(நெவில் அன்தனி)

இலங்கை கிரிக்கெட் அணியின் உதவி பயிற்றுநராக முன்னாள் டெஸ்ட் மற்றும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரர் நவீட் நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு வருட காலத்திற்கு அவரை உதவி பயிற்றுநராக நியமித்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இன்று காலை வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய பதவியை ஏற்பதற்கு முன்னர் பங்களாதேஷின் 19 வயதுக்குட்பட்ட அணியின் தலைமைப் பயிற்றுநராக நவாஸ் கடமையாற்றி இருந்தார். 

அத்துடன் ஐசிசி 19 வயதுக்குட்பட்ட 2020ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷை உலக சம்பியனாக்கிய பெருமையும் நவாஸை சாருகின்றது.

பங்களாதேஷுக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரே நவாஸ், உதவி பயிற்றுநராக செயல்படவுள்ள முதலாவது சர்வதேச கிரிக்கெட் போட்டியாகும்.

இதேவேளை, வேகப்பந்துவீச்சு பயிற்றுநராக சமிந்த வாஸும் சுழல்பந்துவீச்சு பயிற்றுநராக பியல் விஜேதுங்கவும் களத்தடுப்பு மற்றும் ஊக்குவிப்பு பயிற்றுநராக மனோஜ் அபேவிக்ரமவும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

பங்களாதேஷுக்கான கிரிக்கெட் விஜயத்தின்போது அணி முகாமையாளராக மஹிந்த ஹலாங்கொட செயற்படுவார் எனவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷுக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள 2 போட்டிகளைக் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரை முன்னிட்டு 23 வீரர்களைக் கொண்ட உத்தேச இலங்கை குழாம் நேற்று பெயரிடப்பட்டது.

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சித்தாகொங்கில் மே 15ஆம் திகதி முதல் 19ஆம் திகதிவரையும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டாக்காவில் மே 23ஆம் திகதி முதல் 27ஆம் திகதிவரையும் நடைபெறவுள்ளது.

முதலாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பதாக சட்டோக்ராம் விளையாட்டரங்கில் 2 நாள் (மே 11, 12) பயிற்சிப் போட்டியில் இலங்கை விளையாடும்.