(நா.தனுஜா)
பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு உதவிகளை வழங்கும்போது, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் மக்களின் மனித உரிமைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கும் எரிபொருள் மற்றும் மின்சார விநியோகத்தில் இடையூறு ஏற்படுவதற்கும் பணவீக்கம் உயர்வடைவதற்கும் வழிவகுத்திருப்பதுடன் பெருமளவான மக்களை நெருக்கடிக்குள் தள்ளியிருக்கின்றது.
பொருத்தமான கடன்வழங்கல் செயற்திட்டம் தொடர்பில் இலங்கையுடன் வெகுவிரைவில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவிருப்பதாக கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியம் உறுதிப்படுத்தியிருந்தது. பாரிய பொருளாதார நெருக்கடியானது அண்மைய வாரங்களில் தலைநகர் கொழும்பு உள்ளடங்கலாக நாட்டின் பல பாகங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெறுவதற்கு வழிவகுத்திருப்பதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் உதவி அவசியம் என்பதையும் இது அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கின்றது. ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்தியதுடன் 36 மணிநேர ஊரங்குச்சட்டத்தை அமுல்படுத்தி, சமூகவலைத்தளங்களையும் முடக்கினார். அரசாங்கம் இந்த ஆர்ப்பாட்டங்களைக் கையாளும்போது பாதுகாப்புப்படைகளின் அநாவசியமான பயன்பாட்டைத் தடைசெய்யும் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு அமைவாக செயற்படவேண்டியது அவசியமாகும்.
இலங்கையின் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள் பெரும்பாலான மக்களின் பொருளாதார நிலைவரம் தொடர்பில் தெளிவான செய்தியை வழங்குகின்றது. எனவே இலங்கை அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியமும் மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் அதேவேளை, தற்போதைய நெருக்கடிகளுக்கான தீர்வை வழங்குவதை முன்னிறுத்திய பொது இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும்.
அதேபோன்று சர்வதேச நாணய நிதியமும் இலங்கை அரசாங்கமும் சமூகப்பாதுகாப்புடன் தொடர்புடைய செயற்திட்டங்களில் அதிக முதலீடுகளைச் செய்வதற்கு முன்னுரிமையளிக்கவேண்டும். அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டிற்கான வரவு, செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சிற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருந்ததுடன் (373.1 பில்லியன் ரூபா), கடந்த ஆண்டு பாதுகாப்பு அமைச்சிற்கு ஒதுக்கப்பட்ட நிதியைவிட இது அதிகமாகும். ஆனால் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு சுகாதார அமைச்சிற்குக் குறைந்தளவு நிதியே ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேலும் நிலைபேறானதும் அனைவரையும் உள்ளடக்கியதுமான பொருளாதார வளர்ச்சிக்கு ஊழல்மோசடிகள் தடையாக அமையும் என்பதை அங்கீகரித்து, அண்மைய வருடங்களில் ஊழல் ஒழிப்பில் சர்வதேச நாணய நிதியம் வெகுவாக அவதானம் செலுத்திவருகின்றது. அந்தவகையில் இலங்கையில் இடம்பெற்றுவரும் ஊழல்மோசடிகள் குறித்து அவதானம் செலுத்தும் வகையிலான மறுசீரமைப்புக்களை சர்வதேச நாணய நிதியம் மேற்கொள்ளவேண்டும். குறிப்பாக கடந்த 2019 ஆம் ஆண்டில் ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சிபீடமேறியதன் பின்னர் நிதியியல் ரீதியான வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை முடக்குவதற்கும் மலினப்படுத்துவதற்குமான பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
அடுத்ததாக கடந்த 2020 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தம் நீதிமன்றக்கட்டமைப்பின் சுயாதீனத்தன்மையில் பாதிப்பை ஏற்படுத்தியதுடன் தேசிய கணக்காய்வு அலுவலகம் மற்றும் இலஞ்சம, ஊழல்மோசடி விசாரணை ஆணைக்குழு ஆகியவற்றின் சுயாதீனத்தன்மையிலும் தாக்கம் ஏற்பட்டது.
இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த 2019 ஆம் ஆண்டில் சர்வதேச நாணய நிதியத்தினால் உள்வாங்கப்பட்ட சமூகம் சார்ந்த செயற்திட்டத்தின் ஊடாக சமூகப்பாதுகாப்புத்திட்டங்களில் அதிளவான முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்தவேண்டும். ஏற்கனவே வறுமை நிலையிலிருப்பவர்களைப் பாதிக்காத வகையிலான வரி அறவீட்டு முறைமையினை அறிமுகப்படுத்துவதற்கும் நீதிமன்றம், கணக்காணய்வாளர் நாயகம், சட்டமா அதிபர் மற்றும் இலஞ்சம், ஊழல்மோசடி விசாரணை ஆணைக்குழு உள்ளிட்ட அனைத்துக் கட்டமைப்புக்களிலும் அவசியமான மறுசீரமைப்புக்களை ஏற்படுத்துவதற்கும் சர்வதேச நாணய நிதியம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM