(ஆர்.ராம்)

இலங்கை சிறுபான்மை சமூகங்களுக்கு தேசிய வாழ்க்கையில் சரியான இடம்கொடுக்கப்படவில்லை என்பது தெளிவாக தெரிவதாக  சிறுபான்மை இன விவகாரங்களை ஆராய்வதற்கான ஐக்கிய நாடுகள் சபையின்  விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியா எதிர்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினரிடத்தில் தெரிவித்துள்ளார். 

இலங்கை இராணுவத்தில் ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கையில் அதனை அடிப்படையாக கொண்டு சமாதானம், சகவாழ்வு, சம உரித்து அனைத்து மக்களுக்கும் இருப்பதாக சொல்ல முடியாது  எனக் குறிப்பிட்ட  ஐக்கிய நாடுகள் சபையின்  விசேட அறிக்கையாளர் முதற்கட்டமாக இராணுவத்தில் அமிலப்பரீட்சையொன்றை மேற்கொள்ளவேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். 

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகைதந்துள்ள சிறுபான்மை இன விவகாரங்களை ஆராய்வதற்கான ஐக்கிய நாடுகள் சபையின்  விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியாவுக்கும் எதிர்க் கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினருக்குமான சந்திப்பு இன்று புதன்கிழமை நடைபெற்றது. 

பாராளுமன்றத்தில் உள்ள எதிர்கட்சித்தலைவரின் அலுவலகத்தில் அரைமணிநேரமாக நடைபெற்ற இச்சந்திப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கருத்து வெளியிடுகையில், 

இந்த நாட்டில் உள்ள சிறுபான்மையினரின் பிரச்சினை முக்கியமானதொன்றாக காணப்படுகின்றது. இந்தப்பிரச்சினையே இந்நாட்டில் உள்ள அனைத்துப் பிரச்சினைக்கும் அடிப்படையாக இருக்கின்றது. அதனை எவ்வாறு தீர்க்கலாம். சிறுபான்மை மக்களுக்கு இடையில் காணப்படுகின்ற சந்தேகங்கள் போன்ற அனைத்து விடயங்களையும் அவர் பெற்றுக்கொண்டுள்ளார். இந்நிலையிலேயே அவர் எதிர்க்கட்சித்தலைவர் தலைமையிலான எமது குழுவினரை சந்தித்திருந்தார். 

பிரதான கோரிக்கை

இதன்போது எதிர்க்கட்சித்தலைவர்,  புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன்மூலமாக வெவ்வேறு மக்கள் கூட்டங்கள் வாழும் இந்த நாட்டில் ஒவ்வொருவரும் தங்களின் இறைமையை உபயோகிக்க கூடிய வண்ணமாக பேரினவாத ஆட்சியற்றதாக புதிய அரசியலமைப்பு அமையவேண்டும். அதற்கான பரிந்துரைகளை தாங்கள்( விசேட அறிக்கையாளர் ரீட்டா) செய்யவேண்டுமென கேட்டுக்கொண்டார் என்றார்.