மின்சார சபை பொறியியலாளர் சங்கம் அரசாங்கத்திடம் விடுத்துள்ள வேண்டுகோள்

07 Apr, 2022 | 07:04 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் அமைச்சரவை அமைச்சர்கள் முழுமையாக பதவி விலகியுள்ள நிலையில் அரசாங்கத்தின் நிர்வாக கட்டமைப்பிலும் பாரிய மாற்றம் ஏற்படவுள்ளதை அவதானிக்க முடிகிறது. 

இருப்பினும் மின்விநியோக கட்டமைப்பு எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு பொறுப்புக்கூற வேண்டியவர் தொடர்ந்து மின்சார சபையின் தலைவராக பதவி வகிக்கிறார்.

தேசிய மின்விநியோக கட்டமைப்பில் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை எதிர்காலத்தில் மீண்டும் ஏற்படுவதை தடுக்கவும்,மீள்புதுப்பிக்கத்தக்க சக்திகள் உள்வாங்குதலை கணிசமாகக் கொண்ட குறைந்த விலையில் மின்னுற்பத்தி நிலையங்களை உருவாக்குவதற்கான தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒருவரை இலங்கை மின்சார சபைத் தலைவராக நியமிக்குமாறும், இலங்கை மின்சார சபையினுள் தொழிற்துறை அமைதி மற்றும் பணிப்பாளர் நல்லிணக்கத்தை பாதுகாக்குமாறு இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

மின்கட்டமைப்பு தொடர்பிலான முக்கிய தீர்மானங்களின் போது மின்சாரத்துறைசார்ந்த தொழில்வல்லுனர்களின் குறிப்பாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காமலிருப்பது நாட்டில் இன்றைய மின்விநியோக நெருக்கடிக்கு பிரதான காரணியாக அமைந்துள்ளது.

2021 மற்றும 2022ஆம் ஆண்டுகளில் செயல்நிலைப்படுத்தவிருந்த 500 மெகாவாட் சம்பூர் நிலக்கரி மின்னுற்பத்தி நிலையம் 2016ஆம் ஆண்டு இரத்து செய்யப்பட்ட போதும் 350 மெகாவாட் சொபாதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் நிர்மானப்பணிகள் பல வருடங்கள்  தாமதப்படுத்திய போதும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர்களின் சங்கம் 2021 மற்றும் 2022 ஆம் காலப்பகுதியில் கடுமையான மின்பற்றாக்குறையை எதிர்க்கொள்ள நேரிடும் என்பதை எதிர்வு கூறியது. 

மின்னுற்பத்தி குறித்து மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தினர் பல ஆண்டுகாலமாக முன்வைத்த யோசனைகளை செயற்படுத்தாமல் இருப்பது தற்போதைய மின்விநியோக தடை பிரச்சினைக்கு மூல காரணியாக அமைந்துள்ளது.

2022ஆம் ஆண்டு ஜனவரி முதலாவது கிழமை தொடக்கம் மின்விநியோக தடையை மின்பாவனையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் குறைந்த பட்ச அளவிலாவது அமுல்படுத்துமாறும் வலியுறுத்தப்பட்டது.

தேசிய மின்னுற்பத்தி மற்றும் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண இலங்கை மின்சார சபையின் தலைவர் நடைமுறைக்கு பொருத்தமான எவ்வித தீர்மானங்களையும் செயற்படுத்தவில்லை.

மாறாக அரசியல்வாதிகளின் தேவைக்கமையவே மின்சார சபையின் தலைவர் செயற்பட்டார்.

நாட்டில் மினவிநியோக கட்டமைப்பு எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு பொறுப்புக்கூற வேண்டியவர் தொடர்ந்து மின்சார சபையின் தலைவராக பதவி வகிக்கிறார்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை எதிர்காலத்தில் மீண்டும் ஏற்படுவதை தடுக்கவும்,மீள்புதுப்பிக்கத்தக்க சக்திகள் உள்வாங்குதலை கணிசமாகக் கொண்ட குறைந்த விலையில் மின்னுற்பத்தி நிலையங்களை உருவாக்குவதற்கான தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒருவரை இலங்கை மின்சார சபைத் தலைவராக நியமிக்கமாறும்,இலங்கை மின்சார சபையினுள் தொழிற்துறை அமைதி மற்றும் பணிப்பாளர் நல்லிணக்கத்தை பாதுகாக்குமாறும் அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right