துன்னையூர்
கலாநிதி ராம் தேவலோகேஸ்வரக் குருக்கள் சாரதா பீடம்
எமது பாரம்பரிய 60 வருட சுற்றின் 36 வருஷமாகிய ''சுபகிருது'' எனும் நாமம் கொண்ட புதுவருஷம் 14.04.2022 வியாழக்கிழமை காலை 7 மணி 50 நிமிட நேரத்தில் மலர்கின்றது.
இதன் பிரகாரம் பாரம்பரிய வாக்கிய பஞ்சாங்க கணிதப்படி பூர்வ திரயோதசி திதி, பூரம் நட்சத்திரம் 4ஆம் பாதம் விருத்தி நாமயோகம், கெளலவகரணம் மேட லக்னம் தனு நவாம்சம் எனும் பஞ்சாங்க சுபசேர்க்கைகள் அமைகின்றன.
விஷு புண்ணியகாலம் 14.04.2022 அதிகாலை 3 மணி 50 நிமிடம் முதல் முற்பகல் 11 மணி 50 நிமிடம் வரை இப்புண்ணிய காலத்தில் விதிப்படி மனதார உங்கள் குலதெய்வ சுவாமிகளை வணங்கி மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்து சிவப்பு அல்லது மஞ்சள் நிற புத்தாடை அணிந்து பவளம், புஷ்பராகம் இளைத்த ஆபரணம் தரித்து உங்கள் இல்லங்க ளில் சூரியனுக்கு பொங்கல் பொங்கி படைத்து வழிபாடு ஆற்றி விநாயகர் முதலான குல தெய்வ வழிபாடு செய்தல், பெரியோரை வணங்கி உற்றார், உறவினர்களுடன் அளவளாவி அறுசுவை உணவருந்தி புதிய வருஷ பலாபலன்களை கேட்டும் வாசித்தும் அறிந்து நற்சிந்தனையோடு இந்நாட்பொழதை கொள்ள வேண்டும்.
சங்கிரம தோஷ நட்சத்திரங்கள்
பரணி, மகம், பூரம், உத்தரம் 1ஆம் பாதம்,
பூராடம், உத்தராடம் 2,3, 4 ஆம் பாதம், திரு
வோணம், அவிட்டம் 1,2 ஆம் பாதம் இவர் கள் தவறாது மருத்து நீர் ஸ்நானம் செய்து இயன்ற தான தர்மம் செய்ய வேண்டும்.
கைவிஷேட நேரம்
14.04.2022 வியாழன் காலை 7.57 முதல் 8.47 வரை மற்றும் காலை 10.36 முதல் 11.56 வரை.
புதுவியாபாரம் புதுக்கணக்கு
14.04.2022 வியாழன் காலை 10.36 முதல் 11.56 வரை
15.04.2022 வெள்ளி காலை 8.36 முதல் 9.51 வரை
ராசிகளின் ஆதாய வியயம்
மேடம் – 14 வரவு 14 செலவு சமம்
இடபம் – 8 வரவு 8 செலவு சமம்
மிதுனம் – 11 வரவு 5 செலவு லாபம்
கடகம் – 11 வரவு 11 செலவு சமம்
சிங்கம் – 8 வரவு 14 செலவு நஷ்டம்
கன்னி – 11 வரவு 5 செலவு லாபம்
துலாம் – 8 வரவு 8 செலவு சமம்
விருட்சிகம் – 14 வரவு 14 செலவு சமம்
தனுசு – 2 வரவு 8 செலவு நஷ்டம்
மகரம் – 5 வரவு 2 செலவு லாபம்
கும்பம்– 5 வரவு 2 செலவு லாபம்
மீனம் – 2 வரவு 8 செலவு நஷ்டம்
13.04.2022 புதன்கிழமை பின்னிரவு குருபகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி பெறுகின்றார். இதன் பின்னராக நம் இலங்கை நாட்டில் படிப்படியான நன்மைகள் அமையும்.
புதிய சுபகிருது எனும் வருஷம் நல்ல மழை, தானிய விருத்தி, கல்வி விருத்தி, இயந்திர தொழில் வளர்ச்சி, உணவு பொருள் விருத்தி, வருட பிற்பகுதி அதிக மழை என்பன அமையும்.
வருடத்தின் பிற்பகுதி அரசியல் குழப்பம் அமையும். மக்கள் நிலையில் அதிக செலவீனங்கள் அமையும். 'எல்லா எம் மனமே' என்பதை உறுதியாக்கி நல்லதை நினைத்து நல்லதை செய்யுங்கள். எல்லாம் நலமே அமைய இந்த சுபகிருது வருஷம் அனைத்து மக்களுக்கும் நல்ல சுகபோகம் கொடுத்து மகிழட்டும்.
மேட ராசி:
(அஸ்வினி,பரணி, கார்த்திகை 1ஆம் பாதம்)
எதையும் சகித்து மன தைரியத்தோடு போராடும் மேடராசி அன்பர்களே! உங்களுக்கு இந்த புதிய சுபகிருது வருஷம் ஓரளவிற்கு அனுகூலமானதாக அமையும் நிலை உண்டு. உங்களின் ராசிக்கு குருபகவான் சுப விரயஸ்தானமாகிய 12ஆம் இடம் அமைகின்றார்.
எனவே நல்ல காரியங்களுக்கு உங்களின் பணம் செலவீடு செய்யும் நிலை அமையும். எதிர்பாராத சிறு சிறு திடீர் நன்மைகள் உங்களைச் சூழும் நிலை யிருக்கும். குடும்ப நிலையில் ஓரளவிற்கு அனுகூலமான நன்மைகள் அமையும்.
தொழில் நிலையில் சற்று வேலைப்பளு அலைச்சல் நிலை இருக்கும். சனீஸ்வரன் சஞ்சாரம் ஜீவனஸ்தானம் எனும் 10 ஆம் இடம் அமைவதால் தொழில் நிலைகளில் மிகவும் பொறுமை நிதானமுடன் செயற்படுவது மிகவும் நன்மை தரும். புதிய விடயங்கள் புதிய முயற்சிகளில் சற்று மந்தமான நிலை இருக்கும்.
இழுபறி, தடை,தாமத நிலைகள் அமையும். ராகு 1ஆம் இடம் கேது 7ஆம் இடம் என அமைவது உடல் நிலை சார்ந்த சிறு சிறு உபாதைகள் இருக்கும். எதையும் திட்டமிட்டு செய்ய முடியாத நிலை அமையும். பெண்களுக்கு மனச்சஞ்சலம், யோசனை சற்று அதிகமாக அமையும்.
குடும்ப உறவுகளுடன் சற்று மனஸ்தாப நிலை ஏற்படும். தேவையற்ற விடயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து செயற்படுவது மிகவும் நன்மை தரும். மாணவர்களின் கல்வி நிலையில் சற்று மந்தமான பலன் இருக்கும். சுபகிருது வருஷம் மேடராசி அன்பர்களுக்கு பெரும் சிரமங்கள் கஷ்ட நிலைகள் தராது. சுபகிருது வருட பலன் 60% நன்மையாகும்.
இடபராசி
(கார்த்திகை, 2,3,4 ஆம் பாதம் ரோகினி, மிருகசீரிடம், 1,2ஆம் பாதம்)
ஒவ்வொரு விடயத்திலும் தன்போக்கான செயலை முதன்மைப்படுத்தும் குண இயல்பை கொண்ட இடபராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு இந்த சுபகிருது வருஷம் மிகவும் சிறப்பான யோகமான நற்பலன்களைக் கொடுக்கும் நிலையுண்டு.
உங்களுக்கு குருவின் கோசார சஞ்சாரம் லாபஸ்தானமாகிய 11ஆம் இடம் அமைவது எதிர்பார்ப்புகளில் நல்ல வெற்றிகள் அமையும். குடும்பத்தில் அனுகூலமான நன்மைகள் ஏற்படும்.
தொழில் நிலையில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். பண வரவு மிகவும் திருப்திகரமானதாக இருக்கும். எதையும் சமாளித்து வெற்றிகள் பெறும் நிலை சிறப்பாக அமையும்.
சனீஸ்வரன் பாக்கியஸ்தானமாகிய 9ஆம் இடம் அமைவதன் மூலம் எதிர்பாராத நன்மைகள் அமையும். குடும்ப நிலை சார்ந்த சுபகாரியம் அமையும். எடுக்கின்ற புதிய முயற்சிகளில் நல்ல வெற்றிகள் இருக்கும். எதையும் திட்டமிட்டு செய்யக்கூடிய நிலைகள் ஏற்படும்.
தொழில் சார்ந்த வெளிநாட்டு பயணங்கள் அமையும். கடன் நிலைகளில் சுமுகமான பலன் ஏற்படும். வழக்கு விவகாரங்களில் நல்ல வெற்றிகள் அமையும்.
உங்கள் ராசிக்கு ராகு 12ஆம் இடம் கேது 6ஆம் இடம் என அமைவதும் சிறப்பு நிலையே. உங்களின் புதிய திட்டம் செயல்களை அனுகூலமாக்கி வெற்றிெபற மிகவும் சிறந்த வருஷமாகும்.
மாணவர்களின் கல்வி நிலையில் நல்ல முன்னேற்றம் அமையும்.வெளிநாட்டு பலாபலன்களுக்கும் இடமுண்டு. எனவே இந்த சுபகிருது வருஷத்தில் நற்பலன் அதிகமாக அமையும். 90% நன்மைகள் உண்டு.
மிதுன ராசி
(மிருகசீரிடம் 3,4ஆம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ஆம் பாதம்)
எதையும் மிகவும் நிதானமாக பொறுமையாக செயற்படுத்தி வெற்றிகாணும் ஆற்றல் கொண்ட மிதுனராசி அன்பர்களே! உங்களின் ராசிக்கு இந்த சுபகிருது வருஷம் ஓரளவுக்கு நல்ல அனுகூலம் தரும் நிலையுண்டு.
அதற்காக நீங்கள் மிகவும் பிரயத்தனம் முயற்சி எடுக்கவேண்டும். உங்களுக்கு குருவின் கோசார நிலை ஜீவனஸ்தானமாகிய 10ஆம் இடம் அமைகின்றது.
எனவே தொழில் சார்ந்த வேலைப்பளு சற்று அதிகமாகவே இருக்கும். தொழில் நிலைகளில் திடீர் பிரச்சினைகள் ஏற்படும். எந்தவிடயம் என்றாலும் சற்று பொறுமை நிதானம் கொண்டு செயற்படவேண்டும்.
தொழில் நிலையில் பதவிகள் மாற்றம் அல்லது இடமாற்றம் என்பன அமையலாம். எனவே அவற்றை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். சனீஸ்வரன் சஞ்சாரம் அட்டமஸ்தானம் அமைவதால் உடல் நிலை சார்ந்த சிறு சிறு உபாதைகள் இருக்கும்.
மருத்துவ செலவுகள் அமையும். குடும்ப நிலையில் மனச்சஞ்சலமான நிலைகள் இருக்கும். எதையும் திட்டமிட்டு செய்ய முடியாத நிலை அமையும்.
ராகுவின் சஞ்சாரம் 11ஆம் இடம் கேதுவின் சஞ்சாரம் 5 ஆம் இடம் என அமைவது மூத்த சகோதரர்களுடன் சஞ்சல நிலை. பிள்ளைகளின் மூலமாக பிரச்சினை போன்ற பலாபலன்கள் எதிர்கொள்ளும் நிலைகள் இருக்கும். மிகவும் நிதானமாக உங்களின் காரியங்களை காய்நகர்த்தி செய்வதே மிகவும் நல்லது.
திருமணம் போன்ற சுபகாரியங்கள் இழுபறி நிலை இருக்கும். கடன் பிரச்சினைகளில் சற்று சிரமங்கள் அமையும். பெண்களுக்கு மனச்சஞ்சல நிலை சற்று அதிகமாக இருக்கும்.
மாணவர்களின் கல்வி நிலையில் அதிக கவனம் எடுக்கவேண்டும். உங்களின் நடைமுறைகளின் மூலமாகவே ஓரளவுக்கு அனுகூலங்களை பெறலாம். 45% நன்மை அடைய இடமுண்டு.
கடக ராசி
(புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயிலியம்)
எதிலும் சலனமும் சந்தேகமும் கொண்டு செயற்படுகின்ற கடகராசி அன்பர்களே! உங்களுக்கு இந்த சுபகிருது வருஷம் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வருஷமாக அமையும் நிலை உண்டு. பாக்கியஸ்தானமாகிய 9ஆம் இடம் குருபகவான் அமைகின்றார்.
எனவே தொழில்சார்ந்த நல்ல முன்னேற்றம் சிறப்பாக அமையும். பண வரவு மிகவும் திருப்திகரமானதாக இருக்கும். குடும்ப நிலை சார்ந்த முன்னேற்றம் சிறப்பாக அமையும். திருமணம் போன்ற சுபகாரியம் எதிர்பார்க்கின்றவர்களுக்கு அப்பலன் நிறைவாக அமையும்.
வெளிநாட்டு பிரயாணம் எதிர்பார்க்கின்றவர்களுக்கு அப்பலன் நிறைவாக அமையும். கடன் பிரச்சினைகள் நீங்கி சுமுகமான நிலை ஏற்படும். வழக்கு விவகாரங்கள் வெற்றி நிலையைக் கொடுக்கும். தந்தை வழி சொத்துக்கள் சேரும் நிலைகள் ஏற்படும்.
சனீஸ்வரனின் 7ஆம் இட சஞ்சாரம் குடும்ப உறவினர்களுடன் இடையிடையே சிறு சிறு மனச்சஞ்சலம் கொடுக்கும். தேவையற்ற சிறு சிறு அலைச்சல் நிலைகளையும் தரும். பொறுமை நிதானமுடன் செயற்படுவது மிகவும் நல்லது.
ராகுவின் 10ஆம் இடம் கேதுவின் 4ஆம் இடம் சஞ்சாரங்கள் சற்று வேலைப்பளு அலைச்சல் நிலைகளையும் கொடுக்கும். மாணவர்களின் கல்வி நிலையில் முன்னேற்ற நிலைகள் அமையும். எதையும் திட்டமிட்டு மனக்குழப்ப நிலை இல்லாமல் நிதானமாக நீங்கள் செயற்பட்டால் நல்ல வெற்றிகள் அமையும். 70% சுபகிருது வருடம் நன்மை தரும்.
சிம்ம ராசி
(மகம், பூரம், உத்தரம் 1ஆம் பாதம்)
தைரியமான செயற்றிறன் அதிகமாக கொண்ட சிம்ம ராசியினரே உங்களின் ராசிக்கு குருபகவான் அட்டமஸ்தானம் அமைந்திருக்கின்றார். இந்த சுபகிருது வருஷம் சற்று போராட்டமான நிலையைத் தரும்.
எடுக்கின்ற முயற்சிகளில் காரியத்தடை, இழுபறிநிலை என்பன இருக்கும். குடும்ப நிலையில் சற்றுக் குழப்பமான பலன்கள் இருக்கும். எந்த விடயம் என்றாலும் பொறுமை, நிதானமுடன் செயற்பட வேண்டும். குடும்ப உறவினர்களுடன் சிறு சிறு சஞ்சல நிலைகள் இருக்கும்.
தொழில் நிலைகளில் தேவையற்ற பிரச்சினைகள், சிக்கல் நிலைகள் அமையும். திருமணம் போன்ற சுபகாரியங்களை எதிர்பார்க்கின்றவர்களுக்கு அப்பலன் சற்று இழுபறி நிலைகளைக் கொடுக்கும். மிகவும் முயற்சி செய்யும் விடயங்களில் உடனடியாக வெற்றிநிலை அமையும் பலன் இருக்காது.
உங்கள் ராசிக்கு 6ஆம் இடம் அமையும். சனீஸ்வரன் எதிர்பாராத திடீர் நன்மைகள் அனுகூல பலன்கள் கொடுக்கும் நிலை இருக்கும். ராகுவின் 9ஆம் இட சஞ்சாரம் தந்தை வழி செலவீனங்களை கொடுக்கும். கேதுவின் 3ஆம் இட சஞ்சாரம் எதிர்பாராத நற்பலன் கொடுக்கும்.
எனவே இந்த சுபகிருது வருடத்திலே பெரும் சிறப்புகளை நற்பலன்களை தொடர்ந்து எதிர்பார்க்க முடியாத நிலை இருக்கும்.
பெண்களுக்கு மனச்சஞ்சல நிலை அதிகமாக அமையும். குடும்பத்தில் சிறு சிறு சிக்கல் நிலைகள் இருக்கும். மாணவர்களின் கல்வி நிலையிலே சற்று கூடுதல் முயற்சி எடுக்கவேண்டும். இந்த சுபகிருது வருஷம் மத்திமமானதாக அமையும். 55% நன்மைகள் அமையும்.
கன்னி ராசி
(உத்தரம், 2,3,4ஆம் பாதம், அத்தம், சித்திரை 1,2 ஆம் பாதம்)
காத்திரமான செயற்பாடும் எதையும் ஆராய்ந்து கொள்ளும் குண இயல்பும் கொண்ட கன்னிராசி அன்பர்களே ! உங்கள் ராசி நிலைக்கு இந்த சுபகிருது வருஷம் ஓரளவுக்கு அனுகூலமானதாக அமையும் பலன் உண்டு.
உங்கள் ராசிக்கு குருபகவான் களத்திரஸ்தானமாகிய 7ஆம் இடம் அமைவது குடும்ப நிலை சார்ந்த நல்ல அனுகூலங்கள் அமையும்.
உறவினர்களின் மூலமாக சுமுகமான பலன்கள் ஏற்படும். திருமணம் போன்ற சுபகாரியம் எதிர்பார்க்கின்றவர்களுக்கு அப்பலன் நிறைவானதாக அமையும். எதிர்பார்ப்புகளில் ஓரளவு வெற்றிகள் ஏற்படும்.
உங்களின் ராசிக்கு சனீஸ்வரன் சஞ்சாரம் 5ஆம் இடம் அமைவது பிள்ளைகளின் மூலம் சிறு சிறு சிக்கல், பிரச்சினைகள் இருக்கும். திடீர் செலவுகள் அமையும்.
பிள்ளைகளோடு மனச்சஞ்சல நிலை இருக்கும். ராகுவின் 8ஆம் இட சஞ்சாரம், கேதுவின் 2ஆம் இட சஞ்சாரம் என்பன உடல் நிலை சார்ந்த சிறு சிறு சுகயீனங்கள், மருத்துவ செலவுகள், குடும்ப நிலையில் திடீர் குழப்ப நிலைகள், சஞ்சல நிலைகள் என்பன இடையிடையே அமையும்.
பெண்களுக்கு மன மகிழ்வான விடயங்கள் அமைய இடமுண்டு. மாணவர்களின் கல்வி நிலை ஓரளவு திருப்திகரமாக அமையும். சாணக்கியத்தோடு செயற்பட்டால் 70% நன்மைகள் அமையும்.
துலாம் ராசி:
(சித்திரை 3, 4ஆம் பாதம், சுவாதி, விசாகம், 1, 2, 3ஆம் பாதம் )
எல்லா விடயத்திலும் சரியாக நியாயமாக செயற்படும் குணமும் செயலும் கொண்ட துலா ராசி அன்பர்களே! உங்களுக்கு இந்த சுபகிருது வருஷம் சற்று சுமாரான மத்திமமான பலன்களே அமையும் நிலையுண்டு.
உங்களின் ராசிக்கு குருபகவான் ரோகஸ்தானமாகிய 6ஆம் இடம் அமைகின்றார். எனவே தேவையற்ற வீண் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைகள் இருக்கும்.
பண வரவு சற்று மத்திமமானதாகவே அமையும். தொழில் நிலைகளில் சற்று சிரமங்கள் பிரச்சிைனகள் இருக்கும். கடன் நிலைகளில் சிக்கல் இழுபறி நிலைகள் அமையும்.
எதையும் திட்டமிட்டு செய்ய முடியாத நிலை இருக்கும். மன நிலையில் குழப்பங்கள் சற்று அதிகமாக அமையும். அதற்கு ஏற்ப உங்களின் செயற்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.
உங்கள் ராசிக்கு சனீஸ்வரன் 4ஆம் இடம் அமைவது உடல்நிலைச்சோர்வு, மனச்சஞ்சலம், தேவையற்ற அலைச்சல் நிலைகள் என்பன இருக்கும். அதற்கு ஏற்ப நிதானம் வேண்டும்.
தொழில்சார்ந்த வேலைப்பளு அதிகமாக அமையும். எதையும் திட்டமிட்டு செய்ய முடியாத நிலை அமைந்திருக்கும். மற்றும் ராகு 7ஆம் இடம் கேது 1ஆம் இடம் என அமைவது சிரமங்கள் அதிகமாக இருக்கும்.
குடும்ப நிலையில் சிக்கல், இழுபறி நிலைகள் இருக்கும். உறவினர்களுடன் சஞ்சல நிலை அமைந்திருக்கும். உடல் நிலையில் சிறு சிறு சுகயீனங்கள் ஏற்பட்டு மறையும்.
உங்கள் ராசிக்கு குருபகவான் 3, 6 ஆதிபத்தியம் பெற்ற 6ஆம் இடம் அமைவதால் திடீர் ராஜயோகம் எனும் நிலையில் நற்பலன்கள் அமையவும் இடமுண்டு.
பெண்களுக்கு சற்று மத்திமமான மந்தமான பலன்களே அமையும் சஞ்சல நிலை இருக்கும். மாணவர்கள் கல்வி நிலையில் மிகவும் பொறுமை, நிதானம் கொண்டு செயற்பட வேண்டும். இந்த சுபகிருது வருஷம் பெரும் நன்மைகளை எதிர்பார்க்க முடியாத நிலை இருக்கும். 65% நன்மைகள் அமைய இடமுண்டு.
விருட்சிக ராசி
(விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
எதையும் நிதானித்து சாணக்கியத்தோடு செயற்படும் விருட்சிக ராசி அன்பர்களே! உங்களுக்கு இந்த சுபகிருது வருஷம் மிகவும் சிறப்பான அனுகூலமான பலன்கள் கொடுக்கும்.
எடுக்கின்ற முயற்சிகளில் நல்ல வெற்றிகள் அமையும். தொழில் சார்ந்த முன்னேற்றம் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
உங்களின் ராசிக்கு குருவின் சஞ்சாரம் பஞ்சமஸ்தானமாகிய 5ஆம் இடம் அமைவது எதிர்பார்ப்புகளில் நல்ல வெற்றிகள் அமையும். குடும்ப நிலையில் அனுகூலமான நன்மைகள் இருக்கும்.
பணவரவு மிகவும் திருப்திகரமானதாக அமையும். திருமணம்போன்ற சுபகாரியம் எதிர்பார்க்கின்றவர்களுக்கு அப்பலன் நிறைவானதாக கிடைக்கும்.
சனீஸ்வரனின் 3ஆம் இட சஞ்சாரம் காரிய தடைகளை நீக்கி நல்ல முன்னேற்றம் கொடுக்கும். தொழில் சார்ந்த திடீர் பணவரவுகள், வெளிநாட்டு பிரயாணம் என்பன அமையும்.
எதையும் ஓரளவுக்கு வெற்றி கொள்ளும் நிலை ஏற்படும். ராகுவின் 6ஆம் இட சஞ்சாரம் கேதுவின் 12ஆம் இட சஞ்சாரம் என்பன நீண்டகால சிக்கல் இழுபறி நிலைகளுக்கு சுமுகமான பலன்களைக் கொடுக்கும்.
பெண்களுக்கு மன மகிழ்வும் சுபகாரிய நிலைகளும் சிறப்பாக அமையும். உறவினர்களின் நல்ல உதவிகள் அமையும். மாணவர்களின் கல்வி நிலை மிகவும் சிறப்பானதாக அமையும். இந்த சுபகிருது வருஷத்தில் அதிகமான நற்பலன்களை பெறக்கூடியதாக இருக்கும். அதற்கு ஏற்ப 85 % நன்மைகள் தரும்.
தனுசு:
(மூலம், பூராடம், உத்தராடம் 1ஆம் பாதம்)
எல்லாவிடயத்திலும் சுயநல லாபம் எதிர்பார்த்து செயற்படும் குண இயல்பு கொண்ட தனுசு ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு சுபகிருது வருஷம் சற்று மத்திமமான சுமாரான பலன்களை கொடுக்கும் நிலை உண்டு.
எடுக்கும் முயற்சிகளில் பொறுமை, நிதானமுடன் செயற்பட வேண்டும். தொழில்நிலை சார்ந்த வேலைப்பளு சற்று அதிகமாக அமைந்திருக்கும்.
எடுக்கும் முயற்சிகளில் இழுபறி, தாமத நிலைகள் அமையும். குடும்ப நிலையில் சிறு சிறு மந்தமான நிலை இருக்கும். உறவினர்களுடன் சற்று சஞ்சலமான நிலை இருக்கும்.
உங்களின் ராசிக்கு ஏழரைச் சனி சஞ்சாரம் கடைக்கூறு நடைபெறுகின்றது. எனவே தேவையற்ற பிரச்சினைகள், சிக்கல் நிலைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும்.
கடன் பிரச்சினைகள் சூழும் நிலை அமைந்திருக்கும். எதையும் திட்டமிட்டு செய்ய முடியாத நிலை இருக்கும். பண வரவு சற்று மத்திமமானதாகவே அமைந்திருக்கும்.
ராகுவின் 5ஆம் இட சஞ்சாரம் கேதுவின் 11ஆம் இட சஞ்சாரம் என்பன பிள்ளைகளின் மூலமாக செலவீனங்கள், மனச்சஞ்சல நிலைகள் மற்றும் மூத்த சகோதரர் வழியே சிக்கல், இழுபறி நிலைகள் என்பன அமையும் நிலை இருக்கும்.
எந்தவிடயம் என்றாலும் பொறுமை, நிதானமுடன் செயற்படவேண்டும். மனச்சஞ்சலம், யோசனை என்பன அதிகமாக இருக்கும்.
எனவே அதற்கேற்ப உங்களின் செயற்பாடுகளை நிதானமாக்கி செயற்படவும். மாணவர்களின் கல்வி நிலையில் கூடுதல் முயற்சி எடுப்பது நல்லது. பரீட்சையில் நிதானம் தேவை. இந்த சுபகிருது வருடம் 60% நன்மை உண்டு.
மகர ராசி:
(உத்தராடம், 2,3 4 ஆம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 ஆம் பாதம்)
மனதில் நினைப்பதை எப்படியும் செய்து முடிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டு செயற்படும் மகரராசி அன்பர்களே உங்களின் ராசிக்கு சுபகிருது வருஷத்தின் பலன்கள் மத்திமமானதாக அமையும் நிலை உண்டு.
தொழில் சார்ந்த பிரச்சினைகள் அதிகமாக இருக்கும். குடும்ப நிலையில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் இழுபறியான நிலை இருக்கும். உங்கள் ராசிக்கு குருபகவான் 3ஆம் இடம் அமைவதால் சிக்கல், இழுபறிகள் தொடரும் நிலை இருக்கும்.
அத்தோடு உங்களுக்கு ஏழரை சனி, ஜென்மசனி சஞ்சாரம் அமைகின்றது. எனவே மன நிலையில் சஞ்சலம், போராட்ட நிலை அதிகம் இருக்கும்.
உடல்நிலை சார்ந்த உபாதைகள், மருத்துவ செலவுகள் அமையும். சிறு சத்திரசிகிச்சை அமையும் நிலை இருக்கும். ராகுவின் 4ஆம் இட சஞ்சாரம் கேதுவின் 10ஆம் இட சஞ்சாரம் என்பன உடல்நிலை உபாதைகள், தொழில்நிலை சார்ந்த அலைச்சல் நிலை அமையும். எதையும் திட்டமிட்டு செய்ய முடியாத நிலைகள் இருக்கும்.
அதற்கேற்ப பொறுமை, நிதானமுடன் செயற்படுவது நல்லது. பெண்களுக்கு சற்று மனச் சஞ்சலமான நிலை இருக்கும். குடும்ப நிலையில் சிறு சிறு சஞ்சல நிலை அமையும்.
மாணவர்களின் கல்வி நிலையில் கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும். பரீட்சைகளில் சற்று நிதானத்துடன் பொறுமையுடன் செயற்படவேண்டும். பொதுவாக இந்த சுபகிருது வருஷம் சற்று மத்திமமான பலன்களையே கொடுக்கும். அதற்கு ஏற்ப சாதுரியமாக செயற்பட்டு அனுகூலம் பெறவும். 50% பலன்கள் அமையும்.
கும்ப ராசி
( அவிட்டம், 2,3,4 ஆம் பாதம் சதயம், பூரட்டாதி 1,2,3 ஆம் பாதம்)
எல்லா விடயத்திலும் எப்படி அணுகி வெற்றி காண வேண்டும் எனும் தந்திரமும் சாணக்கியமும் நன்கு கொண்ட கும்பராசி அன்பர்களே! உங்களின் ராசி நிலைக்கு சுபகிருது வருஷம் ஓரளவுக்கு அனுகூலமான நற்பலன்களை கொடுக்கும் நிலை உண்டு.
உங்களுக்கு குருபகவானின் சஞ்சாரம் தனஸ்தானமாகிய 2ஆம் இடம் அமைவது சிறப்பு நிலை. எடுக்கும் முயற்சிகளில் ஓரளவுக்கு அனுகூல வெற்றிகள் அமையும்.
தொழில் நிலை சார்ந்த அனுகூலங்கள் சிறப்பாக அமையும். பண வரவு ஓரளவு தேவைகளை பூர்த்தி செய்யும் நிலை இருக்கும்.
குடும்ப நிலையில் அனுகூலமான நிலை அமையும். இவை குருவின் தனஸ்தான சஞ்சாரம் மூலமாக அமையும். இருப்பினும் உங்கள் ராசிக்கு ஏழரை சஞ்சாரம் நடைபெறுவதால் திடீரென எதிர்பாராத பிரச்சினைகள், சிக்கல் நிலைகள் சூழும் பலன் இருக்கும்.
அதற்கேற்ப சற்று உங்களின் காரியங்களில் நிதானத்தோடும் பொறுமையோடும் செயற்படவேண்டும். தேவையற்ற விடயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்துக்கொள்வது நல்லது.
ராகு 3ஆம் இடம், கேது 9ஆம் இடம் என அமைவது சிறு சிறு சிக்கல் நிலை சகோதரர் மூலமும் தந்தை வழி மூலமும் அமையும் நிலை இருக்கும்.
அதற்கேற்ப புதிய திட்டங்களில் நிதானத்தோடு செயற்படவும். பெண்களுக்கு சற்று குழப்பமான நிலை அமையும். மாணவர்கள் கல்வி நிலையில் கூடிய முயற்சி எடுக்கவேண்டும். பரீட்சைகளில் கவனம் தேவை. பொதுவாக இந்த சுபகிருது வருடம் ஓரளவுக்கு நன்மை தரும். 70% நன்மைகள் அமையும்.
மீனம்:
(பூரட்டாதி, 4ஆம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி)
எல்லாவிடயத்திலும் தம்மை அடையாளப்படுத்தி செயற்படும் குண இயல்பு கொண்ட மீன ராசி அன்பர்களே! உங்களின் ராசிக்கு இந்த சுபகிருது வருடம் சற்று மத்திமமானதாகவே அமையும்.
எடுக்கின்ற முயற்சிகளில் பொறுமை , நிதானம் தேவை. தொழில் சார்ந்த அலைச்சல் நிலை இருக்கும். உங்களின் ராசியில் ஜென்மஸ்தானமாக குருபகவான் அமைகின்றார்.
எனவே எடுக்கின்ற விடயங்கள் யாவும் மிகவும் பொறுமை நிதானம் கொண்டு செயற்பட வேண்டும். பணவரவு சற்று மத்திமமானதாகவே அமையும்.
குடும்ப நிலையில் சிறு சிறு பிரச்சினைகள், சிக்கல் நிலை இருக்கும். தொழில் சார்ந்த வேலைப்பளு சற்று அதிகமாகவே அமையும். உடல்நிலை சார்ந்த சுகயீனம், மருத்துவ செலவு என்பன இருக்கும்.
கடன் நிலை சார்ந்த சிக்கல் நிலை அமையும். மிகவும் நிதானமுடன் செயற்படுவது நல்லது. சனீஸ்வரனின் சஞ்சாரம் ஜீவனஸ்தானமாகிய 10ஆம் இடம் அமைவது தொழில் நிலை சார்ந்த சிக்கல் இழுபறி நிலைகள் அமையும்.
அதற்கேற்ப தொழில் நிலையில் நிதானமாக செயற்பட வேண்டும். ராகுவின் 2ஆம் இட சஞ்சாரம் கேதுவின் 8ஆம் இட சஞ்சாரம் என்பன குடும்ப நிலை சார்ந்த பிரச்சினைகள், அலைச்சல் நிலை, தேவையற்ற செலவீனங்கள், சமூகத்தில் தேவையற்ற விமர்சனங்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும்.
பெண்களுக்கு குடும்ப நிலை சார்ந்த சிறு சிறு சிக்கல் அமையும். உறவினர்களுடன் மனச்சஞ்சலம் போன்ற நிலை இருக்கும். மாணவர்களின் கல்வியில் சிக்கல் இழுபறி நிலை இருக்கும். பரீட்சையில் கூடிய கவனம் எடுக்கவேண்டும். பொதுவாக இந்த சுபகிருது வருஷத்தில் பெரும் நன்மைகளை எதிர்பார்க்க முடியாது. 55% நன்மைகள் அமையும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM