(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்தின் முடிவினை ஆரம்பிக்கும் வகையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் இன்றைய தினம் பாராளுமன்றில் தனது பெரும்பான்மை பலத்தை இழக்கும் என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை முழுமையாக இல்லாமல் போயுள்ளதால் அரசாங்கம் முழுமையாக பதவி விலக வேண்டும்.

அரசாங்கத்தின் இருப்பை தக்கவைத்துக்கொள்ள மாற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் அரசாங்கத்தின் 113 பெரும்பான்மை பலத்தை இல்லாதொழிப்போம் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்ஷா அரசாங்கத்திற்கு எச்சரிச்கை விடுத்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் 11 பங்காளி கட்சிகள் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு விடயங்களில் ஒன்றிணைந்து செயற்படுகின்றன.

இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இன்றைய தினம் பாராளுன்றில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகள் இனிவரும் காலங்களில் பாராளுமன்றில் எவ்வகையில் செயற்படும் என்பது தொடர்பில் இவ்வாரம் பாராளுமன்றில் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களின் வெறுப்பை முழுமையாக பெற்றுக்கொண்டுள்ள அரசாங்கத்துடன் தொடர்ந்து ஒன்றினைந்திருப்பது புத்திசாலித்தனமாக அமையாது.

அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாகியுள்ள போது அரசாங்கத்தில் இருந்து நாங்கள் விலகவில்லை.நெருக்கடியான சூழல் தோற்றம் பெறும்,தவறுகளை திருத்திக்கொள்ளுங்கள் என அரசாங்கத்திடம் சுமுகமாகவும்,அழுத்தமாகவும் பல முறை குறிப்பிட்டோம்.

அரசாங்கம் எமது கருத்துக்கு மதிப்பளிக்காத காரணத்தினால் அதனை மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்தினோம்.அப்போதும் அரசாங்கம் தவறை திருத்திக்கொள்ளவில்லை.

இன்று ஒட்டுமொத்த மக்களும் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றினைந்துள்ளார்கள்.தவறான ஆலோசனைகளின் பிரதிபலனை அரசாங்கம் அனுபவிக்கிறது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அரசாங்கத்தின் இறுதி அத்தியாயத்தை உறுதிப்படுத்தும் வகையில் இன்றைய தினம் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் பாராளுமன்றில் இல்லாதொழிக்கப்படும்.

அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம்  மூன்றில் இரண்டாக்கப்பட்டு பின்னர் முழுமையாக இல்லாதொழிக்கப்படும் என முன்னாள் அமைச்சர் உதயகம்மன்பில டுவிட்டர் பதிவில் பதிவேற்றம் செய்துள்ளார்.

நாட்டு மக்கள் அரசாங்கத்தை முழுமையாக புறக்கணிக்கிறார்கள் ஆகவே அரசாங்கம் முழுமையாக பதவி விலக வேண்டும்.

அரசாங்கம் அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்ள மாற்று நடவடிக்கைகளை முன்னெடுத்தால் அரசாங்கத்தின் 113 பெரும்பான்மை பலத்தை இல்லாது செய்வோம்.

இன்றைய தினம் பொதுஜன பெரமுனவின் 50 இற்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுன்றில் சுயாதீனமாக செயற்படுவார்கள் என முன்னாள் அமைச்சர் நிமல் லன்ஷா தெரிவித்தார்.