பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக புனே, மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் புதன்கிழமை இரவு நடைபெற்ற ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் 12 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.
இந்த வருட ஐபிஎல் போட்டியில் என்ன விலை கொடுத்தேனும் முதலாவது வெற்றியை ஈட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் மும்பை இண்டியன்ஸ் பின்வரிசையில் துடுப்பாட்ட வீரர் ஒருவரைக் குறைத்து பந்துவீச்சைப் பலப்படுத்தியிருந்தது.
ஆனால், இருபது 20 கிரிக்கெட்டில் மிகவும் முக்கியமான கட்டங்களில் இழைக்கக்கூடாத தவறுகளை இழைத்ததால் (2 ரன் அவுட்கள்) மும்பை இண்டியன்ஸுக்கு இந்த வருடம் கிடைக்கவிருந்த முதலாவது வெற்றி கைநழுவிப் போனது.
பஞ்சாப் கிங்ஸ் நிர்ணயித்த 199 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 186 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.
13ஆவது ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ஓட்டங்களுடன் மிகவும் வலுவான நிலையில் மும்பை இண்டியன்ஸ் இருந்ததால் அவ்வணி வெற்றிபெறும் என அதன் இரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர்.
ஆனால், 21 ஓட்டங்கள் இடைவெளியில் திலக் வர்மா (36), கீரன் பொலார்ட் (10) ஆகிய இருவரும் அநாவசியமாக ரன் அவுட் முறையில் தங்களது விக்கெட்களைத் தாரைவார்த்தது மும்பையின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.
அத்துடன் அணித் தலைவர் ரோஹித் ஷர்மா (28), இஷான் கிஷான் (3) ஆகிய இருவரும் 4 பந்துகள் இடைவெளியில் ஆட்டம் இழந்ததால் மும்பை இண்டியன்ஸின் ஆரம்பமும் சிறப்பாக அமையவில்லை. (32-2 விக்.)
எவ்வாறாயினும் 'குட்டி ஏபி' என வருணிக்கப்படும் 18 வயதான டிவோல்ட் ப்றெவிஸ், 3ஆம் இலக்கத்தில் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 25 பந்துகளில் 5 சிக்ஸ்கள், 4 பவுண்டறிகள் அடங்கலாக 49 ஓட்டங்களைக் குவித்து அணிக்கு நம்பிக்கை ஊட்டியிருந்தார்.
மேற்கிந்தியத் தீவுகளில் இந்த வருட முற்பகுதியில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 2 சதங்கள், 3 அரைச் சதங்கள் அடங்கலாக 84.33 என்ற சராசரியுடன் மொத்தமாக 509 ஓட்டங்களைக் குவித்து திறமையை வெளிப்படுத்தியிருந்த ப்றெவிஸை, மும்பை இண்டியன்ஸ் தமது அணியில் இணைத்துக்கொண்டது.
ப்றெவிஸ் 3ஆவது விக்கெட்டில் வர்மாவுடன் 84 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
ப்றெவிஸ் ஆட்டமிழந்த பின்னர் திலக் வர்மா (131 - 4 விக்.), கீரன் பொலார்ட் (152 - 5 விக்.) ஆகிய இருவரும் ரன் அவுட் ஆனார்கள்.
எவ்வாறாயினும், அதிரடி வீரர் சூரியகுமார் யாதவ் சாதிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 43 ஓட்டங்களுடன் அவர் ஆட்டமிழக்க மும்பை இண்டியன்ஸின் எதிர்பார்ப்பு தகர்ந்தது.
பின்வரிசையில் துடுப்பாட்டத்தை பலப்படுத்தக்கூடிய எவரும் இருக்கவில்லை.
துடுப்பாட்டத்தில் ஓரளவு பிரகாசிக்கக்கூடியவர் என எதிர்பார்க்கப்பட்ட ஜெய்தேவ் உனத்கட் 10 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
முருகன் அஷ்வின் (ஆட்டமிழக்கவில்லை), ஜஸ்ப்ரிட் பும்ரா, டய்மல் மில்ஸ் ஆகிய மூவரும் ஓட்டம் பெறவில்லை.
பந்துவீச்சில் ஓடீன் ஸ்மித் 30 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கெகிசோ ரபாடா 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பஞ்சாப் கிங்ஸ், 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றது.
மயன்க் அகர்வால், ஷிக்கர் தவான் ஆகிய இருவரும் 57 பந்துகளில் 97 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தைத இட்டுக்கொடுத்தனர்.
மயன்க அகர்வால் 32 பந்துகளில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 52 ஓட்டங்களைப் பெற்றார்.
மொத்த எண்ணிக்கை 127 ஓட்டங்களாக இருந்தபோது ஜொனி பெயார்ஸ்டோவ் 12 ஓட்டங்களுடனும் மேலும் 3 ஓட்டங்கள் மாத்திரம் மொத்த எண்ணிக்கைக்கு சேர்ந்தபோது லியாம் லிவிங்ஸ்டன் 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
மறுமுனையில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த ஷிக்கர் தவான் 50 பந்துகளில் 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 70 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது களம்விட்டகன்றார் (151 - 4 விக்.)
ஜிட்டேஷ் ஷர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 15 பந்துகளில் தலா 2 சிக்ஸ்கள், பவுண்டறிகளை விளாசி 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
15 ஓட்டங்களைப் பெற்ற ஷாருக் கானுடன் 5ஆவது விக்கெட்டில் 46 ஒட்டங்களை ஷர்மா பகிர்ந்தார். ஓடீன் ஸ்மித் ஒரு ஒட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
மும்பை பந்துவீச்சில் பெசில் தம்பி 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM