( எம்.எப்.எம்.பஸீர்)
மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 18 ஆம் திகதிவரை அமுலில் இருக்கும் வண்னம் இந்த தடை உத்தரவை இன்று ( 7) கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்தது.
தென் மாகாண முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் , குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின் 136 (1) ( அ) அத்தியாயத்தின் கீழ் தாக்கல் செய்த தனிப்பட்ட மனுவை ( private plaint) பரிசீலித்தே, கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெக்குணவெல, இந்த உத்தரவை பிறப்பித்தார்.
அத்துடன் எதிர்வரும் 18 ஆம் திகதி, மனுவில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ராலை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் அவர் அறிவித்தல் பிறப்பித்தார்.
தென் மாகாண முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தாக்கல் செய்துள்ள தனிப்பட்ட மனுவில், கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் 2015 ஜனவரி 8 ஆம் திகதிவரையிலான காலப்பகுதியில் மனுவில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கி ஆளுநராக கடமையாற்றி, நிதிச் சபை அல்லது அமைச்சரவையின் எந்த அனுமதியும் இன்றி ஐக்கிய அமெரிக்காவின் இமாட் ஷா சுபேரி என்பவருக்கு இலங்கை அரசுக்கு சொந்தமான நிதியிலிருந்து 6.5 மில்லியன் டொலர்களை வழங்கியதன் ஊடாக தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதே போல, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றிக்கொண்டிருக்கும் போது, கடந்த 2022 ஜனவரி 18 ஆம் திகதி முதிர்ச்சிக் காலத்தைக் கொண்ட திறைசேறி முறிகள் ஊடாக இலங்கை அரசுக்கு சுமார் 500 மில்லியன் டொலர்கள் வரையில் நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் இந்த மனுவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனைவிட, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றிக்கொண்டிருந்த போது, தனக்கு மிக நெருக்கமான உறவினர்களை அவ்வங்கியின் பதவிகளுக்கு நியமித்துக்கொண்டமை ஊடாக இரகசிய தகவல்களை வெளியாருக்கு வழங்கி, திறைசேறி உண்டியல்கள் மற்றும் முறிகள் வழங்களின் போது இலங்கை அரசுக்கு 10.04 பில்லியன் டொலர் நட்டம் ஏற்படுத்தியதாகவும் மற்றொரு குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியிலேயே, இந்த மனு தொடர்பில் மனுதாரருக்காக மன்றில் சிரேஷ்ட சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்கவுடன் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, மேற்சொன்ன விடயங்கள் குறித்து விசாரணைகள் இடம்பெறும் நிலையில், மனுவின் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நாட்டிலிருந்து தப்பிச் செல்லக் கூடிய சூழல் ஒன்று உள்ளதாக குறிப்பிட்டார். அதனால், அவரது வெளிநாட்டு பயணங்களை தடை செய்து தடை உத்தரவு பிறப்பிக்குமாறும் அவர் கோரினார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெக்குணவெல அதற்கான உத்தரவை பிறப்பித்து, அது தொடர்பில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்க நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டார். அத்துடன் இந்த வழக்கை எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM