(நா.தனுஜா)

நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை கேள்விக்குள்ளாயிருக்கும் சூழ்நிலையில், அதனால் உருவாகும் இடைவெளியில் இராணுவத்தின் ஆதிக்கம் மேலோங்கக்கூடிய அச்சுறுத்தல்நிலை காணப்படுவது குறித்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்துள்ளார்.

Articles Tagged Under: சுமந்திரன் | Virakesari.lk

தற்போது நாடு பொருளாதார நெருக்கடிக்கு மாத்திரமன்றி, அரசியல் ரீதியான நெருக்கடிக்கும் முகங்கொடுத்திருக்கும் சூழ்நிலையில், இதுகுறித்து இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், நெதர்லாந்து, ஐரோப்பிய ஒன்றியம், சுவிஸ்லாந்து உள்ளிட் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளிடம் கலந்துரையாடியிருக்கும் எம்.ஏ.சுமந்திரன், அவர்களிடன்  நாட்டின் தற்போதைய நிலைவரம் குறித்து விளக்கமளித்துள்ளார். 

குறிப்பாக நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாதபோது, அதனால் உருவாகக்கூடிய இடைவெளியில் இராணுவத்தின் ஆதிக்கம் மேலோங்கக்கூடிய அபாயம் காணப்படுவது பற்றி சில நாடுகளின் பிரதிநிதிகளிடம் அவர்  எடுத்துக்கூறியுள்ளார். அதற்குப் பதிலளித்த அவர்கள், இவ்விடயம் தொடர்பில் தமது கரிசனையையும்  பதிவுசெய்வதாகத் தெரவித்துள்ளனர். 

அதுமாத்திரமன்றி நாட்டின் பொருளாதார நெருக்கடியைக் கையாள்வதற்கான உதவிகளைப் பெறுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதேவேளை சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தின் 4 ஆம் சரத்திற்கு அமைவாக சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவினால் இலங்கை தொடர்பில் தயாரிக்கப்பட்ட மதிப்பீட்டு அறிக்கையும் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. 

இவ்வாறானதொரு பின்னணியில் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நாட்டின் செலவினங்களைக் குறைக்குமாறு பரிந்துரைகளை முன்வைக்கும் போது, மக்களுக்கான செலவினங்களைக் குறைப்பதைவிடுத்து பாதுகாப்பு அமைச்சுக்கென ஒதுக்கப்படும் நிதியைக் குறைக்குமாறு பரிந்துரைக்கும்படி சர்வதேச நாணய நிதியத்திடம் தாம் வலியுறுத்தியதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.