அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை : நடுநிலைமை வகிப்பதற்கான காரணத்தை தெரிவித்தார் ஜீவன் தொண்டமான்

18 Apr, 2022 | 07:11 AM
image

(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 113 ஆதரவைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தால் , அதன் பின்னர் தமது வேலைத்திட்டங்கள் என்ன என்பதை ஐக்கிய மக்கள் சக்தி இதுவரையில் தெளிவுபடுத்தவில்லை. 

இதன் அடிப்படையிலேயே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இவ்விடயத்தில் நடுநிலைமை வகிப்பதாக அறிவித்தது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில் ,

ஐக்கிய மக்கள் சக்தி சமர்ப்பிக்கவுள்ள அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக கையெழுத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிலைப்பாட்டினை அண்மையில் நாம் அறிவித்திருந்தோம். 

இவ்விடயத்தில் நாம் நடுநிலைமை வகிப்போம் என்பதையே எமது நிலைப்பாடாக அறிவித்திருந்தோம்.

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதில் எமக்கு எவ்வித ஆட்சேபனையும் கிடையாது. 

அதற்கு ஆதரவு தெரிவிப்பதிலும் எவ்வித பிரச்சினையும் கிடையாது. ஆனால் இது தொடர்பில் எதிர்த்தரப்பினர் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு தெளிவுபடுத்த வேண்டும். 113 ஆசனங்கள் காணப்பட்டால் மாத்திரமே அரசாங்கத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும்.

எதிர்தரப்பிலிருந்து 113 ஆதரவைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தால் , அவர்களின் எதிர்கால திட்டம் என்ன என்பதையும் எமக்கு தெளிவுபடுத்த வேண்டும். 

ஆனால் அவர்களின் எதிர்கால திட்டம் தொடர்பில் இது வரையில் யாருக்கும் தெளிவுபடுத்தவில்லை. 

இதன் அடிப்படையிலேயே நாம் நடுநிலைமை வகிப்பதாக அறிவித்துள்ளோம். எதிர்வரும் ஓரிரு நாட்களில் இது தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெறும் என்று எதிர்பார்க்கின்றோம். அதன் பின்னர் நாம் தீர்க்கமானதொரு முடிவினை எடுப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right