(ரி.விரூஷன்)

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் 2011ஆம் ஆண்டு திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பொலிஸாரினால் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள் 7 பேரை எதிர்வரும் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க  யாழ்.மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் இவ்  வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஏழாவது சந்தேக நபர்  மன்றில் முன்னிலையாகாத நிலையில் குறித்த நபருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவினை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று (19) பிறப்பித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த புன்னாலைக்கட்டுவன் தெற்கு சுன்னாகத்தைச் சேர்ந்த ஸ்ரீஸ்கந்தராசா சுமன் என்ற நபர் 2011 ஆம் ஆண்டு உயிரிழந்திருந்தார்.

களவு தொடர்பான வழக்கொன்றில் கைதுசெய்யப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோதே இவர் உயிரிழந்தார்.இந்த நிலையில் சுமன் எனப்படும் சந்தேகநபர் பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற நிலையில் கிளிநொச்சி – இரணைமடுக்குளத்தில் வீழ்ந்து உயிரிழந்ததாக அப்போது பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.

எனினும் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது குறித்த நபர் மீது காவல்துறையினர்  தாக்குதல் நடத்தியதுடன் சித்திரவதைகளுக்கும் உட்படுத்தப்பட்டார் என்று அவருடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏனைய சந்தேகநபர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் குளத்திலிருந்து கைப்பற்றப்பட்ட சடலத்தில் தாக்குதல் நடாத்தப்பட்டமைக்கான அடையாளங்கள் காணப்பட்டமை பிரேத பரிசோதனைகளின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டிருந்த மை குறிப்பிடத்தக்கது.