை மாற்றிக்கொண்டு இணைந்தாலே மக்கள் மத்தியில் செல்லக்கூடியதாக இருக்கும். இல்லாவிட்டால் வரவேற்பும் வேறு மாதிரி தான் இருக்கும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்