(நா.தனுஜா)

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமை அனைவருக்கும் இருக்கின்றது. 

எனவே சமூகவலைத்தளங்களை முடக்குவதையும், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோரைப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ்க் கைதுசெய்வதையும் இலங்கை ஆட்சியாளர்கள் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

 இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் நெட் ப்ரைஸ், அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைவரம் குறித்து தாம் மிகுந்த கரிசனையடைந்திருப்பதாக அப்பதிவில் குறிப்பிட்டுள்ள அவர், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கும் தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் அனைவருக்கும் உரிமை இருக்கின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 மேலும் கட்டுப்பாட்டுடன் செயற்படுமாறு அவர் இலங்கை அதிகாரிகளை வலியுறுத்தியிருப்பதுடன் சமூகவலைத்தளங்களை முடக்குவதையும், போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ்க் கைதுசெய்வதையும் தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

 அதேவேளை இதுகுறித்து இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்துள்ளார்.

 தற்போது இலங்கை அதன் வரலாற்றின் மிகமுக்கியமான தருணத்தில் இருக்கின்றது என்றும், மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்காகத் தமது குரலைப் பயன்படுத்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியான முறையில் செயற்படவேண்டும் என்றும் அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.

 அத்தோடு இலங்கை அரசாங்கம் அதன் மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு, விரைவில் அவற்றுக்கான தீர்வுகளை இனங்கண்டு நடைமுறைப்படுத்தவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.