சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விருது நகர் மாவட்டம் சிவகாசியில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இதுபோன்ற விபத்துக்களில் பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று சிவகாசி புறவழிசாலையில் உள்ள ஒரு பட்டாசுக் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ பரவியதில், அங்கு நிறுத்தி வைக்கப்படிருந்த இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களும் தீ பற்றி எரிவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 லொரிகள் எரிந்து கொண்டிருப்பதாக தெரிகிறது.

இதுபற்றி தீயனைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டிருப்பதால் ஏற்பட்ட கடுமையான புகை  மூட்டம் காரணமாக, தீயனைப்பு விரர்களால், பட்டாசு கிடங்கிற்குள் நுழைய முடியவில்லை. 

தீபாவளியை முன்னிட்டு ஏராளமான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. அவை அனைத்தும் பற்றி எரிவதால், பாதிப்பு அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முக்கியமாக, அந்த பட்டாசு கிடங்கில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.  தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீபாவளிக்காக தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை, அந்த கிடங்கிற்கு கொண்டு சென்று இறக்கி வைத்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட உராய்வின் காரணமாக பட்டாசுகள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.