பிரதமர் முதற்கொண்டு அரசாங்கம் முழுமையாக பதவி விலக வேண்டும் - விமல், வாசு வலியுறுத்தல்

By T. Saranya

08 Apr, 2022 | 11:56 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

இதுவரை காலமாக முன்னெடுத்த அரசாங்கத்தின் பயணத்தை மாற்றியமைக்க வேண்டும். ஜனாதிபதியை மாற்ற முடியாது, அரசாங்கம் பிரதமரின் கையிலேயே உள்ளது. ஆகவே அரசாங்கம் முழுமையாக புதிய மாற்றம் ஒன்றினை கையாள வேண்டும். பிரதமரும், அமைச்சரவையும் புதிய பரிணாமம் பெற வேண்டும் எனவே பிரதமர் முதற்கொண்டு அரசாங்கம் முழுமையாக பதவி விலக வேண்டும். 

புதிய இடைக்கால ஆட்சியொன்றை உருவாக்க வேண்டும் என ஆளுங்கட்சி சுயாதீன உறுப்பினர்களாக செயற்படும் விமல் வீரவன்ஸ மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் சபையில் வலியுறுத்தினர்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நாட்டின் நெருக்கடி நிலை தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர்கள் இவ்வாறு கூறினர், இது குறித்து முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கூறுகையில்,

நாம் அமைச்சுப்பதவிகளை வகித்த காலத்தில் நாட்டின் நிலைமை குறித்து தொடர்ச்சியாக எடுத்துக்கூறினோம். நாடு நெருக்கடிக்குள் விழும் என்பதை தொடர்ச்சியாக சுட்டிக்காட்டினோம். ஆனால் இரட்டை பிரஜாவுரிமையை கொண்ட, அவலட்சணமான அமெரிக்கர் எமது எந்தவொரு யோசனைக்கும் செவிமடுக்கவில்லை. 

இன்று சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வோம் என்ற யோசனையை கொண்டுவந்துள்ளனர், ஆனால் சர்வதேச நாணய நிதியத்திற்கு ஏன் செல்லக்கூடாது என்ற யோசனையையும் அவலட்சணமான அமெரிக்ககாரரே அமைச்சரவைக்கு கொண்டுவந்தார். நாட்டின் இன்றைய நெருக்கடி நிலைமையை உருவாக்க அவருக்கு தேவை இருந்தது. 

கோட்டாபய ராஜபக்ஷ வெறுப்பில் ஆட்சியை விட்டு சென்றவுடன் மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் அதிகாரத்தை கைப்பற்றி அதிகாரம் மிக்க ஜனாதிபதியாகவே நினைத்தார். அதனால்தான் இன்று  நாடு நெருக்கடி நிலைக்குள் விழுந்துள்ளது.

எமது அரசியல் வரலாற்றில் மிகவும் மோசமான சிங்கள தமிழ் புத்தாண்டாக இம்முறை மாறியுள்ளது. நாட்டை அராஜகத்தின் பக்கம் கொண்டு செல்லாது மீட்டெடுக்க வேண்டும். அமைச்சரவை ஒன்று இல்லாது அரசாங்கம் பயணிக்கின்றது. பாராளுமன்றத்தில் விடை கிடைக்கும் என ஜனாதிபதி எதிர்பார்க்கலாம். எவ்வாறு இருப்பினும் எமக்கு இருக்கும் பொறுப்பை சரியாக இன்று நிறைவேற்ற வேண்டியுள்ளது. இன்றுள்ள நிலையில் பிரதமர் தொடக்கம் அரசாங்கம் முழுமையாக பதவி விலக வேண்டும். 

புதிய இடைக்கால ஆட்சியொன்றை உருவாக்க வேண்டும். மஹிந்த ராஜபக் ஷ இவ்வாறான ஒரு நெருக்கடிக்குள் விழுவார் என நான் எதிர்பார்க்கவில்லை. அவருடைய சகோதரரான அவலட்சணமான அமெரிக்ககாரர் மஹிந்த ராஜபக்ஷவை இந்த நிலைக்கு கொண்டு செல்வார் என எதிர்பார்க்கவில்லை. இனியும் மக்களின் நம்பிக்கையை உருவாக்க முடியாத நிலைக்கு சென்றுள்ளது. அவரது அத்தியாயம் முடிவுக்கு வந்துவிட்டது என்றார்.

ஆளுங்கட்சி உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார எம்.பி விவாதத்தில் உரையாற்றும் போது கூறுகையில், 

மக்கள் இன்று வீதிக்கு இறங்கியுள்ளனர், இதனை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் இந்த எதிர்ப்பை சரியான பக்கம் திருப்ப வேண்டும். அதனை கொண்டு அரசாங்கத்தை உருவாக்கும் பக்கம் கொண்டு செல்ல வேண்டும். இந்த அரசாங்கத்தின் பயணம் தவறானது. அரசாங்கத்தில் இருக்கும் போதும் தவறை சுட்டிக்காட்டினோம், இப்போதும் தவறுகளை சுட்டிக்காட்டுகின்றோம். 

சுயாதீனமாகவும் இயங்கிக்கொண்டுள்ளோம். இதுவரை காலமாக சென்ற அரசாங்கத்தை மாற்றியமைக்க வேண்டும். ஜனாதிபதியை மாற்ற முடியாது, அரசாங்கம் பிரதமரின் கையிலேயே உள்ளது. ஆகவே அரசாங்கம் முழுமையாக புதிய மாற்றம் ஒன்றினை கையாள வேண்டும். 

பிரதமரும், அமைச்சரவையும் புதிய பரிணாமம் பெற வேண்டும். நாட்டு மக்களுக்கு புதிய நம்பிக்கையை உருவாக்க வேண்டும். அதற்கு அரசாங்கத்தின் தோற்றத்தை மாற்றியமைக்க வேண்டும். அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right