தமிழர்களுக்காகவும் சிங்களவர்கள் போராட வேண்டும் - சிறீதரன்

By T. Saranya

08 Apr, 2022 | 12:06 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

அரசினால் திட்டமிட்டு பொருட்கள் அனுப்பப்படாமல்  நாளாந்தம் பொருளாதார தடைக்குள் 20 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்தவர்கள் தமிழர்கள். அவ்வாறான தமிழர்களுடைய உண்மையான உரிமைப் பிரச்சினைகளையும் இன்று வீதியில் இறங்கி போராடும் சிங்கள இளைஞர் யுவதிகள் கருத்தில் எடுக்க வேண்டும். 

தமிழர்கள் பற்றியும் சில வார்த்தைகளை நீங்கள் பேச வேண்டும், எங்களுக்காகவும் நீங்கள் போராட வேண்டும்  என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் சபையில் வேண்டுகோள் விடுத்தார். 

தமிழர்கள் அழிக்கப்பட்டபோது  தெருக்களில் சிங்கக்கொடிகள் ஏந்தி  பாற்சோறு வழங்கப்பட்டு அதனைக் கொண்டாடிய தலைவர்களுக்கு எதிராக இன்று அதே சிங்கக்கொடிகளை சிங்கள இளைஞர்களும் யுவதிகளும் தூக்கிப்பிடித்து ஜனாதிபதியை வெளியே போ என்று சொல்கின்ற காலம் வந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நாட்டின் நெருக்கடி நிலை தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார். 

அவர் மேலும் கூறுகையில்,

பல குழந்தைகள், இளைஞர்கள், யுவதிகள் தெருக்களில் இருந்து இந்த நாட்டில் நடக்கின்ற அநீதிகளுக்கு எதிராகவும், நாட்டின் தலைவருக்கு எதிராகவும் போராடி வருகின்றனர்.  இவ்வாறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்  புதன்கிழமை யாழ் மாவட்டத்தில் எழுவை தீவில் தனியாருக்கு சொந்தமான 53 பேர்ச் காணியை கடற்படைக்கு அளப்பதற்காக நில அளவை திணைக்களம் சென்றுள்ளது. 

நாட்டிலே அரசை மாற்றுங்கள்,தலைவரை மாற்றுங்கள் என மக்கள் போராடுகின்றார்கள். ஆனால் இந்த அரசு இன்னொரு வழியில் தமிழர்களுடைய காணிகளை  படைகளுக்கு அளவீடு செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

அதேபோல் சில நாட்களுக்கு முன்னர் கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் கோவில் வளாகத்துக்குள் நுழைந்த இராணுவத்தினர் அந்த வளாகத்தில் உள்ள கற்களை எல்லாம் அகற்றி அந்த பகுதியில் அளவீடுகளை மேற்கொண்டுள்ளார்கள். இந்தப்பணிகளில் ஏன் இராணுவத்தினர்  ஈடுபடுகின்றனர்? நாட்டில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் யுவதிகள் போராடிக்கொண்டிருக்கின்றார்கள் .

இந்த நாட்டின் ஜனாதிபதியை வீட்டுக்கு போகுமாறு கேட்கின்றார்கள். இந்த அரசின் மீது நம்பிக்கை இல்லை என்கின்றனர். அரசு அமைச்சரவையை கலைத்துள்ளது. ஆனால் இந்த நாட்டில் உள்ள இயங்க முடியாத அரசு தமிழர் மீதான அடாவடிகளை மட்டும் தொடருகின்றது.

அரசுக்கு, ஜனாதிபதிக்கு எதிராக போராடுகின்ற  இளைஞர்கள், யுவதிகளிடம் இந்த உயர்ந்த சபையின்  ஊடாக ஒரு வேண்டுகோளை முன்வைக்கின்றேன். சிங்கள சகோதரர்களே,சகோதரிகளே,நாங்களும் இந்த நாட்டில் ஒரு பெரிய போர் நடத்தியவர்கள். நாங்கள் போராடியவர்கள்.நீங்கள் இப்போதுதான் இந்த பொருளாதார தடைகள், பொருளாதார தாக்கங்களை சந்திக்கின்றீர்கள். 

ஆனால் இதனை விட மோசமாக அரசினால் திட்டமிட்டு பொருட்கள் அனுப்பப்படாமல் நாங்கள் நாளாந்தம் பொருளாதார தடைக்குள் வாழ்ந்தவர்கள். அதுவும் 20 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்தவர்கள் தமிழர்கள். அவ்வாறான தமிழர்களுடைய உண்மையான உரிமைப்பிரச்சினைகளையும் நீங்கள் கருத்தில் எடுக்க வேண்டும்.

இங்கிருக்கின்ற சிங்கள தலைவர்கள் ,அரசியல் தலைவர்கள் தார்மீக அடிப்படையில் சிந்திக்க வேண்டும். ஏனெனில் இந்த இளைஞர்கள்,யுவதிகளின் போராட்டத்தில் பிறந்து குழந்தை கூட தாய் தந்தையுடன் நிற்கின்றது. சிறுவர்கள் சிங்கக்கொடிகளை ஏந்திக்கொண்டு நிற்கின்றார்கள்.

நாங்கள் கொல்லப்பட்டபோது,தமிழர்கள் அழிக்கப்பட்டபோது  தெருக்களில் சிங்கக்கொடிகள் வழங்கப்பட்டு பாற்சோறு வழங்கப்பட்டு அதனைக்கொண்டாடிய தலைவர்களுக்கு எதிராக இன்று அதே சிங்கக்கொடிகளை சினைகள் இளைஞர்களும் யுவதிகளும் தூக்கிப்பிடித்து ஜனாதிபதியை வெளியே போ என்று சொல்கின்ற காலம் வந்துள்ளது.

2009 ஆம் ஆண்டு இறுதிப்போரில் எத்தனை ஆயிரம் குழந்தைகள் கொல்லப்பட்டார்கள். இன்றைய பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவின் பாரியாரிடமே பல குழந்தைகள் கையளிக்கப்பட்டன. வவுனியாவில், தென்பகுதியில் அந்தக்குழந்தைகளை பராமரிக்க  நிலையங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் அந்தக்குழந்தைகளில் பலரை இன்றும் காணவில்லை. 

ஆனந்த சுதாகரனின் இரு குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் தமது தாய் தந்தையரின் வரவுக்காக காத்திருக்கின்றார்கள். இளைஞர்கள் யுவதிகள் இன்று போராடுவது நியாயம். உங்கள் தர்மத்துக்காக போராடுகின்றீர்கள். உங்களுடைய தாய் நாட்டுக்காக போராடுகின்றீர்கள்.ஆனால் எங்களுடைய தமிழ் மண்ணில் நாங்கள் அநியாயங்களுக்கு உட்படுத்தப்பட்டு  இன்றும் எமது இளைஞர்கள் யுவதிகள் சிறைகளில் இருக்கின்றார்கள். 

அதனைப்பற்றியும் சில வார்த்தைகளை நீங்கள் பேச வேண்டும். காணாமல் போன தமது உறவுகளுக்கு 5 ஆண்டுகளைக்கடந்தம் எமது தாய்மார்கள் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். தமிழர்களுக்கு ஒரு நீதியை வழங்க முடியாமல் தமிழர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்க முடியாமல் ஒரு ஒற்றையாட்சி இருக்கின்ற இந்த நாட்டுக்குள்ளே தீர்வு என நீங்கள் பிடித்த மதவாதமும் இனவாதமும் இன்று எப்படி சூழ்ந்துள்ளது. எவ்வாறு திரும்பி வந்துள்ளது.

இன்று தமிழர்கள் இந்த நாட்டை கட்டி வளர்ப்பதற்கு பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்கு உங்களின் வறுமையை போக்குவதற்கு தயார் என்று சொல்லும்போதெல்லாம் அதனை சரியாக கைக்கொள்ளக்கூடிய வகையிலே சகோதரத்துவத்தை ஏன் உங்களினால்  கட்டியெழுப்பமுடியாமல் உள்ளது?இன்றும் கூட நீங்கள் எரிபொருள்,எரிவாயு,மின்சார பிரச்சினை தீர்ந்தால் இந்த நாட்டின் பிரச்சினை தீர்ந்து விடுமென்றே நீங்கள்  நினைக்கின்றீர்களே தவிர இந்த நாட்டில் 70 வருடங்களுக்கு மேலாக உள்ள பிரச்சினையை தீர்க்க தயார் இல்லை. 

நீங்கள்  பட்ட கடன் எதற்காக பெறப்பட்டது?யாருக்காக வாங்கப்பட்டது?தமிழர்களை கொன்றொழிப்பதற்காகவும் அவர்களின் தேசத்தை அழிப்பதற்காகவும் யுத்த தாங்கிகளையும் யுத்த தளபாடங்களையும் கொள்வனவு செய்வதற்காக உலகமெல்லாம் வாங்கிய கடந்தான் இன்று உங்களை சூழ்ந்துள்ளது.

தெருக்களில் இறக்கின்ற ஒவ்வொரு சிங்களவரையும்  பார்த்து நாம் கவலையடைகின்றோம். நாநக்ள் கொல்லப்பட்டபோதெல்லாம் நாங்கள் அழிக்கப்பட்டபோதெல்லாம் யாரவது ஒரு சிங்கள பொதுமகன் அல்லது ஒரு சிங்கள பல்கலைக்கழக மாணவன் எங்களுக்க தெருக்களில் இறங்கியதை பார்க்கவில்லை. 

யாழ், கிளிநொச்சி பல்கலைக்கழகங்களில் உள்ள சிங்கள மாணவர்கள் அரசுக்கு எதிராக போராடுகின்றீர்கள் நாம் உங்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தவில்லை. அண்ணல் இந்த மண்ணில் படைகளினால் சூழப்பட்டு ஒரு திறந்த வெளி சிறையில் தான் வாழ்கின்றோம் என்ற உண்மையை ஏன் உங்களினால் உணர முடியாமல் உள்ளது எனக்கேள்வி எழுப்பினார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right