இந்தியாவில் மணிப்பூரைச் சேர்ந்த 10 வயது சிறுமி, தன் 1 வயது தங்கையை மடியில் சுமந்தபடிபாடசாலை வகுப்பறையில் பாடம் படிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து, சிறுமியின் எதிர்காலமே மாறியுள்ளது.

வடக்கு மணிப்பூரின் டாமெங்லாங் மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுமி மெய்னிங்சின்லியு பாமெய், அதே பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலையில் நான்காம் வகுப்பு படிக்கிறார். இவருக்கு 1 வயதில் தங்கை உள்ளார்.

சிறுமியின் பெற்றோர் விவசாய கூலிகளாக உள்ளனர். எனவே வேலைக்கு செல்லும் அவர்களால் குழந்தையை உடன் எடுத்து செல்ல முடியாத நிலை உள்ளது.

இதனால் பாடசாலைக்கு செல்லும் சிறுமி, தன் தங்கையை சுமந்தபடி பாடசாலைக்கு செல்கிறார். அங்கு வகுப்பில் தங்கையை மடியில் துாங்க வைத்தபடி பாடங்களை கவனிக்கிறார்.

இந்த புகைப்படம், சமூக வலைதளங்களில் வெளியானது. சிறுமியின் பாசம், பொறுப்புணர்வு மற்றும் படிப்பின் மீதான ஆர்வத்தை கண்டு பலரும் வியந்தனர். 

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மாநில அமைச்சர் பிஸ்வஜித் சிங், தன் சமூகவலைதள பக்கத்தில் சிறுமியின் புகைப்படத்தை பகிர்ந்து வெளியிட்ட பதிவில், 

கல்வி மீதான சிறுமியின் அர்ப்பணிப்பு என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. சிறுமியின் குடும்பத்தினரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினேன். அவரை இம்பால் அழைத்து வருமாறு அவர்களிடம் தெரிவித்தேன். அந்த சிறுமி பட்டப்படிப்பு படித்து முடிக்கும் வரை அவரது கல்வி செலவை தனிப்பட்ட முறையில் ஏற்க முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.பெண் குழந்தைகள் இயல்பிலேயே தாய்மை உணர்வு உடையவர்கள் என்பது இந்த சம்பவத்தின் வாயிலாக மீண்டும் நிரூபணமாகி உள்ளது என தெரிவித்துள்ளார்.