சிறுபான்மையினங்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வளிப்பதற்கான சிபார்சுகளை செய்யக்கூடிய வகையில் சுயாதீன தேசிய ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படவேண்டுமென்ற ஸ்ரீலங்காக முஸ்லிம் காங்கிரஸின் பரிந்துரையை பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளதோடு அதுதொடர்பிலான செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களையும் நல்குவதாகவும் அறிவித்துள்ளது. 

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சிறுபான்மை இன விவகாரங்களை ஆராய்வதற்கான ஐக்கிய நாடுகள் சபையின்  விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியா நேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினரைச் சந்தித்த போது சிறுபான்மையினங்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வளிப்பதற்கான சிபார்சுகளை செய்யக்கூடிய வகையில் சுயாதீன தேசிய ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படவேண்டும் என பிரதான கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டிருந்தது. 

அக்கோரிக்கையை ஏற்றக்கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின்  விசேட அறிக்கையாளர் ரீட்டா தனது இறுதி அறிக்கையில் அதனை பரிந்துரை செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.  இந்நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இன்று  ஐக்கிய நாடுகள் சபையின்  விசேட அறிக்கையாளர் ரீட்டாவைச் சந்தித்திருந்தது. அதனைதொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்ட  கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குறித்த சுயாதீன தேசிய ஆணைக்குழு பரிந்துரை தொடர்பாக ஊடகவியலாளர்களால் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.