மீளமுடியா நெருக்கடி 

10 Apr, 2022 | 10:00 AM
image

-கார்வண்ணன்

ஐரோப்பா, கனடா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில், இருந்து, ஈஸ்டர் விடுமுறைக் காலத்தில், இலங்கைக்கு வருகைத் தரத் திட்டமிட்டிருந்த புலம்பெயர் இலங்கையர்கள், தமது பயணத் திட்டங்களை கைவிட்டிருக்கிறார்கள்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் அதற்கு ஒரு காரணம். இன்னொரு காரணம், தற்போது காணப்படும், மின்வெட்டு உள்ளிட்ட நெருக்கடிகள்.

விலைவாசி அதிகரிப்பு, பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், இலங்கைக்கு வந்து செல்வதற்குத் திட்டமிட்டிருந்த புலம்பெயர் தமிழர்கள், மின்வெட்டு, மற்றும் எரிபொருள் நெருக்கடி மற்றும், அரசியல் குழப்பங்களுக்குப் பின்னர் தங்கள் முடிவுகளை மாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

ஏனென்றால், குளிர்ப் பிரதேச நாடுகளில் வசித்துப் பழகிய அவர்கள், இங்கு கோடை வெயிலைச் சமாளிப்பதற்கு, மின்சார வசதி அவசியம்.

இவ்வாறான நிலையில் 13 மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நாட்டுக்கு அவர்கள் வருவதற்குத் தயாராக இல்லை.

அதுபோல, பல ஆயிரம் டொலர்களை செலவிட்டு, இலங்கைக்கு வருபவர்கள், பல்வேறு இடங்களுக்கும் செல்வதற்கும், சுற்றிப் பார்ப்பதற்கும் விரும்புவார்கள்.

எரிபொருள் பற்றாக்குறையினால் அவர்களால் போக்குவரத்து செய்ய முடியாத நிலை உள்ளது. இருட்டு, வெயில், புளுக்கம் போன்ற கஷ்டங்களை அனுபவிப்பதற்காக அவர்கள் யாரும் இலங்கை வருவதற்கு விரும்பவில்லை.

இந்த நிலையானது, இலங்கையின் பொருளாதாரத்துக்கு மேலும் பலத்த அடியை ஏற்படுத்தியிருக்கிறது. அரசாங்கத்தின் திட்டமிடப்படாத நடவடிக்கைகள், பொருளாதாரச் சீரழிவுகளுக்கு வழிவகுத்துள்ளது.

அதற்கு மிகச் சிறந்த உதாரணம், கடந்த ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகங்களை அரசாங்கம் முடக்கியது.

சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டிருந்த 15 மணி நேரத்தில், 3 இலட்சம் அமெரிக்க டொலர்கள், நாட்டை விட்டு வெளியே சென்றிருப்பதாக ஒரு தகவல் உள்ளது.

சமூக ஊடகங்களை மாற்று வழியில் அணுகுவதற்கான விபிஎன் செயலிகளை தரவிறக்கம் செய்வதற்காக, சேவை வழங்குநர்களுக்கு இங்குள்ள பயனர்கள், அந்த நிதியை செலவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

வி.பி.என். செயலிகள் காரணமாக, சமூக ஊடக முடக்கம் என்பது, பயனற்றது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. எனினும், பாதுகாப்பு அமைச்சின் தவறான அணுகுமுறையினால், அந்த முடக்க நிலை அறிவிக்கப்பட்டது.

அது ஏற்படுத்திய எதிர்விளைவு, அரசாங்கத்துக்கு பொருளாதார இழப்பையும் கொடுத்திருக்கிறது. அதுபோலத் தான், எரிபொருள் நெருக்கடியும், மின்வெட்டும், திட்டமிடப்படாத பொருளாதார உத்திகளால் தான், ஏற்பட்டன. இதனைக் கையாளுவதற்கான பொறிமுறை இன்னமும் அரசாங்கத்திடம் இல்லை.

மின்வெட்டு அமுல்படுத்துவது எத்தனை மணி நேரம் என்பது பல நேரங்களில் மின்சக்தி அமைச்சருக்கே தெரிவதில்லை.

எப்போது எரிபொருள் கப்பல் வரும், எப்போது அது இறக்கப்படும் என்பது துறைசார் அமைச்சருக்கே தெரியாமல் இருக்கிறது. இவ்வாறான ஒரு குழப்பமான நிர்வாகத்தை தான் அரசாங்கம் நடத்திக் கொண்டிருக்கிறது.

டொலர் நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் பொருளாதாரத்தை சீழிக்கும் வகையில் தான், எல்லா அணுகுமுறைகளும் அமைந்திருக்கின்றன.

டொலர் நெருக்கடியில் உள்ள அரசாங்கத்துக்கு ஒரே நம்பிக்கையாக இருந்தது சுற்றுலாத் துறை மட்டும் தான். இந்த ஆண்டில்,3 மாதங்களில் இரண்டரை இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வரை, நாட்டுக்கு வந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகின.

அவர்களில் கணிசமானோர் ரஷ்யா உக்ரைனை சேர்ந்தவர்கள். உக்ரைன் மீதான படையெடுப்பினால், அவர்கள் இங்கு வரக்கூடிய நிலையில் இல்லை. இந்த படையெடுப்பை அடுத்து. ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளால், ரஷ்யர்களும் வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பொருளாதாரத் தடைகளால், இலங்கைக்கான நேரடி விமான சேவைகளை ரஷ்ய நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன. இதனால் ரஷ்யாவைப் பெரிதும் நம்பியிருந்த சுற்றுலாத் துறை கடுமையாக அடி வாங்கியிருக்கிறது.

அதுபோல இந்தியர்கள் தான், அதிகளவில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்கிறார்கள். வாரத்தில் 16 சேவைகளை நடத்தி வந்த எயர் இந்தியா நிறுவனமும், இப்போது தனது சேவைகளை குறைத்திருக்கிறது.

போதிய பயணிகள் இல்லாமையே அதற்குக் காரணம். மின்வெட்டும், எரிபொருள் தடையும், சர்வதேச அளவில் இலங்கைக்கு எதிர்மறையான விம்பத்தை பெற்றுக் கொடுத்திருக்கின்றன.

சுற்றுலாப் பயணிகளால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத இடமாக இலங்கை மாறிக் கொண்டிருக்கிறது. பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முடியாத மக்கள், வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்த தொடங்கியதை அடுத்து, அரசியல் குழப்பங்கள் அதிகரித்துள்ளன.

இந்த அரசியல் குழப்பங்களை அடுத்து. மேற்குலக நாடுகள் பல தமது பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டிருக்கின்றன. பயண எச்சரிக்கைளுக்குப் பிறகும், அந்த நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருவார்கள் என்று எந்த வகையிலும் நம்ப முடியாது.

சுற்றுலாப் பயணிகளின் மூலம் தான், டொலர் நெருக்கடியை ஓரளவுக்கு குறைக்க முடியும் என்ற நிலையில், அதற்கேற்ப அவர்களைத் தக்க வைக்க கூடிய திட்டங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

ஆனால் அரசாங்கம், இந்த நெருக்கடிகளை ஒரு விளையாட்டாகத் தான் கருதியது. அரசாங்கத்துக்குள் தோன்றிய முரண்பாடுகளையும். பகைமைகளையும் தீர்த்துக் கொள்வதற்கு இந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் பயன்படுத்தப்பட்டது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் சரிவுக்குள் தள்ளப்பட்டதற்கு அரசாங்கமே முழுப் பொறுப்பு.

தற்போதைக்கு இந்த நிலையை சரி செய்ய முடியாது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் சற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வர அஞ்சினார்கள். அந்தச் சரிவை நிமிர்த்துவதற்கு முயற்சிகள் மேற்கொண்ட போது கோவிட் தொற்று பரவியது.

இதனால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, சுற்றுலாத் துறை சார்ந்த தொழில்கள், கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இலங்கைக்கு கிடைக்க வேண்டிய டொலர் கைநழுவிப் போனது.

மீண்டும் அந்த வாய்ப்பு கைக்குக் கிட்டிக் கொண்டிருந்த போது தான், சர்வதேச அரசியலும், உள்நாட்டு அரசியலும் அதனை கெடுத்துக் குட்டிச் சுவராக்கியிருக்கின்றன.

உக்ரைன் நெருக்கடியைத் தாண்டியும், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால், அரசாங்கத்தின் தவறான அணுகுமுறைகளால் அந்த வாய்ப்பு முற்றாகவே பறிபோயிருக்கிறது.

இதற்குப் பின்னரும், வெளிநாட்டவர்கள் இலங்கையைத் திரும்பிப் பார்க்க வைப்பதற்கு, அரசாங்கத்தினால் உடனடியாக எதையும் செய்யக் கூடியதாக இருக்கும் போலத் தெரியவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை டிசம்பர் என்கின்றது - உறுதியாக...

2022-09-29 15:08:23
news-image

யார் இந்த பொன்னியின் செல்வன்?

2022-09-29 15:25:42
news-image

முதல் முறையாக விண்கல்லை திசை திருப்பிய...

2022-09-29 13:18:27
news-image

உடையால் பற்றி எரியும் ஈராக் :...

2022-09-29 13:18:49
news-image

கஞ்சாவை சட்டபூர்வமாக்குவதால் யாருக்கு இலாபம் ?

2022-09-29 12:26:33
news-image

மீண்டும் களத்தில் இறங்கும் சந்­தி­ரிகா

2022-09-29 12:26:16
news-image

சிறுவர்கள் பட்டினியால் பாதிக்கப்படுவது குறித்த தகவல்...

2022-09-28 12:40:54
news-image

இலங்கையின் வர்த்தக நாமம் கஞ்சா…?

2022-09-28 10:14:28
news-image

மலையக சமூகம் தொடர்பில் ஐ.நா. பிரதிநிதியின்...

2022-09-28 10:10:48
news-image

அடையாளம் தான் துறப்போம். எல்லா தேசத்திலும்...

2022-09-27 09:27:02
news-image

ஐ.எம்.எப். கடனை தாண்டிய இந்தியாவின் டொலர்...

2022-09-26 10:53:34
news-image

இந்தியா இலங்கைக்கு பலமாக இருக்கின்றது :...

2022-09-25 15:44:19