(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை முழுமையாக இரத்து செய்து 19 ஆவது திருத்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தினால் சர்வதேசம் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும்.

ஜனநாயக்த்தை ஸ்தாபிக்க வேண்டுமாயின் 19 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

சர்வதேசத்தின் மத்தியில் அரசாங்கத்திற்கு நன்மதிப்பு கிடையாது என முன்னாள் ஜனாதிபதியும்,சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தனக்கு எதிரான மனுவை விசாரணை செய்ய பூரண நீதியரசர் அமர்வை கோரும் மைத்திரி |  Virakesari.lk

புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதிக்கு வலியுறுத்தியுள்ளதுடன் பல யோசனைகளையும் முன்வைத்துள்ளோம்.

ராஜபக்ஷர்கள் முழுமையாக பதவி விலக வேண்டும் என நாட்டு மக்கள் வெளிப்படுத்தியுள்ள எதிர்ப்பு தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (10)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொருளாதார நெருக்கடி தற்போது அரசியல் நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளது.நாட்டு மக்கள் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு பொருளாதார நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளார்கள்.

மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்திடம் பலமுறை வலியுறுத்தியுள்ளோம்.

அரசாங்கத்திற்கு எதிராக மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைகிறதே தவிர குறைவடையவில்லை.

பொருளாதார நெருக்கடியுடன் தோற்றம் பெற்ற சமூக நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் சுதந்திர கட்சி ஜனாதிபதியிடம் மூன்று முறை பல யோசனைகளை முன்வைத்துள்ளது.சுதந்திர கட்சியின் செயற்குழு தீர்மானத்திற்கமைய முதலாவதாக 15 யோசனைகளும்,சர்வக்கட்சி மாநாட்டில் யோசனைகளும் முன்வைக்கப்பட்டன.

முன்வைக்கப்பட்ட யோசனைகளை அரசாங்கம் முறையாக செயற்படுத்தவில்லை.பல்வேறு காரணிகளை முன்னிலைப்படுத்தி சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகி சுதந்திர கட்சியின் 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் பின்னணியிலும் அரசாங்கத்திற்கு 11யோசனைகளை பங்காளி கட்சிகளுடன் ஒன்றினைந்து முன்வைத்துள்ளோம்.

புதிய பிரதமரின் தலைமைத்துவத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட அமைச்சர்களை உள்ளடக்கிய அமைச்சரவையை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம்.தேசிய நிறைவேற்று சபை ஒன்றை ஸ்தாபித்து அதனூடாக அமைச்சர்களை நியமிப்பது அவசியமானதாகும்.இடைக்கால அரசாங்கத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் அங்கம் வகிக்க வேண்டும்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் முழுமையாக நீக்கப்பட்டு அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் திருத்தங்களுடன் மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.19ஆவது திருத்தத்தில் அரசியலமைப்பு பேரவையில் சபாநாயகர் நிறைவேற்று அதிகாரம் கொண்டவராக்கப்பட்டுள்ளமை திருத்தம் செய்யப்பட வேண்டும்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை முழுமையாக நீக்கி 19ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால் சர்வதேசம் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்ற நம்பிக்கை உண்டு.

அரசாங்கம் தொடர்பில் சர்வதேசத்தின் மத்தியில் நன்மதிப்பு கிடையாது.இலங்கைக்கு ஆதரவாக செயற்படும் அனைத்து தரப்புடனும் அரசாங்கம் முரண்பட்டுக்கொண்டுள்ளது. அரசாங்கம் சர்வதேசத்துடன் இணக்கமாக செயற்படுவது அவசியமாகும்.நாடு என்ற ரீதியில் ஒருபோதும் தனித்து செயற்பட முடியாது.

சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் துரிதகரமாக செயற்பட வேண்டும்.பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை செயற்படுத்துவது அவசியமானதாகும்.ராஜபக்ஷர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் என நாட்டு மக்கள் வெளிப்படுத்தும் எதிர்ப்பு குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.