(இராஜதுரை ஹஷான்)

நாட்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் நடைமுறைக்கு பொருத்தமான திட்டங்களை செயற்படுத்த வேண்டும்.

மக்களின் அபிலாசைகளுக்கு அரசாங்கம் மதிப்பளிக்காவிடின் பொதுஜன பெரமுனவின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அரசியல் ரீதியில் உறுதியான தீர்மானத்தை மேற்கொள்ள நேரிடும் என பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.

அரசிய சமகால அரசியல் நிலைமை குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வு பெற்றுக்கொடுக்காத காரணத்தினால் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் ஈடுப்பட்டுள்ளார்கள்.

மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்கிறேன். அரசாங்கத்தின் நிர்வாக கட்டமைப்பில் பாரிய குறைப்பாடுகள் காணப்படுகின்றன.

சிறந்த நோக்கத்துடன் ஜனாதிபதி முன்னெடுத்த தீர்மானங்கள் ஒருசிலரால் அரச  பலவீனப்படுத்தப்பட்டுள்ளன, சேதன பசளை திட்டத்தை உரிய தரப்பினர் விவசாயிகள் மத்தியில் முறையாக கொண்டு செல்லவில்லை.

பொருளாதார ரீதியில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள போது மக்களின் வெறுப்பினை மேலும் தூண்டி விடும் வகையில் ஆளும் தரப்பினர் கருத்துரைத்தமை தற்போதைய நெருக்கடிகளுக்கு பிரதான காரணியாக அமைந்துள்ளது.

நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய எதிர்தரப்பினரது ஒத்துழைப்பு அவசியமானது. பெரும்பான்மை பலம் உள்ளது என்பதற்காக அனைத்தையும் சாதித்து விட முடியாது.

மக்களின் கருத்துகளுக்கும்,அபிலாசைகளுக்கும் அரசாங்கம் மதிப்பளிக்காவின் பொதுஜன பெரமுனவின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியலில் ரீதியில் உறுதியான தீர்மானத்தை முன்னெடுப்போம்.

எம்மை தெரிவு செய்த மக்களின் பக்கம் இருந்து அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு. மக்கள் எம்மை நோக்கி எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத அவலநிலைமை தற்போது தோற்றம் பெற்றுள்ளது என்றார்.