இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை வழங்க முன்வந்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தமது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளது. 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசிகள் அதிகரித்துள்ளன. இதனால், பொதுமக்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். 

இதனைக் கருத்திற்கொண்டு, மலையக மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளை வழங்குவது தொடர்பில், இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கரை தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ள தமிழக முதலமைச்சர், இது தொடர்பாகக் கலந்துரையாடி, உரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.

இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது நிலவும் தீவிரப் பொருளாதார நெருக்கடியில் சிக்கி வேதனையில் தவித்துக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்கள் குறித்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் தனது கவலையைத் தெரிவித்துக் கொண்டுள்ள முதலமைச்சர், இந்தச் சூழ்நிலையில் இலங்கையில் வசிக்கும் குறிப்பாக மலையகம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும்  வாழும் தமிழர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசினால் அத்தியாவசிப் பொருட்களான அரிசி, பருப்பு மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக அனுப்புவதற்குத் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். 

அத்தோடு மனிதாபிமான நோக்கில் அனுப்பப்படும் இத்தகைய பொருட்களை தமிழர்களுக்கு, வழங்குவதற்கு உரிய  நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் தமிழக முதலமைச்சர் செய்துள்ள உதவிக்கு நன்றியைய தெரிவித்துக்கொள்கிறோம் இத்தருணத்தில் செய்யப்படும் உதவி  எம்மக்களுக்கு பாரிய பக்கபலமாக இருக்கும் என்பது உறுதி எனவும் குறிப்பிட்டுள்ளார்.