( எம்.எப்.எம்.பஸீர்)
இத்தாலியில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த, கொழும்பு - வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் ஆணமடுவ பகுதியில் மர்மமாக படு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சுமார் 10 மாதங்களின் பின்னர் துப்பு துலக்கப்பட்டுள்ளது.

சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் செயற்படும், மனிதப் படுகொலைகள் மற்றும் திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவினர் இந்த சம்பவம் தொடர்பில் துப்புத் துலக்கி சந்தேக நபரைக் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார்.
ஆண்மடுவை , மெத்தகுளம் பகுதியைச் சேர்ந்த 31 வயதான சந்தேக நபர் ஒருவரையே மனிதப் படுகொலைகள் மற்றும் திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ள நிலையில், சந்தேக நபர் ஆணமடுவ நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு இம்மாதம் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து, கொலை செய்யப்பட்ட வர்த்தகரின் தானியக்க பணப் பரிமாற்று அட்டை, 1,151,720 ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலி மற்றும் 2,320,879 பெறுமதியான கைச் சங்கிலி ஆகியவர்றை அடகு வைத்த பற்றுச் சீட்டு ஆகியவற்றை விசாரணையாளர்கள் மீட்டுள்ளனர்.
கடந்த 2021 ஜூன் 10 ஆம் திகதி, ஆணமடுவ பகுதியில் இடம்பெற்ற கொலை ஒன்று தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பு பொலிஸ் மா அதிபரால் சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு பாரப்படுத்தப்பட்டது. அதன்படியே அது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் வரும் மனிதப் படுகொலை மற்றும் திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்தது.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையிலான விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களை மனிதப் படுகொலை மற்றும் திட்டமிட்ட குற்ரங்கள் குறித்த விசாரணைப் பிரிவினர் ஆண்மடுவ நீதிவான் நீதிமன்றுக்கு சமர்ப்பித்துள்ளனர்.
அதன்படி, வெள்ளவத்தையைச் சேர்ந்த வர்த்தகர் ( கொலைச் செய்யப்பட்டவர்) இத்தாலியில் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதுடன் அவர் ஆணமடுவ பகுதியில் காணி ஒன்றினை கொள்வனவு செய்து அங்கு வீடு ஒன்றினையும் அமைத்துள்ளார்.
பின்னர் அவ்வீட்டையும் காணியையும் விற்பனை செய்வதற்காக அவர் கடந்த 2021 மே 20 ஆம் திகதி முதல் ஆணமடுவை வீட்டுக்கு சென்று தங்கியிருந்துள்ளார்.
ஆனமடுவ காணி மற்றும் வீட்டினை பர்த்துக்கொள்வதற்காக குறித்த வர்த்தகர் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபருக்கே பொறுப்பளித்திருந்துள்ளார்.
இந் நிலையில் கடந்த 2021 ஜூன் 10 ஆம் திகதி, ஆணமடுவ வீட்டில் வைத்து வர்த்தகருக்கும் சந்தேக நபருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது வீட்டின் முன்னால் உள்ள கொங்றீட் நாற்காலியில் இருந்து வர்த்தகரை சந்தேக நபர் தள்ளிவிட்டுள்ளார்.
இதன்போது கீழே விழுந்த வர்த்தகர் மூர்ச்சையாகியியுள்ள நிலையில், வர்த்தகரை வீட்டின் அறையொன்றுக்குள் தூக்கிச் சென்று வைத்து விட்டு சந்தேக நபர் வெளியேறியுள்ளார். மறு நாள் அவ்வீட்டுக்கு சந்தேக நபர் சென்றுள்ளதாகவும், அதன்போது வர்த்தகர் தொடர்ந்தும் மூர்ச்சையான நிலையிலேயே காணப்பட்டுள்ள நிலையில், வர்த்தகர் உயிரிழந்துள்ளதை உறுதி செய்துகொண்டுள்ள சந்தேக நபர், சடலத்தை வீட்டின் பின்னால் உள்ள மிக ஆழமன குழியில் வீசி மறைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்ததாக சி.ஐ.டி.யினர் மன்றுக்கு அறிக்கையிட்டுள்ளனர்.
இந் நிலையிலேயே கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட ஆணமடுவ நீதிவான், விசாரணைகளை முன்னெடுத்து மேலதிக முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்க விசாரணையாளர்களை அறிவுறுத்தியுள்ளார்.