நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக டீசலினை பெறுவதற்காக சனநெரிசலுடன் பல மணி நேரம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக திருகோணமலை மக்கள் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதி கிண்ணியாவிலுள்ள  எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் நேற்று (05) இரவு இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. 

வாகனங்கள் பல தூரம் வரை வீதி ஓரங்களில் நிறுத்தப்பட்டுள்ளதுடன் டீசலினை பெறுவதற்காக கேன்களும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசை கிரமமாக ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. 

நித்திரையின்றி பல மணி நேரம் காத்திருந்து எரிபொருளினை பெரும் சிரமத்துக்கு மத்தியில் பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். 

தொடர்ச்சியான இவ்வாறான தட்டுப்பாடு காரணமாக அன்றாட கடல் தொழில்  உள்ளிட்ட ஏனைய கைத்தொழில்களும் பாதிக்கப்படுவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர். 

நாட்டின் இவ்வாறான மோசமான நிலையில் இருந்து மீட்டெடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இதுவெனவும் மக்களால் எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.